Published : 27 Jul 2020 06:39 am

Updated : 27 Jul 2020 06:39 am

 

Published : 27 Jul 2020 06:39 AM
Last Updated : 27 Jul 2020 06:39 AM

இந்திய ரயில்வே மக்களுக்கே சொந்தம்!

indian-railway-is-for-people

டி.ஸ்டேன்லி பாபு, ஐ.பி.எஸ். ஆனந்த், வி.கார்மெலஸ்

இந்தியாவின் உயிர்நாடி இந்திய ரயில்வே. இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக மிகப் பரந்த வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் இந்திய ரயில்வே வெறுமனே பயணிகளையும் சரக்குகளையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசேர்க்கும் போக்குவரத்து அமைப்பு மட்டும் அல்ல; அது சமூக நல அமைப்பும்கூட. பயணிகளின் எதிர்பார்ப்புக்கேற்ப உயர் தொழில்நுட்பப் பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில்களைக் கொண்டுவருவது வரவேற்கத் தக்கது என்றாலும் அந்த ரயில்களைத் தனியாருக்கு விடுவதுதான் பிரச்சினை.

“குறைந்த பராமரிப்பு தேவைப்படும் நவீனத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதும், சரக்குப் போக்குவரத்தின் நேரத்தைக் குறைப்பதும், வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்குவதும், மேம்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை வழங்குவதும், பயணிகளுக்கு உலகத் தரமான பயண அனுபவத்தைத் தருதல் போன்றவைதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்” என்று ரயில்வே வாரியம் தெரிவிக்கிறது. பிரிட்டனும் ஜப்பானும் தங்கள் ரயில்வே அமைப்புகளைத் தனியாருக்குப் பகுதியளவில் அல்லாமல் முழுமையாகவே கொடுத்துவிட்டன. என்றாலும், பெரும்பாலான நாடுகள் தங்கள் ரயில் வலைப்பின்னல்களைப் பொதுத் துறையாகவே வைத்திருக்கின்றன.


ஒப்பந்தம் தொடங்கியது

இந்தியாவில் ஒப்பந்தம் விடுதல் மூலம் தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு கட்டமாக இது நடந்துகொண்டிருக்கிறது. தொடர்புடைய நிறுவனங்களின் பொருளாதாரத் திறனைப் பொறுத்து இறுதிசெய்தல் நடைபெறும் (ஒட்டுமொத்த வருமானம் பகிர்ந்துகொள்ளப்படும் என்ற அடிப்படையில்), தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் கட்டணங்களைத் தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ளலாம். இந்தத் தரப்புகள் குறிப்பிட்ட சரக்குக் கட்டணங்களையும் நுகர்வைப் பொறுத்து மின் கட்டணங்களையும் ஒட்டுமொத்த வருமானத்தில் ஒரு பங்கையும் தர வேண்டும்.

ரயில் பெட்டிகளை வாங்கி 16 பெட்டிகளை ஒன்றிணைப்பதும், அவை இயங்கக்கூடிய 10 பெரிய ரயில் நிலையங்களில் அவற்றைப் பராமரிப்பதும்தான் முக்கியமான விஷயம். பராமரிப்புக்கு ஏற்கெனவே இருக்கும் பணிமனைகள் பயன்படுத்திக்கொள்ளப்படும். ஆனால், இது நடைமுறையில் மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடும். போதுமான வசதிகள் இல்லாத இடத்தில் மட்டும் தனியார் நிறுவனங்கள் அந்த வசதிகளை உருவாக்க முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதற்கு ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். ஒவ்வொரு நிலையத்திலும் செய்யப்படும் முதலீடுகள் ரூ.2,300 - 3,500 கோடி வரை இருக்கும்.

ரயில்வே வாரியத்தால் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனியாரால் பராமரிக்கப்படும் அந்த ரயில்களில் ரயில்வே பணியாளர்கள் பணிபுரிவார்கள் (109 தடங்களில் 151 ரயில்கள்). ரயில்வேக்குச் சொந்தமான மற்ற கட்டமைப்பை (தடங்கள் போன்ற கட்டமைப்புகள், நிலையங்கள், சிக்னல்கள், பாதுகாப்பு, தினசரிப் பராமரிப்பு போன்றவை) முழுக்கவும் பயன்படுத்திக்கொள்ளும். இப்படியாக, முதலீட்டாளர்களின் பொறுப்பு கொள்முதலுடனும் பராமரிப்புடனும் முடிந்துவிடுகிறது. ரயிலை இயக்குவது, பாதுகாப்பு, ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது போன்ற பொறுப்புகள் ரயில்வே துறையைச் சார்ந்தவை. அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? ஏனெனில், பெட்டிகள் தனியாருக்குச் சொந்தமானவை, ஆனால் இயக்குவது ரயில்வே துறை அல்லவா? அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் சுயாதீனமான மத்தியஸ்தரை நியமிப்பது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவாது.

ரயில்வேயும் தொழில்நுட்பமும்

இந்தியாவின் ரயில் பெட்டிகள் சர்வதேசத் தரத்தில் இல்லை. அவை அறிமுகப்படுத்தப்படும்போது அவற்றுக்குப் பின்னுள்ள தொழில்நுட்பங்கள் 20 ஆண்டுப் பழமையாக இருந்தன. பெட்டிகள் வடிவமைப்பில் உலக அளவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே கைக்கொள்ள வேண்டும்.

அதிகபட்ச வேகத்தை மணிக்கு 160 கி.மீ. அதிகரிப்பது வரவேற்புக்குரியது. வழங்கப்பட்டிருக்கும் அவகாசத்துக்குள் இதைச் செய்துமுடிப்பது கடினமாக இருக்கும். தற்போதைய தடங்கள் பெரும்பாலும் 110 கி.மீ. வேகத்தை உச்சபட்ச அளவாகக் கொண்டிருக்கின்றன; வெகுசில மட்டும் 120-130 கி.மீ. வேகத்தை அனுமதிக்கக்கூடியவை. இதை 160 கி.மீ. வேகத்துக்கு அதிகரிப்பதற்குத் தண்டவாளங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும், வளைவுகளும் லெவல் கிராஸிங் அடைப்புகளும் நீக்கப்பட வேண்டும், பாலங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். மக்கள்தொகை அதிகமாக உள்ள இடங்களில் தடங்களுக்கு வேலி இடப்பட வேண்டியது அவசியம்.

பயணிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் ரயில்வேக்கோ அரசுக்கோ பங்கு இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதை ஒப்புக்கொள்ளவே முடியாது. மாறாக, கட்டணத்தை நிர்ணயிப்பதற்குத் தனியார் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு இணையான கட்டணத்தை இந்த ரயில்களுக்கு விதிக்கும் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் இருக்கின்றன. இது நிச்சயமாகச் சாதாரண மனிதர்களுக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கும். பல தரப்பு மக்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் சலுகைக் கட்டணம் தனியாருக்குக் கீழ் இருக்காது. ரயில்வேயை மக்கள் நல நிறுவனமாக உருவாக்கும் நோக்கமே அடிபட்டுப்போய்விடுகிறது.

தனியார் துறையில் பணியாளர்களுக்கு ஆகும் செலவு மீது ஒரு கண் வைப்பார்கள். இது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். மேலும், தனியார் துறையினர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்பதால் சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படும்.

சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய மற்றும் மேற்கு ரயில்வேக்களைத் தொடங்கியபோது அப்போதைய பிரதமர் விடுத்த செய்தி தற்போதைய பின்னணிக்குப் பொருத்தமானது: “ரயில்வே என்பது நமது தேசத்துக்குச் சொந்தமான மாபெரும் நிறுவனமாக இருக்கிறது, இனியும் அப்படியே இருக்கும். கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையோடு அது நெருக்கமாக உறவாடுகிறது; அது அவர்களின் வசதியையும் தேவையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ரயில்வே என்பது மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்புடையது. ஆகவே, அவர்களின் நல்வாழ்வு குறித்து அது அக்கறை கொள்ள வேண்டும்.”

ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கலாம்

செயல் ஊக்குநர், பங்கெடுப்பாளர் என்று இரட்டைப் பொறுப்புகளை அரசு வகிக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. பொதுத் துறை - தனியார் துறைக் கூட்டின் பரிபூரண உதாரணமான மெட்ரோ ரயில் சேவைகளைப் பொறுத்தவரை தனியார்தான் தினசரிப் பராமரிப்பு, இயக்கம், பயணிகள் வசதி, பணியாளர் விவகாரங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பு. நிலம், மின்சாரம், அனுமதிகள், சட்டம் ஒழுங்கு போன்றவற்றை மாநில அரசுகள் பார்த்துக்கொள்ளும். கட்டண நிர்ணயம் மாநில அரசுடன் கலந்தோலோசித்துச் செய்யப்படும்.

இந்தத் துறைக்கே புதியவர்களான தனியாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தேஜாஸ் விரைவு ரயில்களின் மூலம் அனுபவம் பெற்றிருக்கும் ‘ஐ.ஆர்.சி.டி.சி.’யிடம் ஏன் ஒப்படைக்கக் கூடாது? பராமரிப்பு, இயக்கம், பயணிகள் சேவை போன்றவை ரயில்வேயின் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் சீராக இயங்கும். மேல்தட்டு வர்க்கத்தினருக்கு சேவையளிக்கக் கூடிய புல்லட் ரயிலுக்கு மட்டும் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் மத்திய அரசு செலவிடத் தயாராக இருக்கும்போது நாடெங்கும் உள்ள பல கோடிக் கணக்கான மக்களுக்குச் சேவை புரியும் ‘ஐ.ஆர்.சி.டி.சி.’யிடம் புதிய திட்டத்தை ஏன் ஒப்படைக்கக் கூடாது?

ரயில்களைத் தனியார்மயமாக்கும் இந்தத் திட்டம் சாதாரண மக்களை ரயில் போக்குவரத்திடமிருந்து அந்நியப்படுத்திவிட அனுமதிக்க முடியாது. இந்திய ரயில்வேயானது தேசத்தின் சொத்து; அது மக்கள் நலனுக்குப் பெரும் பங்காற்றுகிறது. ஆகவே, அதை லாப உற்பத்தித் திறன் அடிப்படையிலும், சந்தை சார்ந்த முதலீடு அடிப்படையிலும் மட்டுமே மதிப்பிட்டுவிடக் கூடாது.

- டி. ஸ்டேன்லி பாபு, ஐ.பி.எஸ்.ஆனந்த், வி.கார்மெலஸ்; மூவரும் இந்திய ரயில்வேயின் முன்னாள் அதிகாரிகள்.

© தி இந்து, தமிழில்: ஆசை

Indian railwayஇந்திய ரயில்வேஇந்திய ரயில்வே மக்களுக்கே சொந்தம்Indian railway privatizationSouthern railwayஐ.ஆர்.சி.டி.சிIRCTC

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x