Published : 30 Jul 2020 06:44 AM
Last Updated : 30 Jul 2020 06:44 AM

கேரளத்தை ஆட்டுவிக்கும் மஞ்சள் பிசாசு

பினராயி விஜயன் இப்படியொரு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். கடந்த மாதம் வரை நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், ஊரடங்கைத் தளர்த்தும் முயற்சிகளுக்காகவும் முன்னுதாரணமாகப் பேசப்பட்ட கேரளம், இன்று தங்கக் கடத்தலை முன்னிட்டு சந்தி சிரிக்கிறது. அரசியல் களத்தில் மஞ்சள் பிசாசின் நர்த்தனம். மாநிலத்தின் மக்கள் பிரச்சினைகள் எதுவென்றாலும் ஆளுங்கட்சியோடு கைகோத்து நிற்கும் கேரள எதிர்க்கட்சிகள் அரசியல் போட்டியில் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக்கொடுக்காது. தங்கக் கடத்தலுடன் கேரள முதல்வர் அலுவலகத்துக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி காங்கிரஸ் கட்சியோடு பாஜகவும் வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்துவருகிறது.

கேரளத்துக்கும் தங்கக் கடத்தலுக்குமான உறவு எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். சுங்க வரித் துறையின் சோதனையில் அடிக்கடி கடத்தல் தங்கம் கைப்பற்றப்படுவது அங்கு வழக்கமாக இருந்துவரும் ஒன்று. 2017-ல் தொடங்கி 2020 ஜூலை வரையில் கேரளத்தில் 932 கிலோ தங்கம் சுங்க வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது இன்னும் பெரிய அளவில் இருக்கக்கூடும். ஆனால், தற்போது கைப்பற்றப்பட்டிருப்பது தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பொருட்களின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பதோடு, இந்தக் கடத்தலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் முதல்வர் அலுவலக அதிகாரிகளோடு நெருங்கிய வட்டத்தினர் என்பதாலும்தான்.

முதல்வர் மீதும் பாய்கிறது

திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்துக்கு விமானம் வழியாக அனுப்பப்பட்ட ப்ளம்பிங் சாதனங்களுக்குள் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சுங்க வரித் துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு ரூ.14.82 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்ள முயன்ற ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் பணியாற்றியவர் என்பதோடு, முதல்வரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரை அடிக்கடி சந்தித்துவருகிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. செயலாளர் மீதான குற்றச்சாட்டையடுத்து, அவரைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்திருக்கிறார் பினராயி விஜயன். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் முதல்வரின் செயலாளர் மீதான சந்தேகத்தை முதல்வர் மீதும் எழுப்பி, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

தங்கக் கடத்தலின் வலைப் பின்னல் மிகவும் விரிந்தது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கத்தை விமானங்களில் கடத்திவருபவர்கள், அதை அனுமதிக்கும் சுங்கத் துறை அதிகாரிகள், அவர்களோடு தொடர்பில் உள்ள செல்வாக்கு படைத்த பெரும்புள்ளிகள், கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு விற்பவர்கள் என்று ஏகப்பட்ட பேர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுங்க வரித் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு இவையெல்லாம் தெரியாதா என்றால் தெரியும்தான். வெளிநாடுகளிலிருந்து டெல்லியோ மும்பையோ வந்து, அங்கிருந்து உள்நாட்டு விமானச் சேவைக்கு மாறும் விமானங்களே இந்தக் கடத்தலின் முக்கியத் தளங்கள் என்பது சுங்க வரித் துறையினருக்குத் தெரியாதா என்ன? அப்படியிருந்தும் ஏன் அவர்கள் அனுமதிக்கிறார்கள்?

காரணங்கள் மூன்று

முக்கியமாக, பன்னாட்டு விமானச் சேவைகளின் பாதுகாப்பு குறித்த பயணிகளின் நம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடாது. பாதுகாப்பு என்ற அம்சத்தோடு ஒப்பிடுகையில், தங்கக் கடத்தல் எல்லாம் சில்லறை விஷயங்களாகவே இருக்கின்றன. இரண்டாவதாக, தங்கக் கடத்தலை முழுமையாகத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு சுங்க வரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் அலுவலர்களின் எண்ணிக்கை போதாது. மூன்றாவது, தங்களது ஜீரண மண்டலம் சீர்கெட்டு, ஆயுள் வரைக்கும் அதன் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தே உடலுக்குள் தங்கத்தை மறைத்துவருபவர்கள் வெறும் கருவிகள் மட்டுமே. அவர்களுக்கு இந்தச் சட்டவிரோதச் செயல்களால் மிகச் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும், அவர்களை இயக்கும் மாயக்கரங்களைக் கண்டறிவதோ, சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதோ அவ்வளவு எளிதல்ல. இப்படி சுங்க வரித் துறை அமைப்பின் பல்வேறு பலவீனங்களோடும்தான் தங்கக் கடத்தல் தொடர்கிறது.

கேரளத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் தங்கக் கடத்தல் நடக்கத்தான் செய்கிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி சோதனையில் கடத்தல் தங்கம் பிடிபடுவது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், கேரளத்தைப் பொறுத்தவரையில் இது நீண்ட காலமாகவே நடந்துவருகிறது. கேரளத்தின் தங்கத் தலைநகரமாக வர்ணிக்கப்படும் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியில் சிறு வியாபாரிகள் சிலர் கடத்தல் தங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற பேச்சும் உண்டு. பெரிய அளவிலான நகை நிறுவனங்கள், சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் தங்கத்தைப் பயன்படுத்தினால் அந்த விவரங்கள் இருப்புக் கணக்கில் வெளியே தெரிந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, விற்பனை வரியைத் தவிர்த்து ஆபரணங்கள் வாங்குபவர்களே இந்த தங்கக் கடத்தலின் பிரதான இலக்குகள்.

களைகட்டும் தேர்தல்

தங்கக் கடத்தலை இயக்குவிக்கும் மாயக் கரங்கள் முதல்வர் அலுவலக அதிகாரிகள் வரைக்கும் தொடர்பில் இருக்கின்றன என்பதே தற்போது கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெரியவந்திருக்கும் முக்கியச் செய்தி. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது என்பதால், எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. கரோனா காலகட்டத்தின் தொடக்கத்திலேயே தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுகாதார அமைச்சரின் வீராவேசப் பேச்சைச் சுட்டிக்காட்டியும், சைலஜா டீச்சர் அவ்வளவு வேகமாக இல்லையென்றும் கேரள காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அனல் கிளப்பினார்கள். தமிழ்நாடு அளவுக்கு கேரளத்தில் கரோனா சோதனைகள் நடத்தப்படவில்லை என்று ரமேஷ் சென்னிதலா இப்போதும்கூட குற்றஞ்சாட்டிவருகிறார். அவர் தங்கக் கடத்தல் விவகாரத்தைத் தவறவிட மாட்டார்.

தேசியப் புலனாய்வு முகமையும் அமலாக்கத் துறையும் உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வழக்கில், மத்திய அரசு காட்டும் அக்கறையும் ஒரு காரணம். அதே நேரத்தில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கை விசாரித்துவரும் தேசியப் புலனாய்வு முகமை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி திரட்டப்பட்டதாகவும் இவ்வழக்கில் குறிப்பிட்டிருக்கிறது. தங்கக் கடத்தலோடு தொடர்புடையவர்களை அடையாளம் கண்டறிந்து அம்பலப்படுத்தினாலே பெரிய சாதனை. அதே வேளையில், குற்றவாளிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்று நிரூபிக்க முடியாவிட்டால் அது வழக்கைப் பலவீனப்படுத்திவிடக்கூடும் என்றும் விவாதங்கள் நடக்கின்றன. தமிழகத்துக்கு முன்பே கேரளத்தில் தேர்தல் களைகட்டிவிட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x