Last Updated : 22 Sep, 2015 10:50 AM

 

Published : 22 Sep 2015 10:50 AM
Last Updated : 22 Sep 2015 10:50 AM

துப்புரவுத் தொழிலாளர் குரல் கேட்கிறதா?

யாருடைய கவனிப்பும் இல்லாமல் கழிகிறது இவர்கள் வாழ்க்கை

இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசத் தொடங்கி நூறாண்டு ஆகப்போகிறது. குறைந்தபட்சம் மாநகராட்சியில் அந்தக் கடமை நிறைவேற்றப்படுகிறதா என்றால் இல்லை என்பதைத்தான் அத்தொழிலாளர்களின் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. விலைவாசி உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் நடந்தது. பல்வேறு தொழிற்சங்கங்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் பங்கேற்றன. அதேநாளில் மதுரை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களும் ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார்கள். பொதுவேலை நிறுத்தம் உள்ளிட்ட பரபரப்பான செய்திகளுக்கு மத்தியில் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம் கவனம் பெறாமல் போனது.

மாநகராட்சி துப்புரவுத் தொழிலில் தேங்கிக் கிடக்கும் ஆள் பற்றாக்குறை, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குடியிருப்பு வசதி, தொழிலாளர்களுக்கு இடையே உள்ள உறவு, வேலைப்பங்கீடு, குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம் போன்ற முக்கியக் கோரிக்கைகளை உள்ளடக்கிய போராட்டம் அது. 1981-ல் ‘மாநகராட்சிச் சட்டம்’ கொண்டுவரப்பட்டக் காலத்திலிருந்து இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் தீர்வுதான் எட்டப்படவில்லை. மதுரை மாநகராட்சியே இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்த ஒருமாநகராட்சியிலிருந்து நாட்டின் நிலைமை எப்படியிருக்கும் என்று நாம் மதிப்பிடுவோம்.

ஆள்பற்றாக்குறை - பணி நிரந்தரம்

இன்றைய கணக்குப்படி மதுரை மாநகராட்சிக்குள் மட்டும் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 14 -லிருந்து 18 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். 500 பேருக்கு 1 நிரந்தரத் தொழிலாளரும், அரை ஆள் வீதம் ஒப்பந்தத் தொழிலாளரும் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிறது 1960-ல் மத்திய அரசு பிறப்பித்த ‘துப்புரவு நிலை விசாரணைக் குழு’வின் அறிக்கை. அதன்படி பார்த்தால் 3,600 நிரந்தரத் தொழிலாளரும், 1800 ஒப்பந்தத் தொழிலாளரும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. இப்போது 1,350 நிரந்தரத் தொழிலாளரும், 850 ஒப்பந்தத் தொழிலாளரும், 750 தினக்கூலிகள் மட்டுமே துப்புரவு வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

மதுரையில், 1998-ல் 72 வட்டங்கள் இருந்தபோது 8 - 9 லட்சம் மக்கள் வசித்தார்கள். அன்றைக்கு 3,000 நிரந்தரத் தொழிலாளர்கள் பணியில் இருந்திருக்கின்றனர். 2015-ல் மக்கள்தொகை ஒரு மடங்கு அப்படியே அதிகரித்திருக்கும்போது அப்படியே தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. தனியார் ஒப்பந்தம், கூடுதல் வேலை நேரம், ஆகிய‌வற்றால் ஆட்குறைப்பு செய்து, குறைந்த தொழிலாளர்களை வைத்து ஒட்டுமொத்த மாநகராட்சியும் துப்புரவு செய்யப்படுகிறது. இதில் கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், தினக்கூலியாகவும் இருக்கிற 751 பேரை இது வரையிலும் நிரந்தரப்படுத்தவில்லை.

இதனால் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே பயனடை கிறார்கள். எப்படி என்றால் மதுரைமாநகராட்சியில் மட்டும் 800 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக ‘ஒப்பந்ததாரர் பணிக் குறிப்பேடு’ சொல்கிறது. இந்தக் கணக்கை வைத்துதான் மாமன்றமும் அவர்களுக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால் வார்டுகளுக்கு நேரடியாகச் சென்றுப் பார்த்தால் ஒரு வார்டுக்கு மூன்றரை பேர்தான் பணி செய்கிறார்கள். அதாவது 100 வார்டுகளிலும் 400-லிருந்து 425 பேர் கணக்கு வருகிறது. மீதமுள்ள பணியாள் கணக்கில் என்ன நடக்கிறது என்பது மாநகராட்சிகளுக்கே வெளிச்சம்.

குறைந்தபட்ச ஊதியம் - சம்பள‌ உயர்வு

பொதுவாக ஊதியக்குழுக் கோரிக்கைகளில் முதல்நிலைப் பணியாளர்களின் சம்பள உயர்வுதான் பிரதானமாகப் பேசப்படுகிறது. கடைநிலைப் பணியாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையைத் தொழிற்சங்கங்கள்கூடப் பொருட்டாகப் பேசுவது கிடையாது.

துப்புரவுத் தொழிலில் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் 3 ஆண்டுகள் ஒருவர் பணிசெய்திருந்தால் சிறப்புக்கால முறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என அரசாணை 385 சொல்கிறது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ‘ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை’ அரசுச் செயலர் 7.5.2013-ல் புதிய உத்தரவையும் பிறப்பித்துவிட்டார். இந்த உத்தரவின்படி மற்ற எல்லாத் துறைகளிலும் 2010 அக்டோபர் 1 முதல் அனைவரையும் பணி நிரந்தரம்செய்து, சம்பள‌ உயர்வும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், மாநகராட்சிகளின் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் அவர்களின் சம்பள‌ உயர்வுக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இன்னமும் கிடப்பில் இருக்கிறது.

தனியார் ஒப்பந்தத்தில் தினக்கூலியாக வேலை செய்பவருக்கு 2014 ஜூலை 1-ன்படி ஒரு நாளைக்கு ரூ. 205 வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் உத்தரவு சொல்கிறது. ஆனால் நடைமுறையில் வெறும் ரூ. 80-லிருந்து ரூ. 120தான் வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ன்படி இந்தத் தொகையை ஒரு நாளைக்கு ரூ. 226 என உயர்த்திய பிறகும் கூட ரூ.120-லிருந்து ரூ. 150 தான் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் மீதித் தொகை ஒப்பந்ததாரரின் சேவைக் கட்டணம் என்கிறார்கள். ஆனால் ஒரு தினக்கூலியிடம் பிடித்தம் செய்ய அனுமதிக்கப்பட்ட சேவைக்கட்டணம் ரூ.15 தான்.

இத்தகைய ஊழல் குளறுபடிகளைக் கண்டறிந்து தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில அமைப்பாளர் டாக்டர் கொண்டவெள்ளை 2014 ஜூலை 1-ல் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் இதுவரை நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி பிடித்தம் செய்யப்பட்ட அனைத்து நிலுவையையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்தத் தொழிலாளர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

மாநகராட்சியைப் போலவே துப்புரவுத் தொழிலாளர் பற்றாக்குறையுள்ள கிராம ஊராட்சிகளில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என 2013-ல் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் அறிவிப்புச் செய்தார். அதன்படி 16,726 புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய அம்சம். ஆனால் அவர்களுக்குத் தொகுப்பூதியமாக அறிவிக்கப்பட்டது ரூ. 2,000 தான். இது எந்த ஊர் நியாயம்?

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் இது மட்டும்தான் அவர்களின் பிரச்சினையா என்றால் இல்லை. இதுபோக பணிக்கொடை ஊதியம், வேலை நியமனத் தடை நீக்கம், தனி நபர் காப்பீட்டுத் திட்டம், தனியார்மய எதிர்ப்பு, எட்டு மணிநேர வேலை, மாதம் ஒருமுறை இலவச மருத்துவ உடல் பரிசோதனை, மானியக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை, இதிலிருந்து முற்றாக விடைபெற்று சுய தொழில் தொடங்கக் கடன் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

திறந்த மனதுடன் குரல் கொடுக்கவும், போராடவும்தான் குடிமைச் சமூகத்தின் மனசாட்சி முன்வருவதில்லை.

- அன்புசெல்வம் | ஆய்வாளர், எழுத்தாளர் - தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x