Published : 11 Aug 2020 08:06 AM
Last Updated : 11 Aug 2020 08:06 AM

புதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது?-4

பி.எஸ்.கவின்

புதிய கல்விக் கொள்கையின் 9 முதல் 19 வரையிலான பதினோரு அத்தியாயங்களை உள்ளடக்கிய இரண்டாம் பகுதி, உயர் கல்வியைப் பற்றியது. உள்ளூர் அல்லது இந்திய மொழிகளில் பாடங்களைக் கற்பிக்கும் உயர் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக அமைப்புக்கு நகர்வதைப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று என 9-ம் அத்தியாயம் விவரிக்கிறது. இதன்படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சிகளை வளர்த்தெடுப்பதற்காகத் தேசிய ஆராய்ச்சி அமைப்பு நிறுவப்படும்.

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாகப் பல்கலைக்கழகங்கள் மாற்றியமைக்கப்படும் என்று 10-வது அத்தியாயம் கூறுகிறது. இதனால் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், மொழி ஆராய்ச்சி ஆகிய துறைகளுக்குச் சிறப்புப் பல்கலைக்கழகங்கள் இருக்கும் தற்போதைய நிலை மாற்றியமைக்கப்படும். கல்லூரிகளுக்கு படிப்படியாகத் தன்னாட்சி அதிகாரங்கள் அளிக்கப்படும். அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்குள் பல்கலைக்கழகத்தின் இசைவுபெற்ற கல்லூரிகள் என்ற தற்போதைய நடைமுறை படிப்படியாக நீக்கப்படும்.

பல்துறைக் கல்வி

உயர் கல்வியானது பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்று 11-ம் அத்தியாயம் வலியுறுத்துகிறது. பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் எப்போதும் அதிலிருந்து உள்நுழையவும் வெளியேறவும் வாய்ப்பளிக்கப்படும். முதலாண்டு படித்த மாணவர்களுக்குச் சான்றிதழும், இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்களுக்குப் பட்டயமும் இறுதியாண்டு, முடித்த மாணவர்களுக்கு இளநிலைப் பட்டமும் அளிக்கப்படும். அதே நேரத்தில், பல்துறைகளையும் உள்ளடக்கிய நான்காண்டு இளநிலைப் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வதற்கு முதுநிலைப் பட்டம் அல்லது ஆராய்ச்சியுடன் கூடிய நான்காண்டு இளநிலைப் படிப்பு போதுமானது. எம்.ஃபில் படிப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. பாரம்பரிய வகுப்பறை முறைகளுக்கும், திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கற்றல் முறைகளுக்கும் சமநிலை அளிக்கப்படும் என்கிறது 12-ம் அத்தியாயம். அதிக அளவிலான பன்னாட்டு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பன்னாட்டு மாணவர் அலுவலகம் செயல்படும். உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்தியாவில் செயல்படுவதற்கு வசதிசெய்து தரப்படும்.

பி.எட். படிக்கத் தகுதித்தேர்வு

உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் திறன் மற்றும் ஈடுபாட்டை வளர்த்தெடுப்பதற்கு அத்தியாயம் 13 பரிந்துரைக்கிறது. ஆசிரியர்களின் பணியிட மாற்றங்கள் தவிர்க்கப்படும். பணியில் சேர்க்கப்படும் ஆசிரியர்கள் தகுதிகாண் பருவத்தில் தங்களது செயல்திறனை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாயம் 14, கல்வி நிறுவனக் கட்டிடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடியவையாக உறுதிசெய்யப்படும் என்கிறது.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முறைகேடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் உரிய பலனை அளிக்கவில்லை என்பதைப் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்கிறது. அத்தகு கல்வி நிறுவனங்கள் தங்களது குறைபாடுகளைச் சரிசெய்துகொள்ள ஒரு வருட கால அவகாசம் அளிக்கப்படும். தவறுகளைச் சரிசெய்துகொள்ளத் தவறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது அத்தியாயம் 15.

2030-க்குள் தனியாக இயங்கும் அனைத்து ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும், அங்கு நான்காண்டு கால ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் நடத்தப்படும். நான்காண்டு பி.எட். படிப்பே பள்ளி ஆசிரியர் தேர்வுக்கான குறைந்தபட்சத் தகுதியாக இருக்கும். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வில் தகுதிபெற்றவர்களே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடியும். தற்போது ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் பணியில் சேர்வதற்கு மட்டுமே தகுதித் தேர்வு எழுத வேண்டியிருக்கிறது.

தொழிற்கல்விக்கு முக்கியத்துவம்

முதன்மைக் கல்வியோடு தொழிற்கல்வியை ஒருங்கிணைக்கும் பணிகள் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அடுத்துவரும் பத்தாண்டுகளில் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்கிறது 16-வது அத்தியாயம். அதற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலேயே தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும். உயர்நிலைப் பள்ளிகள் உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும். அத்தியாயம் 17, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார், சேவை அடிப்படையிலான நிறுவனங்களுடனும் சேர்ந்து இயங்கும் என்றும், இந்த அறக்கட்டளை தன்னாட்சியுடன் செயல்படும் என்றும் கூறுகிறது.

18-ம் அத்தியாயம் உயர் கல்விக்கான ஒழுங்குமுறை அமைப்புகளை மாற்றியமைப்பது தொடர்பானது. தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு, தேசிய தர நிர்ணயக் குழு, உயர் கல்வி மானியக் குழு, பொதுக் கல்விக் குழு ஆகிய நான்கு அமைப்புகளின் கீழ் அனைத்து உயர் கல்வித் துறைகளும் கொண்டுவரப்படும். இந்த நான்கு அமைப்புகளும் இந்திய உயர் கல்வி ஆணையத்தின் கீழ் இயங்கும். தற்போது செயல்பட்டுவரும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மாறாக, தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு செயல்படும். தற்போது இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக் குழு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்குத் தனித்தனியாக இயங்கும் ஆராய்ச்சிக் குழுக்களும் ஒழுங்குமுறை அமைப்புகளும் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகபட்சக் கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அத்தியாயம் 19, உயர் கல்வி நிறுவனங்களுக்கான தலைமைப் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது.

முக்கிய கவனப் பகுதிகள்

கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியவை பற்றி பகுதி 3-ன் கீழ் அடங்கியுள்ள 20 முதல் 25 வரையிலான ஐந்து அத்தியாயங்கள் விளக்குகின்றன. தொழிற்கல்வி பற்றிய அத்தியாயம் 20, தற்போதுள்ள விவசாயம், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் பல்துறைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என்கிறது. விவசாயக் கல்வி ஊக்குவிக்கப்படும். சட்டக் கல்வியில் ஆங்கிலத்துடன் உள்ளூர் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அலோபதி மருத்துவக் கல்வியில் பாரம்பரிய மருத்துவ முறைகள் பற்றிய அறிமுகம் இடம்பெறும்.

அத்தியாயம் 21, வயதுவந்தோர் கல்வியின் அவசியத்தையும் அதற்கான திட்டங்களையும் விளக்குகிறது. அத்தியாயம் 22, இந்திய மொழிகளையும் பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் நான்காண்டு பி.எட். படிப்புகள் அமைய வேண்டும் என்கிறது. பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படும். நான்காண்டு பி.எட். படிப்புகள் மூலம் நாடு முழுவதும் சம்ஸ்கிருத ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள். அத்தியாயம் 23, கல்விச் செயல்பாட்டில் நவீனத் தொழில்நுட்பத்தை எந்தெந்த வகைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சாத்தியங்களைப் பற்றியும் அத்தியாயம் 24, இணைய மற்றும் டிஜிட்டல் வழிக் கல்வியைப் பற்றியும் பேசுகின்றன.

செயல்படுத்துதலைப் பற்றிய பகுதி 4-ன் கீழ் அடங்கியுள்ள அத்தியாயம் 25, மத்திய கல்வி ஆலோசனைக் குழுவை வலுப்படுத்துவதைப் பற்றியும் அத்தியாயம் 26 கல்விசார் அரசு முதலீட்டை 6%-ஆக அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசுகின்றன. 27-வது அத்தியாயம் அடுத்த பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குள் இந்தக் கல்விக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த முறையில் அது செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட வரைவுடன் ஒப்பிடுகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்விக் கொள்கையில் இணைய வழிக் கல்வியின் அவசியம், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றி விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. இதற்கு, கரோனோ நோய்த்தொற்று பரவல் ஒரு காரணம். மற்றபடி, வரைவு குறித்து நடந்த விவாதங்களை இது பொருட்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x