Published : 09 Sep 2015 09:14 AM
Last Updated : 09 Sep 2015 09:14 AM

மெல்லத் தமிழன் இனி 2 - சட்டப்படி மதுக் கடைகளை மூடுவது எப்படி?

மதுவிலக்குக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதேசமயம், மதுக் கடைகளைச் சட்டப்படியும் மூடலாம் என்கிறார் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு. இதுவும் ஒரு போராட்டம்தான். சட்டப் போராட்டம். இதற்காகத் தரவுகளுடன் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதியிருக்கிறார். அதன் சுருக்கம் இது.

பொது இடங்களில் தொந்தரவு

மதுக் கடைகளை எங்கே வைக்கலாம் என்று முடிவுசெய்வது மாவட்ட ஆட்சியர்தான். ஒரு மதுக் கடை வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்குமிடத்திலிருந்து இத்தனை மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த விதிகளுக்கும் அப்பாற்பட்டு புதிய நிபந்தனை ஒன்றை உயர் நீதிமன்றம் கண்டுபிடித்தது. சென்னையில் பெண்கள் பள்ளி அருகில் மதுக் கடை ஒன்று இருந்தது. இதனால், பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் விளக்கம் கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர்களோ அந்த மதுக் கடை பள்ளியிலிருந்து 50 மீட்டர் தள்ளி இருப்பதாக குறிப்பிட்டார்கள்.

அப்போதுதான் உயர் நீதிமன்றம் ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. அந்த மதுக் கடை அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் கடந்த இரு ஆண்டுகளில் பதிவான வழக்குகள், (குறிப்பாக மாநகரக் காவல் சட்டம் பிரிவு 75(1)(பி)-ன் கீழ்) குற்ற விவரங்களைக் கேட்டு வாங்கியது. இதில் மதுக் கடையை ஒட்டி நடந்த வழக்குகளே 10-க்கும் மேல் இருந்தது. பொது இடங்களில் சட்ட விரோதத் தடைகள் அல்லது தொந்தரவுகள் இருந்தால் காவல் நிலைய அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட குற்றவியல் நடுவர் (ஆட்சியர்) தொந்தரவுகளை நீக்க உத்தரவிடலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ம் பிரிவு கூறுகிறது. அதன் அடிப்படையில், அந்தக் கடை அகற்றப்பட்டது.

இந்த வகையில் வழக்கு தொடர்வதற்கு முன்பாக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும். குறிப்பிட்ட மதுக் கடை இருக்கும் பகுதியில் ஏற்படும் பொதுத் தொந்தரவுகள், குற்றங்களை ஆவணப்படுத்த வேண்டும். தொடர்ந்து அந்தப் பகுதியின் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வேண்டும். புகார் மனுக்களின் நகல்களும், அதற்கான ரசீதும் அவசியம்.

இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுக் கடைகளுக்கு அருகே நடந்த குற்றச் சம்பவங்கள், பொதுத் தொந்தரவுகள் குறித்து எழுதி, கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்குப் பதிவுத் தபாலில் மனு அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அந்த மதுக் கடையை அகற்ற அரசியலமைப்புச் சட்டம் 226-ன் பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

சாலை விபத்துகள்

சாலை விபத்துகள் அதிகரிப்பதால், நெடுஞ்சாலைகளை ஒட்டி மதுக் கடைகளை அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி நெடுஞ்சாலைகளை ஒட்டி மதுக் கடைகள் இருந்தால், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

உள்ளாட்சி மன்றத் தீர்மானம்

உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகளை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாலும் கடைகளை அகற்ற முடியும். அதன்படி, மக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை அணுகி அவர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை நாடலாம்.

செலவுக்கு என்ன செய்வது?

இதற்கெல்லாம் நிறைய செலவாகுமே என்று கேள்வி எழலாம். தங்கள் பகுதியில் சமூகப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களை அணுகலாம். உயர் நீதிமன்றங்களிலும் அப்படியான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இல்லை எனில், நீதிமன்றங்களின் அமர்வுகளில் இருக்கும் சட்ட உதவிக் குழுவை அணுகலாம். இலவசச் சட்ட உதவி பெறும் நபருக்கு வருமான தகுதி இருகிறதா என்பதற்கான விதிகளும் உண்டு. ஆனால், பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் விதிவிலக்கு உண்டு. அத்தகைய நபர்கள் மூலம் வழக்குத் தொடர முயற்சிக்கலாம்.

இப்படியாக விவரிக்கிறது அந்தப் புத்தகம்.

தெளிவோம்…

- டி.எல்.சஞ்சீவிகுமார்

- தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x