Published : 14 Aug 2020 06:48 am

Updated : 14 Aug 2020 06:48 am

 

Published : 14 Aug 2020 06:48 AM
Last Updated : 14 Aug 2020 06:48 AM

இந்தி பேசினால்தான் இந்தியரா?

hindi-imposition

நீங்கள் ஓர் இந்தியரா? சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் ஒன்றியத் தொழிலகக் காவல் படையைச் (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த ஒரு காவலர் இப்படிக் கேட்டிருக்கிறார். காரணம் கனிமொழிக்கு இந்தி தெரியவில்லை. இந்தச் சம்பவம் ஒரு பழைய விவாதத்தை மீண்டும் பொதுத்தளத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. அந்தக் காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கனிமொழி கேட்டுக்கொண்டிருக்கிறார். இது சரியானதுதான். ஒரு காவலரை மட்டும் குற்றப்படுத்துவது பிரச்சினைக்குத் தீர்வாக இராது. இந்தி பேசும் சிலரிடத்திலேனும் அப்படியான ஒரு கேள்வி தொக்கிக்கொண்டுதான் நிற்கிறது. தமிழர்கள் பலர் தமிழகத்துக்கு வெளியே இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள். என்னுடைய அனுபவங்கள் இரண்டைச் சொல்கிறேன்.

இரண்டு சம்பவங்கள்


முதல் சம்பவம் இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஹாங்காங்கில் மாங்காக் என்கிற மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள நடைபாதையில் எதிர்ப்பட்ட என்னிடம், ‘சுங் கிங் மேன்ஷனுக்கு எப்படிப் போக வேண்டும்?’ என்று அவர் இந்தியில் கேட்டார். எனக்குக் கேள்வி புரிந்தது. அவர் சுற்றுலாப் பயணி என்பதும் புரிந்தது. எனக்குப் பதிலும் தெரிந்திருந்தது. அவர் விசாரித்த வணிக வளாகம் பல்வேறு தேசிய இனங்கள், குறிப்பாகத் தெற்காசியர்களும் ஆப்பிரிக்கர்களும் கூடுமிடம். அவர் கேள்விகேட்ட இடத்திலிருந்து மெட்ரோ ரயிலைவிடப் பேருந்தில் போவதுதான் சுலபமானது. நான் அவருக்கு உதவ விரும்பினேன். ஆனால், அதை என்னால் ஆங்கிலத்தில்தான் சொல்ல முடியும். அதை அவரிடம் தெரிவித்தேன். இப்போது காவலர் கனிமொழியிடம் கேட்ட அதே கேள்வியைச் சுற்றுலாப் பயணி என்னிடம் கேட்டார். ஹாங்காங்கில் பல்வேறு நாட்டினர் வசிக்கிறார்கள். இலங்கை, வங்க தேசம் போன்ற தெற்காசிய நாட்டினருக்கும் இந்தியர்களுக்கும் உருவ ஒற்றுமை இருக்கும். என்னை அப்படியான அண்டை நாட்டுக் குடிமகன் என்று கருதியிருக்கலாம். நான் அக்மார்க் இந்தியன்தான் என்று பதிலளித்தேன். அவர் எனது பதிலில் அதிருப்தியுற்றிருப்பார்போல. என்னுடைய கடவுச்சீட்டில் நான் ஓர் இந்தியக் குடிமகன் என்று குடியரசுத் தலைவரே சான்றளித்திருக்கிறார். நண்பருக்கு அது பொருட்டில்லை. அவர் இரண்டாவது முறையாகக் காவலர் கேட்ட கேள்வியை என்னிடம் கேட்கவில்லை. ஆனால் அது அவரது முகத்தில் அழியாமல் தேங்கியிருந்தது. என்னுடைய ஆலோசனைக்குக் காத்திருக்காமல் அவர் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார்.

இரண்டாவது சம்பவமும் ஹாங்காங்கில் நடந்ததுதான். ஐந்தாண்டுகள் இருக்கும். ஒரு வெளிநாட்டு இந்தியர், தொழிலதிபர், இந்தியக் கட்டுமானத்தில் முதலீடு செய்ய விரும்பினார். ஹாங்காங்கின் நவீனக் கட்டுமான முறைகளைப் பார்வையிட வந்திருந்தார். அவருக்கு ஆலோசனை வழங்கிய நிறுவனம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். ஹாங்காங்கில் கட்டுமானத் துறையில் கட்டுப்பாடுகள் அதிகம். அதைப் பற்றித் தொழிலதிபர் கேட்டார். நான் பதில் சொன்னேன். அவர் உரையாடலை இந்தியில் நீட்டித்தார். நான் தணிந்த குரலில், “நாம் ஆங்கிலத்தில் பேசுவோம்” என்றேன். அந்த அறையில் அவரது உதவியாளர்களையும் என்னையும் தவிர இரண்டு சீனர்களும் ஓர் ஆங்கிலேயரும் இருந்தனர். “அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்” என்று தொழிலதிபர் பதிலளித்தார். நான், “எனக்கும் இந்தி தெரியாது” என்று சொன்னேன். தொழிலதிபர் ஆங்கிலத்துக்கு மாறிக்கொண்டார். அதற்கு முன் என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையில் காவலர் கனிமொழியிடம் கேட்ட கேள்வி இருந்தது. அப்படித்தான் நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர் ‘தமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?’ என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். உள்நாட்டு விமானங்களில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் அறிவிப்புகள் வெளியாவதைப் பற்றிய கட்டுரை அது. நிறைய எதிர்வினைகள் வந்தன. பாரதிராஜா, தங்கர்பச்சான் போன்ற பிரபலங்களும் இப்படியான ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதைச் சிலர் நினைவுகூர்ந்தார்கள். சிலர் தனியார் விமான நிறுவனங்களுக்கு இது குறித்து எழுதிய புகார்க் கடிதங்களையும், அதற்கு நிறுவனங்கள் எழுதிய சீனி தடவிய பதில்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலித் தமிழ்ச்சேவை என்னை நேர்கண்டது. பல தமிழ் உள்ளங்களில் இந்தக் குறை கனன்றுகொண்டிருப்பது புரிந்தது. அது சமீபத்தில் மீண்டும் நிரூபணமானது. கடந்த மாதம் சென்னையிலிருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழ் ஒலித்தது. ‘தற்போது நாம் கடல் மட்டத்துக்கு மேல் 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். தற்போது நமது வான்வெளிப் பாதையானது, அழகிய காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகரை நோக்கிச் செல்கிறது....’ பேசிய விமானி வடசென்னைக்காரர் விக்னேஷ். அந்தக் காணொலி வைரலானது. வாராதுபோல் வந்த மாமணியைத் தமிழ் நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

ஆதிக்க வெளிப்பாடு

இந்த இடத்தில் இன்னொரு துயரச் சம்பவத்தையும் சொல்ல வேண்டும். கடந்த வாரம் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியது. ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. விபத்துக்கான காரணங்களை ஆராயும் அந்தக் கட்டுரையில் நமக்குத் தெரிந்த ஒரு தகவலைச் சர்வதேச வாசகர்களுக்குச் சொல்கிறது. விமானத்தில் அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் இருந்தன. இது சிறப்பு விமானம். கொள்ளைநோய் இக்கட்டில் சிக்கிக்கொண்ட இந்தியர்களைத் தாயகத்துக்கு அழைத்துவரும் விமானம். பயணிகளில் பலரும் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்கள் பேசுவது மலையாளம். விமானத்தில் ஒலிபரப்பான பாதுகாப்பு அறிவிப்புகள் எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை.

நமக்குப் புரியும் மொழியில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் எதிர்பார்க்கிறோம். இந்தியர்கள் எல்லோருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று இந்தி பேசுபவர்களில் ஒருசாரார் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களில் ஹாங்காங் வந்த எளிய சுற்றுலாப் பயணியும் இருக்கிறார், பெரிய தொழிலதிபரும் இருக்கிறார், விமான நிறுவனத்தினரும் இருக்கிறார்கள், சென்னை விமான நிலையத்தில் கனிமொழியைக் கேள்வி கேட்ட காவலரும் இருக்கிறார். இது தனிப்பட்ட ஒருவரின் பிழையன்று. இது ஒரு ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு என்பதை இந்தியச் சமூகத்தின் அறிவாளர்கள் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது சீரிளமைத் தமிழும் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் இன்னபிற மொழிகளும் பேசுவோர் அனைவரும் இந்தியர்கள்தான் என்று எல்லோரும் உணர்வார்கள்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


இந்தி பேசினால்தான் இந்தியராஇந்தி மொழி திணிப்புஇந்தி மொழி எதிர்ப்புதமிழ் மொழிமும்மொழிக் கொள்கைபுதிய கல்வி கொள்கைநாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிஒன்றியத் தொழிலகக் காவல் படைHindi imposition

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x