Published : 03 Aug 2020 16:19 pm

Updated : 03 Aug 2020 17:20 pm

 

Published : 03 Aug 2020 04:19 PM
Last Updated : 03 Aug 2020 05:20 PM

பாஜகவின் அடுத்த குறி சத்தீஸ்கரா?- தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும் காங்கிரஸ்

is-chattisgarh-the-bjp-s-next-target-congress-ready-to-defend-itself
பூபேஷ் பகேல்

ராஜஸ்தானில் பாஜகவின் காய் நகர்த்தல்களிலிருந்து காங்கிரஸ் அரசு தப்புமா என்று பேசப்பட்டுவரும் சூழலில், பாஜகவின் அடுத்த குறி சத்தீஸ்கராக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான ஒரு சூழலில், தன்னால் இயன்ற அளவுக்குத் தற்காப்பு வியூகங்களில் இறங்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல். “என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் விழிப்புடன் இருக்கிறேன்” என்று பூபேஷ் கூறியிருப்பது அவரது ஜாக்கிரதை உணர்வைக் காட்டுகிறது.

பாஜக வலை
தற்போது சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி மிச்சமிருக்கிறது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிராஆகிய மாநிலங்களில் ஆளும் கூட்டணியில் அக்கட்சி அங்கம் வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை வளைத்து காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது பாஜக. ராஜஸ்தானிலும் சச்சின் பைலட் மூலம் காங்கிரஸ் அரசுக்குக் கடும் சவாலை உருவாக்கியிருக்கிறது.


இந்தச் சூழலில், பாஜகவின் அரசியல் நகர்வுகளுக்குப் பொருத்தமான பதில் நடவடிக்கைகளை எடுத்து மாநில அரசுகளைத் தக்க வைப்பது என்பது காங்கிரஸுக்குக் கடும் சவாலாக உருவாகியிருக்கிறது. தற்சமயம், சத்தீஸ்கர்தான் இந்த யுத்தத்தில் முக்கியமான களமாகப் பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. காங்கிரஸுக்கு 69 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 14 உறுப்பினர்களும் உள்ளனர். இதுதவிர, ஜனதா காங்கிரஸ் (ஜே) சார்பில் 4 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஜனதா காங்கிரஸ் (ஜே) கட்சித் தலைவரும் மர்வாஹி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அஜீத் ஜோகி மரணமடைந்துவிட்டதால், அந்தத் தொகுதி காலியாக இருக்கிறது.

பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. இப்படியான சூழலில், 25 காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுத்து, ஜனதா காங்கிரஸ் (ஜே), பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டால் பாஜக வசம் ஆட்சி வந்துவிடும். அந்த முயற்சியை பாஜக எப்போது தொடங்கும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. எனினும், அதற்கு முன்னதாகவே சுதாரித்துக்கொண்டிருக்கிறார் பூபேஷ்.

தற்காப்பு உத்திகள்
ராஜஸ்தான் காங்கிரஸில் பூகம்பம் வெடித்தபோதே அது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பூபேஷ், “வாஜ்பாய், அத்வானி காலத்து அரசியல் தற்போது இல்லை. இப்போது பாஜகவில் அறமோ, விழுமியங்களோ இல்லை” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், “அதிகாரப் பசி கொண்ட பாஜக எங்கும், எதையும் செய்யும்” என்றும் விமர்சித்தார். அடுத்து, தனது அரசு குறிவைக்கப்படலாம் என்பதை உணர்ந்த அவர், கட்சிக்குள் அதிருப்தி அலைகள் உருவாகிவிடாமல் தடுக்கும் வேலைகளில் இறங்கினார்.

அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் - துணைத் தலைவர் பதவிகள், ‘பார்லிமென்ட் செகரட்டரி’ பதவி என காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்குப் பல்வேறு பதவிகளை அள்ளி வழங்கினார். ராஜஸ்தான் பிரச்சினை தொடங்குவதற்கு முன்பே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும், இது தொடர்பாக சோனியா காந்தியிடம் ஏற்கெனவே பேசியிருந்ததாகவும் பூபேஷ் விளக்கம் சொன்னாலும், இவை அனைத்தும் பாஜகவின் வியூகங்களைத் தடுக்கும் முயற்சிகள் என்றே கருதப்பட்டன.

அத்துடன், பாஜக பக்கம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சாய்ந்துவிடாத வகையில் அவர்கள் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் செயல்படுபவர்களின் நகர்வுகளைக் கண்காணிக்க ஒரு குழுவையே உருவாக்கியிருக்கிறார்.

பக்தி அரசியல்
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், பாஜக தரப்பு உற்சாகமடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், ராமரின் தாயான கவுசல்யாவின் கோயிலைப் பிரம்மாண்டமாக விஸ்தரிக்கும் பணிகளை சத்தீஸ்கர் அரசு தொடங்கவிருக்கிறது.

அத்துடன் 50-க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலங்களை ரூ.137.45 கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தை பூபேஷ் அரசு தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே ராய்ப்பூர் அருகில் உள்ள சந்திரகுரியில் உள்ள கவுசல்யா கோயிலை விஸ்தரித்து, ஒரு சுற்றுலா மையம் போல உருவாக்கும் பணிகளில் அவரது அரசு இறங்கியிருக்கிறது. ஜூலை 29-ம் தேதி அங்கு நடந்த பூமி பூஜையில் பூபேஷ் கலந்துகொண்டார்.

ஆனால், ராமர் கோயில் கட்டப்படுவதால் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியை நகலெடுக்கும் நடவடிக்கைதான் இது என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். “2019 டிசம்பர் 16-ம் தேதியே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. அப்போது முதல்வர் பூபேஷ் அதில் கலந்துகொள்ளவில்லை. இப்போது ஏன் அங்கு சென்று பூமி பூஜை நடத்தினார்? இதிலிருந்தே காங்கிரஸின் நோக்கம் தெரிகிறது” என்கிறார்கள் பாஜக தலைவர்கள்.

ஆனால், “ராமரின் பெயரால் அரசியல் நடத்தும் பாஜகவினர், அவரது தாயின் கோயிலைச் சரியான முறையில் பராமரிக்காதது ஏன்? சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாஜக ஏன் இதைக் கண்டுகொள்ளவில்லை” என்று காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

பூபேஷ் மென்மையான இந்துத்துவ பாணி அரசியலைக் கைக்கொண்டிருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு உண்டு. ‘கோதான் நியாய் யோஜனா’ எனும் பெயரில் பசுக்களின் சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்திருக்குகிறது பூபேஷ் அரசு. அதேபோல், பசுக்களுக்கான பராமரிப்பு மையங்களையும் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை அளிக்கும் தைரியம்?
இப்படி பதில் நடவடிக்கைகள், தற்காப்பு உத்திகள் என்று பூபேஷ் எடுத்துவரும் முயற்சிகளுக்குக் கட்சித் தலைமை அளிக்கும் சுதந்திரம்தான் காரணமா என விவாதிக்கப்படுகிறது.

‘மாநிலத் தலைவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தலைமையின் ஆலோசனையைக் கேட்க வேண்டியதில்லை; பிரச்சினையின் தன்மைக்கேற்ப அவரவர் முடிவெடுத்துக்கொள்ளும் அளவுக்குச் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கலாம்’ என்று சோனியா காந்தி கருதுவதாகத் தெரிகிறது.

ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய அடுத்த தலைமுறைத் தலைவர்களாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவும், சச்சின் பைலட்டும் கட்சிக்கு எதிராகவே திரும்பியது காங்கிரஸைக் கவலையில் தள்ளியிருக்கிறது. வாழ்வா சாவா எனும் அளவுக்குச் சூழல் மிகக் கடுமையானதாக மாறியிருப்பதால் மாநிலத் தலைவர்களுக்கு இப்படியான சுதந்திரமும் ஊக்கமும் தருவதற்குக் காங்கிரஸ் தலைமை முன்வந்திருப்பதாகவே இதைக் கருத முடிகிறது.

அதனால்தான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தனது பலத்தைப் பெருக்கிக்கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா உத்திகளையும் பயன்படுத்தலாம் என காங்கிரஸ் தலைமை ஊக்கம் வழங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, பூபேஷின் பதிலடி நடவடிக்கைகளையும் பார்க்க முடிகிறது.

எந்தப் பிரச்சினை தொடர்பாக பாஜக தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தாலும், ‘15 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று பதில் கேள்வியைச் சத்தீஸ்கர் காங்கிரஸ் தயாராகவே வைத்திருக்கிறது.

ஆனால், போதுமான காலத்தை எடுத்துக்கொண்டு தகுந்த சந்தர்ப்பம் வரும்போது அதிரடி காட்டும் உத்தியை பாஜக பல முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறது. சத்தீஸ்கரில் அதைப் பயன்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

தவறவிடாதீர்!


ChhattisgarhBJPCongressபாஜகசத்தீஸ்கர்காங்கிரஸ்பூபேஷ் பகேல்சோனியா காந்திஎம்எல்ஏக்கள்ஆட்சி மாற்றம்ஆளும் கூட்டணிஅடுத்த குறிபக்தி அரசியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x