Published : 28 Jul 2020 07:50 AM
Last Updated : 28 Jul 2020 07:50 AM

ராவ்: இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை

narasimha-rao

ராஜீவ் காந்தியின் துயரகரமான மரணத்துக்குப் பிறகு அந்த அரசு அமைந்தது. நரசிம்ம ராவ் அரசின் பட்ஜெட்டில் ராஜீவ் காந்தியைக் குறிப்பிடுகையில் நான் இப்படிச் சொன்னேன்: “அவர் தற்போது நம்மிடையே இல்லை. ஆனால், அவருடைய கனவு இன்னும் உயிருடன் இருக்கிறது; அதாவது, இந்தியாவை 21-ம் நூற்றாண்டை நோக்கி வழிநடத்தும் கனவு; வலுவான, ஒற்றுமையான, தொழில்நுட்பரீதியில் மேம்பாடடைந்த, அதே நேரத்தில் மனிதத்துவம் கொண்ட இந்தியாவைப் பற்றிய கனவு.”

இந்தியாவைப் பல வகைகளிலும் மாற்றியமைத்த பட்ஜெட் அது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கும் தாராளமயமாக்கலுக்கும் அது வழிவகுத்தது. அது கடினமான தெரிவாகவும் துணிச்சலான முடிவாகவும் இருந்தது. அதையெல்லாம் மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை நரசிம்ம ராவ் எனக்குத் தந்திருந்ததால்தான் அதெல்லாம் சாத்தியமானது. ஏனெனில், இந்தியப் பொருளாதாரம் அந்தச் சமயத்தில் ஏன் தள்ளாடிக்கொண்டிருந்தது என்பதை அவர் முழுவதும் அறிந்திருந்தார். இந்தச் சீர்திருத்தங்களை முன்செலுத்துவதற்கான துணிவும் பார்வையும் கொண்டிருந்த அந்த மனிதருக்கு எனது தாழ்மையான மரியாதையை அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் செலுத்துகிறேன்.

ராஜீவ் காந்தியைப் போல நரசிம்ம ராவும் இந்நாட்டின் ஏழை எளியோர் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தார். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களெல்லாம் “இந்திய அக்கறைகளை மனதில் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று சர்வதேச நிதியத்தின் அப்போதைய மேலாண் இயக்குநர் மைக்கேல் கேம்டெஸஸிடம் நரசிம்ம ராவ் கூறினார். பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு முன்பு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அந்தத் திசையில் சில காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கும் முன்பே, இந்திரா காந்தியும் நமது பொருளாதாரக் கொள்கைகளை வேறு திசையில் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஆனால், உண்மையில் கடினமான முடிவுகளை 1991-ல்தான் எடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில், அப்போது நாம் அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தோம். அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வார கால அளவுக்குத்தான் இருந்ததால் நாடே செங்குத்தான மலையுச்சியின் விளிம்புக்கு வந்ததுபோல் ஆகிவிட்டது.

ஆனால், சவாலான அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு கடினமான முடிவுகளை எடுக்க முடியுமா என்று அரசியல்ரீதியிலான பெரும் கேள்வி நம் முன் அப்போது இருந்தது. அந்த அரசு இப்போதோ அப்போதோ கவிழும் நிலையில் இருந்த சிறுபான்மை அரசு என்பதையும் அது நிலைத்து நிற்பதற்கு வெளியிலிருந்து ஆதரவு தேவைப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி இருந்தும், நரசிம்ம ராவ் தனது நம்பிக்கையை அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்து அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்திக்கொண்டார். அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருந்ததால் அவரது லட்சியத்தை முன்னெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன்.

ஒரு எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டால் உலகின் எந்தச் சக்தியாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிடுவார் விக்தோர் ஹ்யூகோ. இந்தியா ஒரு பெரிய பொருளாதாரச் சக்தியாக உருவெடுப்பதும் அப்படிப்பட்ட ஒரு எண்ணம்தான். கடினமான பயணம் முன்னே காத்திருந்தாலும் இந்தியா முழு விழிப்புணர்வைப் பெற்றுவிட்டது என்று உலகுக்கே தெளிவாகவும் உரக்கவும் அறிவிக்க வேண்டிய தருணம் அது. அப்புறம் என்ன நடந்தது என்பது வரலாறு. பின்னோக்கிப் பார்க்கையில் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை என்று நரசிம்ம ராவை உண்மையிலேயே அழைக்கலாம்.

தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் பிறந்த நரசிம்ம ராவ், சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒரு நீண்ட, நெடிய அரசியல் பயணத்தில் ஈடுபடத் தொடங்கினார். எம்.எல்.ஏ-வாக 1957-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1962-ல் அமைச்சரானார், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக 1971-1973 வரை இருந்தார். அந்த மாநிலத்தில் மிகவும் முனைப்புடன் நிலச்சீர்திருத்தங்களைச் செய்தார். அதன் பிறகு, பல்வேறு முக்கியமான துறைகளைக் கையில் வைத்திருந்த மத்திய அமைச்சராக இருந்தார். மனிதவளத் துறை அமைச்சராக 1985-88 வரை இருந்தபோது, 1986-ல் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவர அவர்தான் காரணமாக இருந்தார். நாடெங்கும் ஜவாஹர் நவோதயா பள்ளிகளைக் கொண்டுவருவதற்கான சாத்தியத்தை அது விதைத்தது; கிராமப்புறங்களிலிருந்து சிறந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவர இது உதவியது. வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது கூரிய ஞானம் பேருதவி புரிந்தது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்த நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார். 1991 மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோதே, ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, காங்கிரஸின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி 244 தொகுதிகளை வென்றது. நரசிம்ம ராவ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸ் தலைவராக இருந்ததால் ஜூன் 21, 1991-ல் அவர் பிரதமரானார். அந்த நாளில்தான் அவர் என்னை அவரது நிதி அமைச்சராக ஆக்கினார்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களும் தாராளமயமாக்கலும் உண்மையில் அவரது பெரும் பங்களிப்புகள்தான், எனினும் நாட்டுக்குப் பல்வேறு துறைகளிலும் அவர் செய்திருக்கும் பங்களிப்புகளையும் குறைத்து மதிப்பிட்டுவிடலாகாது. வெளியுறவுத் துறையில் சீனா உட்பட நமது அண்டை நாடுகளுடன் உறவு மேம்படுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். சார்க் நாடுகளுடன் சேர்ந்து ‘தெற்காசிய அனுகூல வணிக ஒப்பந்த’த்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்தியாவையும் கிழக்காசிய நாடுகளையும் தென்கிழக்காசிய நாடுகளையும் இணைப்பதற்கான ‘கிழக்கைப் பாருங்கள் கொள்கை’யும் அவரது சிந்தனையில் உதித்ததே.

அவர் பிரதமராக இருந்தபோதுதான் ‘பெரிதாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனம்’ (ஏ.எஸ்.எல்.வி.), ‘துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம்’ (பி.எஸ்.எல்.வி.) ஆகியவை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதால் இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் உந்துதல் கிடைத்தது. பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பிரித்வி ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இந்தியா புதிய அணியில் சேரும் வகையில் அணு ஆயுதப் பரிசோதனைகளுக்குத் தயாராகும்படி 1996-ல் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை அவர் கேட்டுக்கொண்டார். அந்தத் திட்டம்தான் 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலில் அது மிகவும் கடினமான காலம். அவருடைய எதற்கும் அலட்டிக்கொள்ளாத குணமும் அரசியல் சாமர்த்தியமும் எப்போதும் வாத விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் வகையில் வெளிப்படையாகவே அவர் இருந்தார். அவர் எப்போதும் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையையும் பெற முயன்றார். சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்க வேண்டுமென்றால், ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐ.நா.வில் பாகிஸ்தான் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொள்வதற்கு இந்தியாவிலிருந்து சென்ற குழுவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாயை நரசிம்ம ராவ் நியமித்தார்; பாகிஸ்தானின் தீர்மானம் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. தொழிலாளர் தரம் மற்றும் சர்வதேச வணிகத்துக்கான தலைவராக சுப்பிரமணியன் சுவாமியை காபினெட் அமைச்சருக்கு இணையான பொறுப்புடன் நியமித்தார்.

அவர் 10 இந்திய மொழிகளை நன்கு அறிந்தவர், வெளிநாட்டு மொழிகள் நான்கை அறிந்தவர், அறிஞர் என்ற வகையில் பன்மொழியாளராகத் திகழ்ந்தார். புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிய முதலாமவர்களில் அவரும் ஒருவர். கணினியை மிகவும் திறம்படக் கையாண்டதுடன் கணினி திட்டநிரலியை (புரோகிராமிங்) உருவாக்குவதிலும் திறன் மிக்கவராக விளங்கினார். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு அவர் தயாராக இருந்ததால்தான் இது சாத்தியம் ஆயிற்று.

மாபெரும் தலைவரும், எனது நண்பரும், தத்துவ அறிஞரும் பல வகைகளில் எனக்கு வழிகாட்டியுமான நமது முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களின் நினைவுக்கு நான் மறுபடியும் எனது அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.

ஜூன் 28: நரசிம்மராவ் நூற்றாண்டு தொடக்கம். இதைக் கொண்டாடும் விதமாக, தெலங்கானா காங்கிரஸ் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் இது.

தமிழில்: ஆசை


இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தைநரசிம்ம ராவ்முன்னாள் பிரதமர் ராவ்பொருளாதாரச் சீர்திருத்தம்மன்மோகன் சிங்Narasimha rao

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author