Published : 09 Jul 2020 06:40 AM
Last Updated : 09 Jul 2020 06:40 AM

‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்!

திரைப் பாடல் வரிகள் கதாநாயகனின் காதல் ஏக்கத்தை மட்டுமல்ல, நாம் வாழும் சமூகத்தில் நிலவும் பொதுக் கருத்துகளையும் சேர்த்தே எதிரொலிக்கின்றன. ‘ப்ரியமுடன்’ படத்தில் ஒரு பாடல். ‘உன் ஃபேர் அண்ட் லவ்லி வாசம், என் பேரைச் சொல்லி வீசும்’ என்று பாடுவான் நாயகன். பெண் என்றால் ஏதோ ஒரு க்ரீமை அள்ளி முகத்தின் மீது பூசிக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. ‘ஃபேர் அண்ட் லவ்லி’ இப்போது ‘க்ளோவ் அண்ட் லவ்லி’யாகப் பெயர் மாறியிருக்கிறது. ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ப்ளாய்ட் நிறவெறிக்குப் பலியானதை அடுத்து, உலகளவில் நிறவேற்றுமைக்கு எதிராக உருவாகிவரும் விழிப்புணர்வின் அடையாளமாக இந்தப் பெயர் மாற்றம் சித்தரிக்கப்படுகிறது.

சருமத்தை வெள்ளை நிறமாக்கும் முகப்பூச்சுத் தயாரிப்புகளை கிழக்காசிய, மத்திய ஆசிய மற்றும் இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். அந்நிறுவனத்தின் முடிவு, அதன் போட்டி நிறுவனங்களுக்கும் அத்தகையதொரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியச் சந்தையில் முகப்பூச்சுத் தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கிறது ‘ஃபேர் அண்ட் லவ்லி’. பிரிட்டிஷ்-டச்சு பன்னாட்டு நிறுவனமான யுனிலீவரின் இந்தியப் பிரிவான ஹிந்துஸ்தான் யுனிலீவரின் தயாரிப்பு அது. இனிமேல், தோற்ற அழகைக் குறிக்கும் ஃபேர், வெண்மையைக் குறிக்கும் ஒயிட்டனிங், பளபளப்பைக் குறிக்கும் லைட்டனிங் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்று ஹிந்துஸ்தான் யுனிலீவர் அறிவித்ததையடுத்து ‘ஃபேர் அண்ட் லவ்லி’யும் பெயர் மாறியிருக்கிறது. இது பெயரளவிலான மாற்றம்தானேயொழிய அதன் உட்கருத்து மாறவில்லை. பளபளப்பைக் குறிக்கும் க்ளோவ் என்ற வார்த்தையும் வெள்ளை நிறத்தைக் குறிக்கும் ஃபேர் என்ற வார்த்தையைப் போலவே இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மிகப் பெரும் அழகுச் சந்தை

தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சருமத்தை வெள்ளை நிறமாக்கும் முகப்பூச்சுகளுக்கு மிகப் பெரிய சந்தையிருக்கிறது. இந்தியாவில் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ மட்டுமே கடந்த ஆண்டில் சுமார் ரூ.4,100 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது. ஆசியர்களிடம் நிலவும் நிறம் குறித்த தாழ்வுணர்ச்சியே இந்த முகப்பூச்சுத் தயாரிப்புகளுக்கான முக்கிய மூலதனம். எதிர்பாலின ஈர்ப்போடு நிறம் குறித்த சுயவெறுப்பும் சேர்த்து பதின்பருவத்தினரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன. 12 வயதுப் பள்ளி மாணவியின் புத்தகப் பையில் முகப்பூச்சுகள் இருப்பதற்கான காரணம், இந்த உளவியல் சிக்கல்தான். சமீப ஆண்டுகளில், இந்தியாவில் சரும நிறத்தை மாற்றிக்கொள்வதற்கான அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும்கூட அதிகரித்துவருகின்றன.

இன்னொரு பக்கம் இந்தத் தாழ்வுணர்விலிருந்து மீட்டெடுக்கும் பிரச்சாரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாரா நிறுவனமொன்று முன்னெடுத்த ‘கருப்பு என்பது அழகின் நிறம்’ இயக்கமானது திரைக் கலைஞர் நந்திதா தாஸின் பங்கேற்புக்குப் பிறகு பிரபலமானது. “சருமப் பராமரிப்பு முகப்பூச்சு விளம்பரங்களால் தன்னம்பிக்கை குறைவான பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ‘நீங்கள் திருப்திகரமான வகையில் இல்லை, உங்களுக்குக் காதலனோ கணவனோ அவ்வளவு எளிதில் கிடைக்க மாட்டார்கள், வேலையும்கூட எளிதில் கிடைக்காது. உங்கள் பெற்றோர்களையும்கூட நீங்கள் துயரத்தில் ஆழ்த்துகிறீர்கள்’. இத்தகைய விளம்பரங்கள் சொல்லும் இந்தச் செய்திகள் மிக ஆபத்தானவை” என்று சாடினார் நந்திதா தாஸ். அவரைத் தொடர்ந்து அபய் தியோல் போன்ற சில நடிகர்களும் குரல்கொடுத்தார்கள். பிரபல நடிகர்கள் முகப்பூச்சு விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்றும்கூட இந்த இயக்கத்தினரால் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

முகப்பூச்சு விளம்பரங்களில் நடிப்பதைச் சிலர் தவிர்க்கவும் செய்தார்கள். அத்தகைய ஒரு விளம்பரத்தில் நடித்தால் ரூ.2 கோடி ஊதியம் கிடைக்கும் என்ற நிலையில், அது தனது கருத்துக்கு மாறானது என்று கூறி, அந்த வாய்ப்பை மறுத்தார் நடனக் கலைஞரும் மருத்துவருமான சாய்பல்லவி. பிரபல தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி, முகப்பூச்சு விளம்பரங்களை ஒளிபரப்புவதில்லை என்று 2015-ல் உறுதிபட அறிவித்தது.

இணையவெளி இயக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ‘அன்பேர்அண்ட்லவ்லி’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, இணையவெளியில் ஒரு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படித்த 21 வயது மாணவி பாக்ஸ் ஜோன்ஸ், தனது தெற்காசியத் தோழியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுத் தொடங்கிவைத்த இந்தப் பிரச்சாரம் பெருந்தீயாகப் பற்றிப் படர்ந்தது. இந்தியப் பெண்கள் பலரும் தங்களது புகைப்படங்களைப் பதிவிட்டு இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் விளைவாக, முகப்பூச்சுகளைப் பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் மாறுவதைப் போல காட்டப்படும் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ விளம்பரங்கள் கடந்த ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பட்டன.

தற்போது ‘ஃபேர் அண்ட் லவ்லி’யின் பெயர் மாற்றத்துக்குக் கூறப்படாத ஒரு காரணமும் உண்டு. கடந்த பிப்ரவரியில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது. 1954-ன் மருந்துகள் மற்றும் மாயத் தீர்வுகள் (ஆட்சேபகரமான விளம்பரங்கள்) சட்டத்தின்கீழ் சருமத்தின் நிறத்தை மாற்றுவது, பாலியல் சக்தியை அதிகப்படுத்துவது, மகப்பேறின்மைக்கு சிகிச்சை, மூளைத் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட 78 வகையான நோய்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகள் அளிப்பதாய் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான சட்டத் திருத்தம் அது. முகப்பூச்சு விளம்பரங்களைத் தாண்டி, வேறு சில நல்ல விளைவுகளையும் இப்போது பார்க்க முடிகிறது. பிரபல திருமணச் சேவை இணையதளமான ‘சாதி டாட் காம்’, நிறத்தின் அடிப்படையில் மணமக்களைத் தேடும் வசதிகளை நிறுத்தியுள்ளது என்பது அவற்றில் முக்கியமானதொன்று. இணையம் வழியிலான கையெழுத்து இயக்கமே இந்த மாற்றத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறது.

நிறத்தோற்ற மாயை

இந்தியாவில் கருப்பு, வெள்ளை என வெளிப்படையான நிற வேற்றுமைகள் இல்லாதிருக்கலாம். ஆனால், பழுப்பு நிறத்தின் விகிதாச்சாரம் தனிமனிதன், குடும்பம், சமூகம் என்று எல்லா நிலைகளிலும் சகல உறவுகளிலும் முக்கிய வினையாற்றுகிறது என்ற உண்மை மறுக்க முடியாதது. ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி வெகுபிரசித்தம். மாதவன் கதாநாயகனாக நடித்த அந்தத் திரைப்படத்துக்கு ‘ஃபேர் அண்ட் லவ்லி’ விளம்பரக் கூட்டாளியாக இருந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆண்களுக்கான முகப்பூச்சுகளை அறிமுகப்படுத்தும் விளம்பரமாக அந்தத் திரைப்படத்தையொட்டி போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்த நிறத்தோற்ற மாயைக்கு ஆண்களும் விதிவிலக்கல்ல. ஆனாலும், பெண்களே முக்கிய இலக்கு. நிறம் மட்டுமில்லை, பெண்களுக்கு உடல் மெலிவும் அழகென்று உபதேசிக்கப்படுகிற நாடு இது. சரிபாதிக்கும் மேற்பட்ட பெண்கள் ரத்தசோகைக்கு ஆளாகியிருக்கும் நாட்டில், உடல் மெலிவுக்கான விளம்பரங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்பது முரண்நகைதான். அடுத்து, பெண்களின் சருமத்தில் முடிகளை நீக்குவதற்கான பூச்சுகளுக்கும் ஒரு சந்தை உருவாகிக்கொண்டிருக்கிறது.

அழகு என்பதற்குப் பொது வரையறைகள் எதுவுமில்லை. மண்ணில் பிறப்பெடுக்கும் எந்த உயிரும் எதிர்பாலினரை ஈர்க்க ஏதோவொரு தனித்துவத்தைத் தன்பால் இயற்கையிலேயே கொண்டிருக்கிறது. இனத்தைப் பெருக்கும் உயிரின் இயல்புக்கு அதுவே ஆதாரம்.

– செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x