Last Updated : 10 Aug, 2020 06:35 AM

 

Published : 10 Aug 2020 06:35 AM
Last Updated : 10 Aug 2020 06:35 AM

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைத் தள்ளிப் போடலாகாது

குழந்தைகளின் ஆரோக்கியம் காப்பதில் தடுப்பூசிகளுக்கு மகத்தான பங்கு உண்டு. தடுப்பூசிகளை முறையாகப் பயன்படுத்தினால் 27 தொற்றுநோய்களைத் தடுக்க முடியும். நாடு முழுவதிலும் 1985-லிருந்து நடைமுறையில் இருக்கும் சர்வதேசத் தடுப்பூசித் திட்டம் மற்றும் 2017-ல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசித் திட்டம் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் முழுமையாகத் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதிப்படுத்துவதையும், பாதுகாப்பான தாய்மைக்கு முன்னுரிமை அளிப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படுகின்றன. இப்போது நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கரோனா தொற்றுப் பரவலால், இந்தத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படாமல் தடைபட்டுள்ளன. இதன் விளைவால், தடுப்பூசிகளால் தடுக்கப்படக்கூடிய தொற்றுநோய்கள் மீண்டும் தலைதூக்கிவிடுமோ எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தடைகள் என்னென்ன?

பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிர்ப்பந்தம், பொதுப் போக்குவரத்து நிறுத்தம், மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா பரவிவிடுமோ எனும் பயம், தனியார் மருத்துவமனைகள் பலவும் மூடியுள்ள நிலைமை போன்ற பலதரப்பட்ட காரணங்களால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடத் தயங்குகின்றனர். இதே பொதுமுடக்கத்தால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசித் தயாரிப்பு, ‘குளிர் சங்கிலி’ப் பாதுகாப்பு, விநியோகம் ஆகியவற்றில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாநில சுகாதாரத் துறையினர் முன்பு பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் வழக்கம் இருந்தது. இப்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அந்தச் செயல்பாடு முற்றிலும் இயங்காமல் போய்விட்டது. கரோனா பயத்தில் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் அங்கன்வாடிகள், தெருச்சாவடிகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமானநிலையம் போன்ற இடங்களில் முகாமிட்டுத் தடுப்பூசி போடப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது சுகாதாரப் பணியாளர்களில் பெரும்பாலானோர் கரோனா தடுப்புப் பணிக்குச் சென்றுவிட்டதால், வீடுகளுக்குக் குழந்தைகளைத் தேடிச்சென்று தடுப்பூசி போடும் செயல்முறையும் நின்றுவிட்டது.

வீடற்றவர்களும் சாலையோரங்களிலும் பாலங்களின் அடியில் வசிப்போரும் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா. மலைவாழ் மக்களும் எஸ்டேட்டுகளில் பணிபுரிவோரும் இங்கு கணிசமாக இருக்கின்றனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும் சொந்த ஊர் தேடி மாநிலம் விட்டு மாநிலம் சென்றவர்களும் பல லட்சங்களைத் தாண்டும். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் சரிந்து, அன்றாட வாழ்வுக்கே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள எத்தனை பெற்றோர் தயாராக இருப்பார்கள்? இப்படிப் பல காரணங்களால் இந்தியாவில் தடுப்பூசித் திட்டங்கள் முன்புபோல் செயல்பட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

ஆபத்து என்ன?

கரோனா தொற்று காரணத்துக்காகக் குழந்தைகளுக்கு வழக்கமாகப் போடும் தடுப்பூசிகளைப் போடாமல் தவிர்த்தால், பத்துக்கும் மேற்பட்ட தொற்றுநோய்கள் உடனடியாகத் தாக்கும் வாய்ப்பு உண்டாகிறது; இது கரோனா பாதிப்பைவிடக் கொடுமையானது என்கின்றனர் வல்லுநர்கள். 2014-15ல் எபோலா வைரஸ் தொற்று பரவிய காலத்திலும் மக்கள் வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பெற்றோர் பலரும் முன்வரவில்லை. இதனால், எபோலா பரவிய லைபீரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில், அதற்கு அடுத்த ஆண்டில் தட்டம்மை, காசநோய், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்கள் படுவேகமாகப் பரவி அநேகக் குழந்தைகள் பலியானதை இங்கு நினைவுகூரலாம்.

அடுத்ததாக, வருடந்தோறும் 20-30 லட்சம் மரணங்கள் வழக்கமாகப் போடப்படும் தடுப்பூசிகள் மூலம் தடுக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பதில் தடுப்பூசிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. கரோனாவின் கொடுமை காரணமாக வழக்கமான தடுப்பூசித் திட்டங்கள் தடுமாற்றத்தில் இருப்பதால், அடுத்து வரும் ஆண்டுகளில் குழந்தைகளின் மரணங்கள் அதிகமாகிவிடக் கூடாதே எனும் அச்சமும், மறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போலியோ மறுபடியும் தழைத்துவிடக் கூடாதே எனும் பதற்றமும் அறிவியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

என்ன செய்யலாம்?

கரோனா பரவுவதால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடக் கூடாது என்பதில்லை. அட்டவணைப்படி கட்டாயம் போட்டுவிட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் ஆகும் குழந்தைகளுக்குப் பிறந்ததும் போடப்படும் தடுப்பூசிகளை இந்த கரோனா காலத்திலும் முறைப்படி போட்டுவிடுகின்றனர். மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதில்தான் சிக்கல். மொத்தமுள்ள தடுப்பூசிகளில் பிசிஜியை வேண்டுமானால் குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் போட்டுக்கொள்ளலாம், மற்ற தடுப்பூசிகளை அதிகபட்சம் 2 வாரங்களுக்குத் தள்ளிப் போட்டுக்கொள்ளலாம். அதற்கு மேல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இப்போது அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கென்றே ஒதுக்கியிருக்கிறார்கள். தற்போது மூடப்பட்டுள்ள பல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த ஏற்பாடு இருக்கிறது. அந்த நேரப்படி பெற்றோர் தங்கள் குழந்தையுடன் நேரில் சென்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

இது அரசுகளின் கவனத்துக்கு. கரோனா பரவல் தொடர்ந்து நீடிக்கும் இந்தக் காலகட்டத்தில், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத் தவறிய குழந்தைகளின் பட்டியலைச் சுகாதாரத் துறையினர் தயாரித்து, விடுபட்டுப்போன தடுப்பூசிகளைப் போடுவதற்கு உண்டான வழிமுறைகளையும், இந்தியா முழுவதும் ஒரே நாளில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற தேசம் தழுவிய தடுப்பூசித் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது போன்றவற்றையும் இப்போதே சிந்திக்க வேண்டும். காரணம், குழந்தைகளின் ஆரோக்கியப் பாதுகாப்பு என்பது நம் சமூகத்துக்கான பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தது.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x