Published : 12 Jul 2020 08:17 am

Updated : 12 Jul 2020 08:17 am

 

Published : 12 Jul 2020 08:17 AM
Last Updated : 12 Jul 2020 08:17 AM

வைரமுத்து: மக்கள் மொழிக் கவிஞன்

vairamuthu-birthday-special

பேனா பிடிக்கிறவனுக்குக் கைத்தடி பிடிக்கிற வயதில்தான் அங்கீகாரம் கிடைக்கிறது என்பது தமிழ்ச் சமூகத்தின் மீது வைக்கப்படும் நீண்ட நாள் குற்றச்சாட்டு. எழுதத் தொடங்குகிறபோதே அவனுக்கு அங்கீகாரம் கிடைத்தால் என்னாகும்? சக படைப்பாளிகள் அவனிடமிருந்து விலகிவிடுவார்கள். வைரமுத்து அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. கல்லூரியில் படிக்கிறபோதே தங்களது படைப்பு மற்றொரு கல்லூரியில் பாடநூலாக வைக்கப்பட்ட பெருமைக்குரியவர்கள் இரண்டு பேர். ஒருவர், இலக்கிய விமர்சகர் வே.மு.பொதியவெற்பன். மற்றொருவர், கவிஞர் வைரமுத்து. திரைப் பாடல்கள் எழுதத் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன, கவிதைகள் எழுதத் தொடங்கியதையும் கணக்கில்கொண்டால் வைரமுத்துவின் இலக்கியப் பயணம் அரை நூற்றாண்டைத் தாண்டியிருக்கிறது.

கவிஞன் என்ற அடையாளத்தை வலுக்கட்டாயமாகச் சுமந்து திரிபவர் வைரமுத்து. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்தால், ஓர் பேராசிரியர் வேலைக்கு உத்தரவாதம் உண்டு. அதையும் தவிர்த்தார். தலைமைச் செயலகத்தில் பணியில் சேர்ந்தால் ஓய்வுபெறும் வயதில் உயரதிகாரியாக இருந்திருக்கலாம். பாட்டெழுதுவதற்காக அதையும் விட்டு விலகினார். தீவிர இலக்கியவாதிகளும்கூட இன்று பணத்துக்காக மட்டுமே வசனம் எழுதுகிறேன் என்கிறார்கள். ‘நட்பு’ உள்ளிட்ட ஒருசில படங்களுக்கு வைரமுத்துவும் கதை வசனம் எழுதியிருக்கிறார். என்றாலும், பல லட்சம் கிடைக்கும் வசனகர்த்தா வாய்ப்பைத் தவிர்த்துப் பாடலாசிரியராகவே தனது பயணத்தை அமைத்துக்கொண்டவர். தனக்குள் இருக்கும் கவிஞனைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமல்ல, அந்த அடையாளத்தை நிலைநாட்டவும் அவர் விரும்பியதன் விளைவு அது.


கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிப் பார்த்திருக்கிறார் வைரமுத்து. மொத்தம் 37 நூல்கள். வடிவம் எதுவென்றாலும் கவித்துவம் கொப்பளிக்கும் ஓர் நடையையே அவர் தனது முத்திரையாகக் கொண்டிருக்கிறார். எதுகை மோனைகளைக் கவனமாகத் தவிர்த்து, எழுவாய் பயனிலைகளை இடம்மாற்றிப் போட்டு உரைநடைக்குள் கவிதையை வசப்படுத்த முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், இவர் ஏன் சிற்றிலக்கிய காலகட்டத்தில் உறைந்துபோயிருக்கிறார் என்று கேட்டவர்கள் உண்டு. ஆனால், நாவல் வடிவத்தையே கேள்விக்குள்ளாக்கியவர்களே காவியங்களை நோக்கி நகரும் இன்றைய காலகட்டத்தில்தான் வைரமுத்துவின் தனியடையாளம் அது என்பது புலப்படுகிறது.

வைரமுத்துவின் கவிதைகள் நீண்ட நெடிய புலவர் மரபின் தொடர்ச்சியாக அமைந்தவை. நூற்றுக்கணக்கில் சங்கப் பாடல்களும், தனிப்பாடல்களும், சிற்றிலக்கியங்களும் நினைவில் இருக்கும் ஓர் புலவனாகவே அவர் பேனா பிடிக்கிறார். புலவர் மரபின் கடைசிக்கண்ணி வைரமுத்து. மரபில் பழகியவர்கள் விருத்தத்தை விட்டு வெளியே வரவில்லை. நவீனக் கவிஞர்கள் தமிழ்க் கவிதை மரபைத் தகவல்களாகவேனும் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இப்படியொரு சூழலில், மரபிலும் நவீனத்திலும் ஒருசேரக் கவிதை எழுதுபவர்கள் இன்று எத்தனை பேர்? கோவையில் சிற்பி, திருப்பூரில் மகுடேசுவரன், புதுக்கோட்டையில் முத்துநிலவன் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். வைரமுத்து மரபுக்கும் புதுமைக்கும் பாலமாக நிற்பவர். பாரதிதாசனுக்குப் பிறகான மரபுக் கவிதைகளிலிருந்து ஒரு தேர்ந்தெடுத்த தொகுப்பை உருவாக்கினால், அவரது ‘வைகறை மேகங்கள்’, ‘என் பழைய பனை ஓலைகள்’ இரண்டும் இல்லாமல் அதை நிறைவுசெய்ய முடியாது.

வைரமுத்து ‘வானம்பாடி’களின் மேடை முழக்கத்தை இன்றும் தொடர்கிறாரே என்றொரு குரலும் ஒலிக்கிறது. உண்மையும்கூடத்தான். ஆனால், புதுக்கவிதைக்குள் மக்கள்மொழியை அவரளவுக்குப் பயன்படுத்தியவர்கள் த.பழமலய், கண்மணி குணசேகரன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட சிலரே. கவிதையில் மட்டுமல்ல, திரைப்படப் பாடல்களிலும் அவரளவுக்கு மக்கள்மொழியை இலக்கியமாக்கியவர்கள் வேறு யாருமல்லர். கண்ணதாசன் போல அவரும் அரச பட்டங்களைச் சூடிக்கொண்டாலும் உண்மையில் அவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைத்தான் பின்தொடர்கிறார். நாணத்தில் ஒடியும் குலமகள் ராதைகளுக்கிடையே ‘கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ’ எனக் கேட்கும் அந்த வீறார்ந்த குரலை வைரமுத்துவின் பாடல்களில்தான் அதிகமும் கேட்க முடிகிறது. குறிப்பாக, கிராமத்துச் சூழலில் அமைந்த பாடல்களில் ஆண்களுக்குச் சமதையாக ராங்கிகளும் வம்பிழுக்கிறார்கள். முறைப்பெண்டிருக்குப் பேச்சில் நூல்விட்டுப் பார்க்க அனுமதி உண்டுதானே? வைரமுத்துவின் பெரும்பாலான காதல் பாடல்களில் இந்தக் கூறைப் பார்க்க முடியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஓர் சமத்துவ உரையாடலை அவர் சாத்தியமாக்கியிருக்கிறார்.

முரண்தொகைகள், உவமைகள், வழக்குச் சொற்கள் என்று வைரமுத்து தான் எழுதும் மொழியின் அபார முகிழ்வுகளைக் கவித்துவத்தின் ஒரு துளியேனும் சேர்த்து, தான் எழுதும் எந்த ஒரு வடிவத்திலும் கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீரா ஆவல் கொண்டிருக்கிறார் வைரமுத்து. அவர் அளவுக்கு விரிவான பாடுபொருள்களைக் கொண்ட பரந்ததொரு கவிதையுலகம் தமிழின் மற்ற கவிஞர்களுக்கு இல்லை. ‘அயோத்திராமன் அழுகிறான்’ என்று எத்தனை பேர் கவிதையெழுதினார்கள்?

புதுக்கவிதையும் நவீனக் கவிதையும் இன்று குறுங்கவிதைகளாகக் கொட்டிக்கிடக்கின்றன. நெடுங்கவிதை மரபை இன்னும் வைரமுத்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். ‘கவிதை எனும் வார்த்தைக் கூட்டம் பற்றி’ என்ற தலைப்பில் ஆத்மாநாம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தனக்குப் பிடித்த கவிதை வரிகளை அக்கட்டுரையில் பட்டியலிட்டிருப்பார். நவீனக் கவிதைகளின் முன்னோடிகள் சற்றும் விரும்பாத பாரதிதாசனின் நான்கைந்து வரிகளும்கூட அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இன்றும் அதுபோல எந்த ரசனையை அளவுகோலாகக் கொண்டும் அப்படியொரு பட்டியலைத் தயாரித்தாலும் வைரமுத்துவின் வரிகளும் தவிர்க்க முடியாமல் அதில் இடம்பிடித்திருக்கும்.

வைரமுத்துவைப் போல் ஒரு கவிதையை யாரும் எழுதிவிடலாம். ஒரு இயக்குநர் அனுமதித்தால், அவரைப் போல ஒரு பாட்டையும்கூட எழுதிவிடலாம். ஆனால், அவரைப் போல ஒரு கவிஞனாகத் தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. பாரதிதாசன் பெருவிருப்பத்தோடு திரையுலகில் நுழைந்தார். அந்த நிழலுலகின் நடைமுறைகளில் மனம் ஒவ்வாது சோர்ந்து திரும்பினார். வைரமுத்து அதே சிக்கல்களை இன்னும் பெரிய அளவில் எதிர்கொண்டுதான் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். இது வைரமுத்துவின் சாதனை என்றால், ஒச்சம் என்று அவரது தனிப்பயணத்தைச் சொல்லலாம். பாரதிதாசன் தனது தொடர்ச்சியாக ஒரு அறிவியக்கத்தையே உருவாக்கிவிட்டுப் போனார். வைரமுத்துவோ தன்னந்தனியாகவே நடக்கிறார்; அதற்கு மேல் அவர் உருவாக்கியிருக்கும் மன்றம் ரசிகர் கூட்டம்தான். தமிழ்ப் புலவர் மரபு, பாடல்கள் இயற்றுவதோடு பாடஞ்சொல்லிக் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தது. எழுதிய கவிதைகளால் மட்டுமில்லை, மொழிக்கு அவன் கொடுத்துச் சென்ற கொடையும், உருவாக்கிச் சென்றிருக்கும் அறிவுப் பரம்பரையையும் சேர்த்தே ஒரு கவிஞன் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறான். ஆனால், காலம் இன்னும் மிச்சம் இருக்கிறது!

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

ஜூலை 13: வைரமுத்து பிறந்த நாள்


Vairamuthu birthday specialமக்கள் மொழிக் கவிஞன்வைரமுத்துகவிஞர் வைரமுத்துVairamuthu

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x