Published : 08 Jul 2020 08:04 am

Updated : 08 Jul 2020 08:04 am

 

Published : 08 Jul 2020 08:04 AM
Last Updated : 08 Jul 2020 08:04 AM

ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு

business-affected-by-lockdown

விவசாயிகள் உற்பத்தி செய்கிற பஞ்சை நூலாக்கி, துணியாக்கி, சாயமேற்றி, ஆடையாக்குகிற ஜவுளித் துறை சுமார் 6 கோடிப் பேருக்கு வேலை அளிப்பதுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 13% பங்களிக்கிறது. நூல், ஆயத்த ஆடை, கைத்தறி உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, இந்த ஊரடங்குக் காலத்தில் எப்படியிருக்கிறது? அந்தத் தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? பேசலாம்.

கிருஷ்ணமூர்த்தி, பட்டு நெசவாளர், காஞ்சிபுரம்.


நாட்டிலேயே பட்டுக்குப் பேர்போன காஞ்சியில் மட்டும் பட்டு நெசவுத் தொழிலை நம்பி 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 22 கூட்டுறவுக் கடைகளும், நூற்றுக்கும் அதிகமான தனியார் கடைகளும் இயங்குகின்றன. ஊரடங்கு போடும் முன்பே, கரோனா பீதி காஞ்சி நோக்கி வருவோர் வருகையைக் குறைத்துவிட்டிருந்த நிலையில், இந்த ஊரடங்கு எங்கள் தொழிலை வீழ்த்திவிட்டது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் தேங்கிவிட்டது. எல்லோரும் வேலையிழந்து நிற்கிறார்கள். நெசவாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த உறுப்பினர்களுக்கு 2 மாதங்கள் தலா ஆயிரம் நிவாரணமாக வழங்கியது அரசு. பிறகு, பதிவுசெய்யாதவர்களுக்கும் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார்கள். ஆனாலும், எல்லோருக்கும் இந்த நிதி போய்ச்சேரவில்லை. ஒரு நெசவாளர் தினமும் குறைந்தபட்சம் 300 முதல் 700 வரையில் சம்பாதிப்பார். ஒட்டுமொத்தமாக மாதத்துக்கே ஆயிரம்தான் நிவாரணம் என்றால், குடும்பங்கள் என்னவாகும்? தமிழ்நாடு முழுக்கக் கைத்தறி, பெடல்தறி, விசைத்தறி நெசவாளர்களின் நிலை இன்னும் மோசம்.

பிரபு தாமோதரன், நூற்பாலை உரிமையாளர், கோவை.

பருத்தி நூல் மற்றும் செயற்கை இழை தயாரிப்பில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. கலப்பு நூல் தயாரிப்பில் இரண்டாம் இடம். எங்களது இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பில் உள்ள 500 தொழில் முனைவோரில் 320 பேர் ‘ஸ்பின்னிங் மில்’ நடத்துபவர்கள்தான். ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு, வேலையைத் தொடங்கிவிட்டோம் என்றாலும், ஏற்கெனவே இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் சிரமப்பட்டோம்; பிறகு, மற்ற வேலைகளை இழந்த உள்ளூர்க்காரர்களை வைத்துச் சமாளிக்கத் தொடங்கினோம். இருந்தாலும், எல்லா ஆலைகளும் இயங்குவதாகச் சொல்ல முடியாது. ஏற்றுமதியிலும் சிக்கல் இருக்கிறது. டிமாண்ட் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்தே மில்களை ஓட்டுகிறோம். கரோனா முடிவுக்கு வந்தால்தான் பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும். அது எப்போது என்பது தெரியவில்லை; ஊரடங்கையாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

யுவராஜ் சம்பத், பனியன் தயாரிப்பாளர், திருப்பூர்.

திருப்பூரில் பெரிதும் சிறிதும் குடிசைத் தொழிலாகவும் சுமார் 20 ஆயிரம் யூனிட்கள் செயல்படுகின்றன. உற்பத்தியான ஆடைகளை விற்க முடியவில்லை. எனவே, மறுபடியும் உற்பத்தியை முழு வீச்சில் தொடங்க முடியவில்லை. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குப் பதில் உள்ளூர் ஆட்களைப் பயன்படுத்தி வேலை வாங்குவதில் சிரமம் இருக்கிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமிருப்பதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களைத் திரும்ப அழைத்து முன்புபோல தங்க வைத்துக்கொள்ளவும் முடியாத சூழல். ஏற்றுமதியின் பக்கம் பார்வையைத் திருப்பிய எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 10% வளர்ச்சியை எட்டிய திருப்பூர் இன்றைக்கு ரூ.30,000 கோடியை எட்டியிருக்கிறது. ஆனால், கடைசி 10 ஆண்டுகளில் ஏற்றுமதியில் முன்னேற்றம் இல்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பருத்தி ஆடைகளுக்கான இறக்குமதி வரி விலக்கைப் பல நாடுகள் ரத்துசெய்ததும், இந்தியாவுக்குப் பதில் அந்தச் சலுகைகள் வங்கதேசத்துக்கு அளிக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இந்த கரோனா காலத்தில், இந்திய அரசு 9% வட்டியில் வங்கிக்கடன் தருகிறது. ஆனால், வங்கதேசத்தில் 4.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால், சர்வதேசச் சந்தையில் திருப்பூருக்கான இடம் பறிபோய்விடும்.

ஹனீபா, ஆயத்த ஆடை தயாரிப்பாளர், புத்தாநத்தம்.

சிறு கிராமம் ஒன்று ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணியில் நிற்க முடியும் என்பதற்கு உதாரணம், திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் கிராமம். மும்பை, சூரத், அஹமதாபாத் போன்ற ஊர்களிலிருந்து துணிகளை வாங்கி, ஆண்கள், குழந்தைகள், பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் 300 நிறுவனங்கள் இங்கே செயல்படுகின்றன. சுமார் 5,000 பேர் வேலை பார்க்கிறார்கள். நிறைய பேர் வெளியூர்களில் கடை போட்டு வியாபாரமும் செய்கிறார்கள். நான் மதுரையில் கடை போட்டிருக்கிறேன். யாருக்கும் வியாபாரமில்லை. எனவே, உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, நிறைய பேர் வேலை இழந்திருக்கிறார்கள். சம்பளமும் போட முடியவில்லை. வங்கிக் கடன் தருவதாக அரசு சொல்கிறது. வங்கியில் போய் கேட்டால், எந்த உத்தரவும் எங்களுக்கு எழுத்துபூர்வமாக வரவில்லை என்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு.

அ.மணிகண்டன், நைட்டி - உள்ளாடை உற்பத்தியாளர், தளவாய்புரம்.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை மையமாக வைத்து, சுமார் 20 ஆயிரம் பேர் வீட்டில் இருந்தபடியே நைட்டி மற்றும் பெண்கள் உள்ளாடை தயாரிப்பில் ஈடுபடுகிறோம். வட மாநிலங்களிலிருந்து மொத்தமாகத் துணிகளை வாங்கி, ஆண்களிடம் கொடுத்து வெட்டி, வீடு வீடாகப் பெண்களிடம் கொடுத்துத் தைப்பார்கள். ஒரு மாடலைப் பொறுத்து நைட்டிக்கு 6 முதல் 12 ரூபாயும், பாவாடைக்கு 1.50 முதல் 2 ரூபாயும் கூலி. அதுவே வெட்டி மட்டும் கொடுப்பது என்றால், நைட்டிக்கு 100 முதல் 175 பைசா, பாவாடைக்கு 60 முதல் 80 பைசா. எப்படிப் பார்த்தாலும் வீட்டில் இருந்தே 300 முதல் 500 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும். எல்லா வேலைகளும் முடங்கிவிட்டன. நைட்டி மட்டும் ஓரளவுக்கு விற்பதால், ஓரளவு வேலையும் நடக்கிறது. மற்றவையெல்லாம் தேங்கிவிட்டன. எனவே, சிலர் மாஸ்க் தைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய அடி கேரள வியாபாரிகளுக்குத்தான். இந்தப் பகுதியைச் சேர்ந்த 1,500 பேர் கேரளாவுக்கு நைட்டியைக் கொண்டுபோய் வீடு வீடாக விற்று, வாரந்தோறும் பணம் வசூலிப்பார்கள். மார்ச் முதல் வாரத்திலேயே அங்கே ஊரடங்கு வந்துவிட்டதால், இவர்களால் அங்கே போக முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியின்றித் தவிக்கிறார்கள்.

பிரபாகரன், ஆயத்த ஆடை தயாரிப்பாளர், மதுரை.

இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை நிறுவனங்களில் பாதி தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. சுமார் 6.5 லட்சம் பேருக்கு வேலை தருகின்றன. மதுரையில் மட்டும் சுமார் 180 ஆயத்த ஆடை நிறுவனங்கள் இருந்தன. 2009-10ல் 16 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. மீதியிருந்தவை பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இப்போது கரோனா. மதுரையில் ஊரடங்குக்குள் ஊரடங்கு வேறு. திருப்பூர் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை பார்ப்பவர்கள். மதுரையில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் காலையில் வீட்டு வேலையை முடித்துவிட்டுத் துணி தைக்க வருகிற பெண்கள். இப்படி 2 லட்சம் பெண்கள் வேலையிழந்திருக்கிறார்கள். வங்கிகள் வட்டியில்லா கடன் கொடுத்ததால், முதல் இரண்டு மாதங்கள் வேலையில்லாமலேயே தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுத்தோம். பிறகு, பிஎஃப் பணத்திலிருந்து அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தோம். இனியும் ஊரடங்கு தொடர்ந்தால் எதுவும் செய்ய முடியாது. ஜவுளிக் கடைகளுக்கு சட்டைகளைக் கடனுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு வசூலிப்பது வழக்கம். கல்யாணமும் இல்லை, விழாக்களும் இல்லை என்பதால், ரம்ஜான், கோடை விடுமுறைக்கென வாங்கிய துணிகளையே விற்க முடியாமல் வைத்திருக்கிறார்கள். அதனால், நாங்கள் உற்பத்திசெய்தவற்றை விற்கவும் முடியவில்லை. கடனை வசூலிக்கவும் முடியவில்லை.

தொகுப்பு: கா.சு.வேலாயுதம், கே.கே.மகேஷ்


ஊரடங்குBusinessLockdownவிவசாயிகள்ஜவுளித் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x