அக்னிப் பரீட்சையில் சச்சின் பைலட்!

அக்னிப் பரீட்சையில் சச்சின் பைலட்!
Updated on
2 min read

சச்சின் பைலட் தனது 27-வது வயதில் மக்களவை உறுப்பினர், 32 வயதில் மத்திய அமைச்சர், 37 வயதில் மாநில காங்கிரஸ் தலைவர், 41 வயதில் ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலத்தின் துணை முதல்வர். இப்படியாக, இந்திய அரசியலில் சச்சின் பைலட்டின் எழுச்சிக்கு இணையாகப் பிறரைக் குறிப்பிடுவது கடினம். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாக முன்பு கொண்டாடப்பட்ட சச்சின் பைலட் இக்கட்டான சூழலில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார் – இதற்கு அவரும் ஒரு முக்கியமான காரணம் என்றால், அவரை இந்நிலைக்குத் தள்ளியதில் அவரது மூர்க்கமான எதிராளியும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட்டுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது.

மாயாஜால நிபுணராக இருந்து கட்சியின் செல்வாக்குள்ள மூத்த தலைவராக மாறிய அசோக் கெலாட்டிடம் தந்திரங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லைபோல. 43 வயதில் இப்படிப் போவதா, அப்படிப் போவதா என்ற சூழலில் வந்து நிற்கிறார் பைலட். அவருக்கு இருக்கும் இரண்டுமே ஆபத்தான தெரிவுகள் – ஒன்று, கெலாட்டிடம் சரணடைவது, இல்லையென்றால் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது. பிராந்தியக் கட்சி ஒன்று தொடங்குவது சற்றே மரியாதையானது என்றாலும் மிகுந்த அனுபவம் கொண்டவர்களுக்கே அது மிகவும் சிரமமான ஒன்று. பைலட்டோ சொகுசான வாழ்க்கைக்குள் பிறந்தவர்.

சச்சின் பைலட் காலஞ்சென்ற தன் தந்தை ராஜேஷ் பைலட்டிடமிருந்து சமூக முதலீட்டை வாரிசுரிமையாகப் பெற்றார். ராஜேஷ் பைலட்டோ சொந்தக் காலில் முன்னேறியவர். டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள காஜியாபாதில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் ராஜேஷ்வர் பிதூரி பிரசாத் சிங் என்ற ராஜேஷ் பைலட். அவர் சார்ந்த குஜ்ஜார் சமூகம் காலம் காலமாக ஆடு, மாடு வளர்ப்பவர்கள். தனது நெருங்கிய உறவினர் ஒருவருடன் அவர் டெல்லிக்குப் புலம்பெயர்ந்தார். டெல்லியில் உள்ள பணக்காரப் பகுதியில் ஒரு மாளிகை வீட்டின் கொட்டகையில் தங்கிக்கொண்டு அக்கம்பக்கத்தினருக்கு அவர் பால் விற்றதாகச் சொல்லப்படுவதுண்டு. மிகுந்த மனவுறுதியும் லட்சிய வேட்கையும் துடிப்பும் கொண்ட ராஜேஷ் பைலட், உயரிய இலக்குகளைக் கொண்டிருந்தார். இந்திய விமானப் படையில் சேர்ந்தார். 1979-க்குள் போர் அனுபவம் பெற்றவராகவும் ஒரு படைப் பிரிவின் தலைவராகவும் இருந்த அவர், இந்திரா காந்தியைச் சந்தித்து அரசியலில் நுழைய வாய்ப்பு தேடினார். தனது குடும்பப் பெயரை நீக்கிவிட்டு, ‘பைலட்’ என்பதைத் துணைப் பெயராகச் சேர்த்துக்கொண்டார். 1980-ல் ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அவர் அரசியலில் நுழைந்தார். கூடிய விரைவிலேயே ராஜீவ் காந்தியின் பிரியத்துக்குரியவரானார், அவரது அரசியல் வாழ்க்கையும் ஏற்றம் கண்டது.

மேல்குடி மக்கள்

வெளியுலகின் பார்வையில் சச்சின் பைலட்டும் ராகுல் காந்தியும் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டிகள். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையிலான பந்தம் துயரத்தின் அடிப்படையிலானது – இருவரும் இளம் வயதில் தங்கள் தந்தையரை இழந்தவர்கள். 1991-ல் ராகுல் காந்திக்கு 21 வயது இருக்கும்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்; 2000-ல் சச்சின் பைலட்டுக்கு 23 வயது இருக்கும்போது ராஜேஷ் பைலட் சாலை விபத்தில் மரணமடைந்தார். 2004-ல் இருவருமே மக்களவையில் முதன்முறையாக உறுப்பினர்களாக நுழைந்தனர். அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக உட்கார்வார்கள், அடிக்கடி பேசிக்கொள்வார்கள், ஒருவேளை கட்சியைப் பழைய ஆட்களிடமிருந்து மீட்பதைப் பற்றிக்கூட இருக்கலாம். 2009-ல் அமைச்சரவையில் சச்சின் பைலட்டுக்கு இடம் கிடைத்தது. அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. சாரா அப்துல்லாதான் அவரது மனைவி. ஃபரூக் அப்துல்லாவின் மகளான சாராவுடன் சச்சின் பைலட்டுக்குச் சிறுவயதிலேயே அறிமுகம் ஆகியிருந்தது.

ராஜேஷ் பைலட் தனது பாணி, புன்னகை, லட்சியம் எல்லாவற்றையும் சச்சின் பைலட்டிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று தெரிகிறது. டெல்லியின் செய்ன்ட் ஸ்டீஃபன் கல்லூரியும் வார்ட்டான் பிஸினஸ் ஸ்கூலும் சாதாரண வாழ்க்கை பற்றிய உணர்வை சச்சின் பைலட்டிடமிருந்து துண்டித்துவிடவில்லை. இந்திய விமானப் படையில் விமானியாக ஆக விரும்பினார். ஆனால், பார்வையில் இருந்த குறைபாடு காரணமாக அவரது கனவு நிறைவேறாமல் போனது. டெல்லியில் பிபிசியில் கொஞ்ச காலம் பணியாற்றினார், அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலகட்டத்தின் வளர்ந்துவந்த நட்சத்திரங்களிடையே இந்தி பேசும் பிரதான மாநிலங்களின் சாதியக் கணக்கைப் பற்றிய தெளிவான உணர்வு சச்சின் பைலட்டுக்கு இருந்தது. சூட்டும் டையும் அணிந்துகொள்ளும் நவநாகரிகப் பாணிக்கு இணையாக ராஜஸ்தானி தலைப்பாகையையும் அவரால் அணிந்துகொள்ள முடியும். பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் ராஜேஷ் பைலட் விருந்தளிப்பது வழக்கம். அதை சச்சின் பைலட்டும் தொடர்ந்தார். உலக அளவிலும் இந்திய அளவிலும் கருத்துலகில் செல்வாக்கு கொண்டவர்களிடம் நட்பை வளர்த்துக்கொண்டார்.

தவறு எங்கே நடந்தது?

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக 2014-ல் நியமிக்கப்பட்ட பைலட், முழு மூச்சாக நின்று 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அப்போது மத்திய பிரதேசத்திலும் சத்தீஷ்கரிலும் காங்கிரஸ் வென்று அம்மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களான கமல் நாத்தும் புபேஷ் சிங் பாகெலும் முதல்வர்கள் ஆனார்கள். ராஜஸ்தான் மட்டும் வேறு திசையில் சென்றது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் அசோக் கெலாட்டை ஆதரித்தார்கள். கட்சியை வயதானவர்களிடமிருந்து இளைஞர்களிடம் ஒப்படைத்து, கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ராகுல் காந்தியிடம் பெரும் திட்டம் இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019-ல் காங்கிரஸ் அடைந்த தோல்வி, ராகுல் காந்தியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேற்றியது. தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டதால் அவருடைய சகாக்களெல்லாம் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் நிலை நேரிட்டது. இந்தக் கட்டத்தில்தான் தனது திட்டங்களிலும் லட்சியங்களிலும் பைலட் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதைச் செய்யத் தவறியதுதான் தற்போது பெரிய பாதிப்பாக சச்சின் பைலட்டுக்கு மாறியிருக்கிறது.

© தி இந்து, தமிழில்: ஆசை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in