

இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் தினம்தான் இன்றைய ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் வழியே முஸ்லிம் உம்மத்திற்கு அறிமுகம் செய்த இரு பெருநாட்களில் ஒன்று இது. இதனை ஹஜ்ஜுப் பெருநாள் எனவும் அழைக்கலாம். இறைவன் தனது தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாக உணர்வை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டே இப்றாஹீம் (அலை) அவர்களது புதல்வர், பாலகர் இஸ்மாயீல் அவர்களை தனக்காக பலியிட கனவின் மூலம் அறிவுறுத்துகிறான். இப்றாஹீம் (அலை) அவர்களும் அதனையேற்று தனது மகனை இறைவனுக்காக பலியிடத் துணிந்தார். பலியிடும் சமயத்தில் இறைவன் அதனைத் தடுத்து ஒரு கொழுத்த ஆட்டினை பலியிடச் செய்து இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாக உணர்வை உலகமறியச் செய்தான். இதனாலேயே, இந்நாள் தியாகத் திருநாள் எனப் போற்றப்படுகிறது.
இதில் முக்கியமான வணக்கமாய் ஹஜ்ஜும், ஹஜ்ஜுக்கே வழிகாட்டியாய் நபி இப்றாஹீம் (அலை) அவர்களும் அவர்களது குடும்பமும் செய்த தியாகம் இந்தப் பெருநாளில் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஹஜ்ஜின் கடமைகளில் நபி இப்றாஹிம் (அலை) அவர்களும், அன்னாரது குடும்பத்தினரும் செய்த செயல்களை இறைவன் முக்கிய வணக்கமாக்கி விட்டான்.
நபியவர்களின் குழந்தை இஸ்மாயீல் (அலை) தண்ணீர் இல்லாத பாலை மணலில் தாங்கவியலா தாகத்தில் தவித்தழுத சமயம் அவரது தாயார் ஹாஜரா (அலை) அவர்கள் தண்ணீர் தேடி ஸஃபா மர்வாவிற்கிடையில் ஓடிய செயல் கூட இன்று ஹஜ்ஜிலே முக்கிய மான வணக்கம். அதனை ஹஜ் பயணிகள் செய்யவில்லை எனில் ஹஜ்ஜு நிறைவேறாது.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு பல்வேறு விதமான சோதனைகளைக் கொடுத்த தாகவும் அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றதாகவும் குர்ஆன் கூறுகிறது. அவரது அர்ப்பணிப்பு உணர்வின் உச்சநிலையே இறைவனுக்காக மகனை அறுக்கத் துணிந்தது.
குர்பானி என்பது பணத்தை செலவழித்து ஆட்டை அறுப்பது மட்டுமல்ல, இப்றாஹீம் (அலை) அவர்களது உணர்வை நடைமுறை களை நினைவில் கொள்வது, செயலில் கொண்டு வருவது. ஒரு சமூகத்தில் எந்த அளவு தியாக உணர்வு மேலோங்கியிருக்கிறதோ அந்த அளவே அதனின் நாகரீகம் முதிர்ச்சி யடைகிறது. தியாக உணர்வு குறைகிறபோது மனித சமூகம் தனது உன்னதமான சமூக விழுமியங்களை இழந்து விடும். சமூக அமைப்பில் ஒன்றிணைந்து வாழ்கிறபோது சில நேரங்களில் நமது விருப்பங்களை விட பிறரது விருப்பத்திற்கும், தேவைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டியது அவசியமாகி விடுகிறது.
அது மாதிரியான சூழல்களில் நாம் தியாக உணர்வை வெளிப்படுத்தத் தவறினால் மனித அடையாளம் கேலிக்குறியதாகி விடும். இறைவன் மனிதர்களது அர்ப்பணிப்புக்கு உரிய கண்ணியத்தை கொடுக்காமல் இருப்பதில்லை. நபி இப்றாஹீம் (ஸல்) அவர்களின் தன்னிகரற்ற தியாகத்திற்குப் பரிசாக அவரது ஒவ்வொரு அசைவையும் காலம் தோறும் மனித சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளாக இறைவன் ஆக்கி வைத்தான். அவை ஹஜ்ஜின் நடைமுறைகளாக இன்று மாறியுள்ளன. இறைவனின் மார்க் கத்தை பின்பற்றுவோருக்கு முஸ்லிம் எனப் பெயரிட்டதே நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தான்.
இஸ்லாமிய வழிபாடு, கலாச்சாரத் திற்கெல்லாம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே முன்மாதிரியாக இருந்தார்கள். குழந்தை பிறந்தால் அகீகா கொடுப்பது, சுன்னத் எனும் ஆண்குறியின் நுனித்தோல் அகற்றல், மீசையை உதட்டின் விளிம்பை விட்டும் வெளியேறாமல் கத்தரித்தல், அக்குள் மற்றும் தேவையற்ற முடிகளைக் களைதல், புனித மாதங்களை கண்ணியப்படுத்தல் என அதிகமான நன்னடத்தைகளை அறிமுகப்படுத்தியவர் நபி இப்றாஹீம் (அலை). விருத்த சேதனம் செய்து கொண்டவர்களுக்கு எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் அதில் ஏராளமான சுகாதாரப் பலன்கள் உண்டு எனவும் இன்றைய மருத்துவ உலகு அறிவுறுத்துகிறது. இந்த நடைமுறையின் முதல் வழிகாட்டியே நபி இப்றாஹீம் (அலை) அவர்கள்தான்.
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கடமைகள், கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவிக்கும் நாள் அல்ல. இறைவனோடுள்ள தொடர்பை முறித்துச் செயல்படும் நாளுமல்ல. இறைவனைப் புகழும் தக்பீரே பெருநாள் தினத்தில் அதிகம் முழங்கப்படல் வேண்டும். ஒரு முஸ்லிமின் வாழ்வில் முக்கிய தருணங்களில் அல்லாஹு அக்பர் எனும் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாங்கில், இகாமத்தில், தொழுகையில் என அனைத்தும் தக்பீர் மயமே! முஹம்மது (ஸல்) அவர்களும் ஈதுப் பெருநாட்களை தக்பீரைக் கொண்டு அழகுபடுத்துங்கள் எனக் கூறியுள்ளார்கள்.
ஹஜ்ஜுப் பெருநாளில் ஆதமின் மகன் செய்யக் கூடிய அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குர்பானிதான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். குர்ஆன் கூறுகிறது: (குர்பானிப் பிராணியின்) இறைச்சியோ, இரத்தமோ இறைவனை அடைவதில்லை. மாறாக உங்கள் இதயத்திலிருந்து எழும் இறையச்சமே அவனை சென்றடையும். மற்றொரு நபி மொழி கூறுகிறது: இறைவன் உங்களது உருவத்தையோ, அலங்காரங்களையோ கவனிப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையும்தான் பார்க்கிறான். பிறரின் புகழ்ச்சிக்காக ஒட்டகங்களை, ஆட்டை, மாடுகளை அறுத்துப் பலியிடுவது நன்மையைத் தராது. இன்றைய பெருநாளில் இறைச்சி வழங்க முடியாதவர்கள் ஸலாமைப் பரப்பலாம். தெரிந்த, தெரியாத சகோதரர்கள், சகோதர சமூகத்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம். அவர்களுக்கு எவ்வகையில் உதவ முடியுமோ அவ்வகையில் உதவலாம். முஹம்மது (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று இவ்வாறு கூறினார்கள்: ‘‘பெண்களே அதிகமாக தர்மம் செய்யுங்கள்’’. இதன் பிறகு பிலால் (ரலி) அவர்கள் துண்டை விரித்தவாறே பெண்களிடம் சென்றார்கள். பெண்கள், தங்கள் கழுத்துக்களிலும், கைகளிலும் கிடந்த தங்க ஆபரணங்களைக் கழற்றி தர்மம் செய்தார்கள். நாம் நம்மிடம் இருப்பது எதுவோ, அது பொன்நகையோ புன்னகையோ நம் சகோதரர்கள், சகோதரர்களின் இதயத்தை மகிழ்விக்கும் சிறு தர்மமேனும் செய்வோம்.
திருவள்ளுவர் சொல்கிறார்:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி
அகத்தனாம் இன்சொலினதே அறம்.
புன்சிரிப்பும் தர்மமே.
இன்று பக்ரீத் திருநாள்