Published : 14 Jul 2020 08:38 AM
Last Updated : 14 Jul 2020 08:38 AM

ஒரு விளக்கமும் வருத்தமும்!

கவிஞர் வைரமுத்து கவிஞராக முதல் பதிப்பு கண்ட 50 ஆண்டுகள் மற்றும் திரைத் துறைக்குள் அவர் நுழைந்து 40 ஆண்டுகள் ஆகிய தருணங்களை ஒட்டி, ‘வானவில் அரங்கம்’ பகுதியில் வெளியான கட்டுரைகளுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்து சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் பதிவாகியுள்ளன.

‘பாடகர் சின்மயி உள்ளிட்டோர் ‘#எனக்கும்’ (#MeToo) இயக்கம் வழியே வைரமுத்துவுக்கு எதிராக முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக உள்ள நிலையில், அவரைப் பெருமைப்படுத்தும் விதமான கட்டுரைகளை ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியிட்டிருக்கவே கூடாது’ என்று இந்த எதிர்வினைகள் மூலம் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘#எனக்கும்’ இயக்கத்துக்குத் தீவிரமாகப் பக்கபலமாக நிற்கும் ஊடகங்களில் ஒன்று ‘இந்து தமிழ்’ நாளிதழ் என்பதை வாசகர்கள் அறிவார்கள். பெண்களுக்கு எதிரான எந்தவொரு விஷயத்தையும் செய்திகள், கட்டுரைகள் வழியாக நாம் பொதுவெளியின் கவனத்துக்குக் கொண்டுவருவதோடு, அதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருவதையும் நம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் இதில் விதிவிலக்கு அல்ல. நம்முடைய ‘பெண் இன்று’ இணைப்பிதழானது பெண்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும்கூட தொடர்ந்து பேசிவருகிறது.

வெளியான நாள் தொடங்கி தமிழ் ஆளுமைகளின் தமிழுக்கான பங்களிப்பை அவர்கள் வாழ்வின் முக்கியத் தருணங்களின்போது பேசுவதையும் ‘இந்து தமிழ்’ ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், அறிஞர் கோவை ஞானி, பதிப்பாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் குறித்தும், நாடக ஆளுமை ந.முத்துசாமி, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் பற்றியும் ‘இந்து தமிழ்’ வெளியிட்ட சமீப காலப் பக்கங்களை நாம் நினைவுகூரலாம்.

வைரமுத்து தொடர்பிலும் அவ்விதமாகக் காலப் பிரமாணம் கருதியே அந்தக் கட்டுரைகளை வெளியிட்டோம். ஒருவருடைய கலைப் பங்களிப்பைப் பற்றிப் பேசுவதானது, அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிப்பது ஆகாது என்ற புரிதலின் அடிப்படையிலேயே இதைச் செய்தோம். ஆயினும், ‘ஒருவரின் வாழ்க்கை சார்ந்து எழும் கடுமையான குற்றச்சாட்டுகளையும், அவருடைய பொது வாழ்க்கை சாதனைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பது கூடாது’ என்று கண்டனம் தெரிவிப்போரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதை வெகுவாக மதிக்கிறோம்.

எந்தவிதமான உள்நோக்கமும் இதில் இல்லை என்றாலும், இந்தக் கட்டுரைகள் வெளியானதன் மூலம் எவர் மனம் புண்பட்டிருந்தாலும் அதற்காக மனமார வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x