Published : 19 Jul 2020 07:32 AM
Last Updated : 19 Jul 2020 07:32 AM

மறைமலையடிகள்: மொழிக் கலப்பிலிருந்து தமிழை மீட்டவர்!

மறை.தி.தாயுமானவன்

மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த ‘சுதேசமித்திரன்’ நாளிதழைக் கண்டித்து, 1916-ல் சுப்பிரமணிய சிவா ‘ஞானபாநு’ இதழில் எழுதினார் இப்படி: “ஹிஸ் எக்ஸலன்சி, கவர்னர், யுவர் மெஜஸ்டிக், ஒபிடியன்டு சர்வண்டு என்ற வார்த்தையெல்லாம் ‘சுதேசமித்திர’னில் பிரசுரிக்கப்படுகின்றன. ‘சுதேசமித்திரன்’ அறிவைப் பரப்புகிறதா? அல்லது ஆங்கில பாஷையைப் பரப்புகிறதா?”

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடமொழிச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் கலந்ததாகவே தமிழ் விளங்கியது. இந்தக் கலப்பிலிருந்து மீட்டெடுத்தவர்களில் முதன்மையானவர் மறைமலையடிகள். அடிகளாரும் அவரது மகள் நீலாம்பிகையாரும் மாலை வேளையில் வீட்டுத் தோட்டத்தில் உலவும் வேளையில், வள்ளலாரின் ‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்...’ என்ற பாடல் வரிகளில் தேகம் என்ற பிறமொழிச் சொல்லுக்குப் பகரமாக யாக்கை என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழின் ஓசையின்பம் பெருகும், தமிழில் தேவையின்றிப் பிற மொழிச் சொற்கள் கலப்பதைத் தடுத்து தூயதாக வழங்கல் வேண்டும் என்றார் தந்தையார். அவரது மகளும் ‘இன்று முதல் நாம் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு பேசுதல், எழுதுதல் வேண்டும்’ என்று உறுதிகொண்டார். 1916-ல் சென்னையை அடுத்த பல்லவபுரத்தில் நடந்த இந்நிகழ்வு, தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கிவைத்தது. எனினும், இவ்வியக்கம் பிற மொழிக் கலப்பால் தோன்றியதேயன்றி பிற மொழி வெறுப்பால் தோன்றியதன்று.

இயக்கத்தின் தொடக்கம்

கால்டுவெல் ஏற்படுத்திய மறுமலர்ச்சியால் தமிழ் மொழியின் பெருமையைக் காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழர்களிடையே பெருகியிருந்த காலமது. மதுரையில் ஞானியார் அடிகளின் வழிகாட்டுதலில் பாண்டித்துரைத் தேவர் 1901-ல் உருவாக்கிய நான்காம் தமிழ்ச் சங்கம் தமிழ்க் காப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. தமிழ் செம்மொழியே என்று மதுரை தமிழ்ச் சங்கத்தின் ‘செந்தமிழ்’ இதழில் 1902-ல் கட்டுரை எழுதிய சூரியநாராயண சாஸ்திரியார், பரிதிமாற்கலைஞர் என்ற புனைபெயரைக் கொண்டிருந்தார். சுப்பிரமணிய சிவா தனித்தமிழில் எழுத வேண்டும் என்று 1915-ல் ‘ஞானபாநு’ இதழில் எழுதியிருந்தார். தமிழில் ஆங்கிலச் சொற்களைக் கலப்பதை எதிர்த்தாரே தவிர, அவராலும் தம்முடைய எழுத்தில் வடசொல் கலப்பை அகற்ற முடியவில்லை.

பிற மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழ்ச் சொற்களை மட்டுமே கையாள வேண்டும் என்று 1916-ல் ஏற்பட்ட உந்துதலால் சுவாமி வேதாசலம் என்ற தம் வடமொழிப் பெயர் மறைமலையடிகள் என்று மாறியது. அத்துடன் அவர் நடத்திவந்த ‘ஞானசாகரம்’ என்ற இதழும் ‘அறிவுக்கடல்’ எனப் பெயர் மாறியது. முன்பு எழுதி வெளியிட்ட நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களைக் களைந்து, தூய தமிழ்ச் சொற்களைக் கையாண்டார் மறைமலையடிகள். தமிழ் மொழியைப் பிற மொழிக் கலப்பிலிருந்து காக்கும் பொருட்டு, தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். மறைமலையடிகளைப் பின்பற்றி திரு.வி.க.வும் மேடைப் பேச்சிலும் இதழ்களிலும் தூய தமிழ்நடையையே பெரும்பாலும் பின்பற்றினார்.

துறைதோறும் தமிழியக்கம்

ஆங்கிலம் அயல்மொழி என்பதால் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், பல நூற்றாண்டுகளாகத் தமிழில் கலந்து தமிழ்ச் சொற்கள்போலவே வழங்கிய வடமொழிச் சொற்களை நீக்குவது தனித்தமிழ் இயக்கத்தின் முதல் நோக்கமாக இருந்தது. உயர் சாதியினரின் உயர்ந்த மொழிநடையாகக் கருதப்பட்டு, பலராலும் பின்பற்றப்பட்ட வடமொழி கலந்த தமிழ்நடையை எதிர்கொண்டு வெற்றிகண்டது தனித்தமிழ் இயக்கம். பேச்சுவழக்கில் இருந்த பெரும்பாலான வடமொழிச் சொற்கள் அகற்றப்பட்டன. ஆட்களின் பெயர்களும் வடமொழியிலிருந்து தமிழுக்கு மாறின. நமஸ்காரமும் ஷேமமும் வணக்கம், நலம் என்று மாறின. சமயத் துறையிலும்கூட ஸ்வாமி, ஷேத்திரம், கும்பாபிஷேகம், அர்ச்சனை, தர்மகர்த்தா என்ற வடமொழிச் சொற்கள் நீங்கி இறைவன், கோயில், குடமுழுக்கு, வழிபாடு, அறங்காவலர் போன்ற எளிய செந்தமிழ்ச் சொற்கள் மக்களிடம் வழங்கப்படலாயின.

கல்வி நிலையங்களில் கலாசாலை, உபாத்தியாயர், உபஅத்யட்சகர், பரீட்ஷை, பவுதிகம், ரசாயனம், விஞ்ஞானம், பூகோளம், சாஸ்திரம், சர்வகலாசாலை, பரிசோதனைக் கூடம் முதலிய வடசொற்கள் நீங்கி பள்ளிக்கூடம், ஆசிரியர், துணைவேந்தர், தேர்வு, இயற்பியல், வேதியியல், அறிவியல், நிலவியல், வரலாறு, பல்கலைக்கழகம், ஆய்வுக்கூடம் போன்ற தூய தமிழ்ச் சொற்கள் வழங்கத் தொடங்கிவிட்டன. அரசியல் துறையில் அபேட்சகர், அக்கராசனபதி, மந்திரி, சபாநாயகர், சர்க்கார், வாகனம், மாகாணம், காரியதரிசி, பொக்கிஷதார், போஷகர், பிரசங்கம் போன்ற வடசொற்கள் நீங்கி வேட்பாளர், தலைவர், அமைச்சர், அவைத் தலைவர், அரசு, ஊர்தி, செயலாளர், பொருளாளர், காப்பாளர், சொற்பொழிவு போன்ற நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன.

இதழியல் துறையில் பிரதிதினமும், ஹாஸ்யம், அனுபந்தம், நிருபர், பத்திராசிரியர் போன்ற வடசொற்கள் நீங்கி நாள்தோறும், நகைச்சுவை, இணைப்பிதழ், செய்தியாளர், இதழாசிரியர் என்ற நல்ல தமிழ்ச் சொற்கள் வழங்கிவருகின்றன. இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் தனித்தமிழ்ச் சொற்கள் வழங்கிவருவதற்கு மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கமே காரணம்.

கழகத்தின் கதை

தனித்தமிழ் இயக்கத்தின் வெற்றியாக அடிகளார் உருவாக்கிய பொது நிலைக் கழகம் என்ற பெயரிலுள்ள கழகம் என்ற சொல் நிலைத்ததால் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதிலிருந்து பிரிந்த அரசியல் கட்சிகளும் கழகம் என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றன.

மறைமலையடிகளாரைப் போலவே பா.வே.மாணிக்க நாயக்கரும் தமிழவேள் உமா மகேசுவரனாரும் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையும் தனித்தமிழை இயக்கமாகவே பரப்பிவந்தனர். நீலாம்பிகையாரும் தேவநேயப்பாவாணரும் பெருஞ்சித்திரனாரும் தனித்தமிழ் இயக்கமாகவே வாழ்ந்தனர். அண்ணல்தங்கோ, இரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரையார், சி.இலக்குவனார், அறிஞர் அண்ணா, மு.வரதராசனார், வ.சு.ப.மாணிக்கம், மா.நன்னன், இறைக்குருவனார், இரா.இளவரசு, தமிழ்க்குடிமகன் முதலான தமிழ்ச் சான்றோர்கள் பேச்சுமொழியிலும் எழுத்துமொழியிலும் தவிர்க்க முடியாத இடங்களில் ஓரிரு வடசொற்களைக் கையாண்டாலும் தூய, நல்ல, எளிய தமிழை மட்டுமே பின்பற்றினர்.

இன்று தமிழர்கள் வாழ்க்கையில் மிதிவண்டி, பேருந்து, கருவூலம், பொதுப் பணித் துறை, தலைமைச் செயலகம் என்று எண்ணற்ற தூய கலைச் சொல்லாக்கங்கள் பயன்படுத்தப்படுவது தனித்தமிழ் இயக்கத்தின் வெற்றி. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அளவுக்கு மீறி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் போக்கு அதிகரித்துவருகிறது. ஆங்கிலச் சொற்களை அதிகம் கலந்து பேசுவது அதிகம் படித்தவர் என்று தம்மை அடையாளப்படுத்தும் என்ற தவறான கருத்தின் விளைவு அது. இந்தப் போக்கு மொழியைச் சிதைத்துவிடக்கூடும். தனித்தமிழ் இயக்கத்தின் தேவை மீண்டும் இப்போது நமக்கு அவசியமாகிறது.

- மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகளாரின் பேரன்.

தொடர்புக்கு: maraitt@gmail.com

ஜூலை 15: மறைமலையடிகள் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x