Published : 16 Jul 2020 08:39 am

Updated : 16 Jul 2020 08:39 am

 

Published : 16 Jul 2020 08:39 AM
Last Updated : 16 Jul 2020 08:39 AM

இந்தியப் புள்ளியியலின் தந்தை மஹலனோபிஸ்

prasanta-chandra-mahalanobis

அமார்த்திய சென் தனது ‘வறுமையும் பஞ்சங்களும்’ (1981) என்ற புத்தகத்தில் 1943-ல் ஏற்பட்ட கொடுமையான வங்கப் பஞ்சத்துக்கான காரணங்களைப் பற்றி விவாதிக்கிறார். மோசமான உணவு விநியோகம், போர்க் காலப் பணவீக்கம், ஊக அடிப்படையில் பொருள் வாங்குதல், பதற்றத்தின் காரணமாகப் பொருட்களை வாங்கிப் பதுக்கிவைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை முக்கியமான காரணங்களாகக் கூறுகிறார். அதே நேரத்தில், மதுஸ்ரீ முகர்ஜீ தனது ‘சர்ச்சிலின் ரகசியப் போர்’ நூலில் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பங்கைப் பற்றியும், பஞ்சத்தைத் தீவிரமாக்கியதில் போர்க் காலத்தில் அவரது அமைச்சரவை எடுத்த முடிவுகளைப் பற்றியும் விவாதிக்கிறார்.

வங்கப் பஞ்சத்தைப் பற்றிய கணக்கெடுப்பு


இந்தியாவின் திட்ட நாயகர் என்று அழைக்கப்படுபவரும் நம் நாட்டின் புள்ளிவிவரக் கட்டமைப்பின் சிற்பியுமான பிரசந்த சந்திர மஹலனோபிஸ் பஞ்சத்தால் சீர்குலைந்துபோன வங்கத்தின் கிராமங்களில் ஜூலை 1944-லிருந்து 1945 வரை பெரிய அளவிலான கணக்கெடுப்பை நடத்தினார். எந்த அளவுக்குப் பேரழிவு நடந்திருக்கிறது என்பதையும், இதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் தெரிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அது. இந்தக் கணக்கெடுப்பு பயனுள்ள பல தகவல்களை அளித்தது. நெல் பயிரிட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு குடும்பத்தினர் (15 லட்சம் குடும்பத்தினர்) தங்கள் நிலங்களைப் பகுதியளவிலோ முழுவதுமாகவோ விற்றுவிட்டார்கள் அல்லது அடமானம் வைத்துவிட்டார்கள் என்று அவரது கணக்கெடுப்பு காட்டியது. பஞ்சத்தின்போது 40 லட்சம் மக்களின் பொருளாதார நிலை மிக மோசமாக ஆனது என்பதையும் அந்தக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது. பொருளாதார ஏற்றத்தாழ்வும் பஞ்ச காலத்தில் அதிகரித்தது. எனினும், 85% குடும்பங்களின் நிலைமை மாறவில்லை என்று அந்தக் கணக்கெடுப்பு கூறியது.

பொருளாதாரத் தரவுகளில் தொடங்கி கரோனா தொடர்பான தரவுகள் வரை பலவற்றின் துல்லியமும் கேள்விக்குள்ளாக்கப்படும் தற்காலத்தில் மஹலனோபிஸ் முன்பைவிட அதிகமும் தேவைப்படுகிறார். சணல் தொடர்பாக 1934-ல் அவர் செய்த உலகளாவிய கணக்கெடுப்பில் தொடங்கி பல்லாண்டு காலம் தனது இடைவிடாது உழைப்பின் மூலம் வலுவான, நம்பகத்தன்மை கொண்ட புள்ளியியல் மரபை அவர் உருவாக்கினார். இதற்கு அவரது செயல்திறன், அறிவு, தலைமைப் பண்பு, புதுமையான சிந்தனைகள், அற்புதமான திறமை ஆகியவை துணைநின்றன. வெறுமனே மாதிரிகள் தொடர்பான கோட்பாட்டுடன் நின்றுவிடாமல் பெரிய அளவிலான மாதிரிக் கணக்கெடுப்புகளையே புள்ளியியல் பொறியியலுக்கான ஆதாரமாக மஹலனோபிஸ் கனவு கண்டார். 1950-ல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (என்எஸ்எஸ்) அமைப்பு, 1951-ல் மத்திய புள்ளியியல் நிறுவன அமைப்பு ஆகியவற்றின் உருவாக்கத்தில் அவர் பெரும் பங்கு வகித்தார்.

துல்லியமான தரவுகளின் முக்கியத்துவம்

தனது கணக்கெடுப்புத் தரவுகளின் துல்லியம் குறித்து மஹலனோபிஸ் மிகவும் கவனமாக இருந்தார். கௌடில்யரின் ‘அர்த்தசாஸ்திரம்’ நூலில் தரவு சேகரிப்பைச் சுயாதீனமான நபர்கள் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்: “குடியானவர்களின் வேஷத்தில் ஒற்றர்கள் ஆட்சியரால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் நிலங்கள், அவற்றின் உரிமைத்துவம், வீடுகள் தொடர்பாகச் செய்யப்படும் வரிக் குறைப்பு, குடும்பங்களின் சாதி, தொழில் போன்றவை குறித்து (கிராம அதிகாரிகளாலும் மாவட்ட அதிகாரிகளாலும்) தரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவார்கள்…” (அத்தியாயம் 35). மஹலனோபிஸைப் பொறுத்தவரை இதுதான் ‘அர்த்தசாஸ்திரத்தின் ஈர்ப்பு மிக்க விஷயம்’. என்எஸ்எஸ் களத்தில் கணக்கெடுப்புகளை மேற்கொண்டிருக்கும்போது நம்பகத்தன்மை கொண்ட தரவுகளைப் பெறுவதற்காக சுயேச்சையான பணியாளர்களை நியமிப்பதற்கு மஹலனோபிஸுக்கு இதுதான் உந்துதலாக இருந்திருக்கக் கூடும்.

மஹலனோபிஸ், “தான் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் ஒரு இயற்பியலாளர், உள்ளுணர்வுரீதியில் புள்ளியியலாளர், நம்பிக்கை அடிப்படையில் ஒரு பொருளியல் அறிஞர்.” இயற்பியலில் அவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த பயிற்சியானது அளத்தலிலும் அவதானிப்புகளிலும் ஏற்படக் கூடிய பிழைகள் குறித்து எச்சரிக்கையோடு இருக்கும்படி உந்துதலைக் கொடுத்திருக்கக் கூடும். அவரது பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டு அவரது மாணவர்கள் ‘புரஃபஸர் ஆஃப் கவுன்ட்டிங் அண்டு மெஷர்மென்ட்’ என்று அழைப்பதுண்டு. சரிபார்ப்பு அமைப்பைத் தன்னகத்தே கொண்டிருக்கும் முறையை உருவாக்கி, அதன் மூலம் ஒரு மாதிரியில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன என்பதை மதிப்பிட வேண்டும் என்ற அவரது ஆசை காரணமாக அவர் உருவாக்கியதுதான் ‘துணை மாதிரிகளின் உள்ளே ஊடுருவும் வலைப்பின்னல்’ உத்தி (Inter-Penetrating Network of Subsamples). இது புள்ளியியலில் புரட்சிகரமான உத்தியாகக் கருதப்படுகிறது. தொழில்நுட்பத்தை வரித்துக்கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மஹலனோபிஸ். இங்கிலாந்து சென்று திரும்பும்போது புதுப்புது புள்ளியியல் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார். கணினிகளையும் கொண்டுவந்தார். மஹலனோபிஸ் தலைமையிலான ‘இந்தியப் புள்ளியியல் நிறுவனம்’ இந்தியாவின் முதல் கணினியை 1956-லும், இரண்டாவது கணினியை 1959-லும் வாங்கியது.

எனினும், மஹலனோபிஸ் மட்டும் தற்போது இருந்து கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் பல்வேறு சிரமங்களை அனுபவித்திருப்பார். பொருளாதாரப் புள்ளியியலுக்கான நிலைக்குழுவின் தலைவரான பிரணாப் சென்கூட கணக்கெடுப்பு முறை என்பது ஏற்கெனவே ‘கடுமையான நெருக்கடியில்’ சிக்கியிருப்பதாகவும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முன்மாதிரியாகக் கொண்டு வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் சிக்கலாகியிருக்கிறது என்றும் கவலை தெரிவித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

‘தி ஆசியாட்டிக் ரிவ்யூ’ இதழில் 1946-ல் வெளியான கட்டுரையில் மஹலனோபிஸ் இப்படி எழுதுகிறார்: “புள்ளியியல் என்பது சிறு அளவிலான விவரங்கள்தான். ஆயினும், அவை நமக்கு உதவுகின்றன.” இது என்றென்றைக்குமான ஒரு உண்மையாகும். மஹலனோபிஸ் சொல்லாதது என்னவென்றால், தரவுகளின் இதயத் துடிப்புகளைக் கேட்பதற்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தரவு அடிப்படையிலான கோட்பாட்டு முடிவுகளை உருவாக்குவதற்கும் உயர்தரப் புள்ளியியலாளர் ஒருவர் தேவை என்பதுதான். துரதிர்ஷ்டவசமாக, மஹலனோபிஸ் மறைந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஆன பிறகும் அவரது இடத்தை நிரப்ப வேறு யாரும் இல்லை.

- அதானு பிஸ்வாஸ், புள்ளியியல் பேராசிரியர், இந்திய புள்ளியியல் நிறுவனம், கொல்கத்தா.

© தி இந்து, தமிழில்: ஆசை


Prasanta chandra mahalanobisஇந்தியப் புள்ளியியலின் தந்தைஅமார்த்திய சென்பிரசந்த சந்திர மஹலனோபிஸ்புள்ளியியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x