

தமிழகத்தில் தினமும் சராசரியாக மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவரும் சூழலிலும் ‘சமூகப்பரவல்’ குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதில் பத்தில் ஒரு மடங்கு தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டதுமே சமூகப்பரவல் குறித்துப் பேசுகிறது கேரளம். அதிலும் மாநில அமைச்சரே அதுகுறித்து எச்சரிக்கிறார்.
கேரளத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா மீண்டும் கொஞ்சம் எழும்பவே, ‘திருவனந்தபுரத்தில் ட்ரிபிள் லாக்டவுன், முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம், ஒரு வருடத்திற்குப் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை’ என நீள்கிறது கேரளத்தின் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பட்டியல். இருந்தும் வளைகுடா நாடுகள், சென்னை, மும்பையில் இருந்து தாயகம் திரும்பும் மலையாளிகளால் அங்கே கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது.
கரோனாவைத் தாண்டி இதை இன்னும் கொஞ்சம் நுட்பமாக அணுகினால் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 2021 மே மாதத்தில் கேரளத்தில் புதிய அரசு அமையவேண்டும். அதே நேரத்தில் கேரள அரசு பொதுக் கூட்டங்களை நடத்தவும், ஆர்ப்பாட்டம், போராட்டம் என ஒன்றிணையவும் அடுத்த ஆண்டு ஜூலை வரையிலும் தடை விதித்துள்ளது.
அப்படியெனில் கூட்டமே கூடாமல், பிரச்சாரமே செய்யாமல், மேடையே அமைக்காமல், மக்களை குழுவாகச் சென்று சந்திக்காமல் தேர்தலையும் எதிர்கொள்ளப் போகிறார்களா கேரள அரசியல்வாதிகள்? மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட், கேரளத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக என இதில் யாருக்கு லாபம் என்ற அரசியல் கணக்கும் இதற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
கேரளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 225 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 22 பேர் மாநில தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கரோனா தொற்றாளர்களின் தினசரிப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இது சுண்டைக்காய்தான். ஆனாலும் கேரளம் அசட்டையாக இல்லை.
மாநில சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்” எனவும் எச்சரித்திருந்தார். இப்படியான சூழலில்தான் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு ட்ரிபிள் லாக்டவுனை அமல்படுத்தியது கேரளம்.
அது என்ன ட்ரிபிள் லாக்டவுன்?
திருவனந்தபுரத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய மருத்துவத் தேவையின்றி எவ்வித சாலைப் பயணத்துக்கும் அனுமதி இல்லை. அனைத்துச் சாலைகளும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. தலைமைச் செயலகம் உள்பட எந்த அரசு அலுவலகமும் திறக்கப்படவில்லை. இந்த ஒருவார காலத்துக்கும் மிக அவசியமான பணிகளை முதல்வர் பினராயி விஜயன் தன் வீட்டில் இருந்தே கவனித்துக் கொள்வார் என அறிவித்துள்ளது முதல்வர் அலுவலகம். மும்மடங்கு ஊரடங்கின் முதல் நிலை இது!
அதனைத் தொடர்ந்து கரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் நோயாளிகளோடு நேரடித் தொடர்பில் இருந்தவர்களையும், அப்படித் தொடர்பில் இருந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் காண்பதோடு அந்தப் பகுதிகளை இழுத்துப் பூட்டுவதன் மூலம் மற்றவருக்குத் தொற்று பரவாமல் தடுப்பது, நோயாளியின் வீட்டைப் பூட்டுவதன் மூலம் சமூகப் பரவலைத் தடுப்பது ஆகியவையே ட்ரிபிள் லாக்டவுனின் செயல்பாடுகளாக இருக்கும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துத் தேவைக்குப் போலீஸாரைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறது திருவனந்தபுரம்?
திருவனந்தபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த ட்ரிபிள் லாக்டவுனால் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மத்திய - மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை இயங்கவில்லை. பொதுப் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. அதேபோல் கேரளத்தில் முக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம், தொடர்ந்து அதே தவறைச் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை என அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது கேரள அரசு. திருவனந்தபுரம், மலப்புரம் மாவட்டத்தின் பொன்னானி பகுதிகள் கரோனா சமூகப் பரவல் அபாயம் இருக்கும் பகுதிகளாக அறியப்பட்டுள்ளன.
இதனிடையில் கடந்த 3-ம் தேதி, கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சொல்லப்பட்ட பல்வேறு விஷயங்களின் ஊடே, ‘கேரளத்தில் கரோனா விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜூலை வரை நடைமுறையில் இருக்கும் அல்லது மறு உத்தரவு வரும்வரை நடைமுறையில் இருக்கும்’ என்ற முக்கியக் குறிப்பும் இருந்தது. இதைச் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள் மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டிய சூழலில் இது எப்படிச் சாத்தியம்? பொதுக்கூட்டம் இல்லாமலே தேர்தல் சாத்தியமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
கோட்டை விட்டாரா ராகுல் காந்தி?
ராகுல் காந்தியை வடக்கு கைவிட்ட போதும் தாங்கிப்பிடித்தது தெற்கின் கேரளம்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் காங்கிரஸ் அதிக எம்.பி.க்களை வென்றதும் கேரளத்தில்தான். மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வலுவான எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் இருக்கிறது. கரோனா தொற்று தேசம் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த வயநாடு தொகுதிப் பக்கமே ராகுல் காந்தி வரவில்லை. இருப்பினும் டெல்லியில் இருந்தவாறே கட்சியினர் மூலம் தனது தொகுதிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். இருந்தும் களத்தில் ராகுல் இல்லை.
அதேபோல் கேரள முதல்வராக உம்மன் சாண்டி இருந்தபோது, அப்துல் கலாம் கரங்களினால் கேரளத்தில் கல்விக்காக ‘விக்டர்ஸ்’ என்னும் பெயரில் பிரத்யேக சேனல் ஒன்று தொடங்கப்பட்டது. கரோனா சமயத்தில் வீட்டில் இருந்து விக்டர்ஸ் வழியாக மாணவ, மாணவிகள் பாடங்களைக் கற்கின்றனர். ராகுல் காந்தியின் செலவில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவரது கட்சியினர் மூலம் டிவியும் வழங்கப்படுகிறது.
“ராகுல் வந்தால் அவர் பின்னால் நிறைய கட்சிக்காரர்கள் செல்வார்கள். அது கூட்டமாக மாறும். இப்போதைய சூழலில் அது தேவையில்லாமல் தொற்றுப் பரவலுக்கு வழிவகுத்துவிடும் என்பதால்தான் அவர் நேரடியாக வரவில்லை. மற்றபடி இணையவழியில் மக்களோடு அடிக்கடி உரையாடுகிறார்” என்கின்றனர் காங்கிரஸ் தரப்பினர்.
எப்படியிருக்கும் தேர்தல்?
ஆளுநரின் அறிக்கைப்படி கரோனா நடத்தை விதிகள் கேரளத்தில் இன்னும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கும் பட்சத்தில் அது யாருக்குச் சாதகமாக அமையும் என்பதே அரசியல் கணிப்பாளர்களின் கேள்வியாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முகக்கவசம், தனிமனித இடைவெளியோடு தினமும் போராடிவந்த மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இது ஆபத்தானதுதான். மார்க்சிஸ்ட் கட்சி செய்வதையெல்லாம் குறைசொல்லிக் கூட்டம்போட்ட காங்கிரஸ், சபரிமலை விவகாரத்தைக் கையில் எடுத்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது.
இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியைப் பலவீனப்படுத்தியதாலேயே காங்கிரஸின் வெற்றி எளிதானது. ஆக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் மீதான தடை நீட்டிப்பு யாருக்கு சாதகமானது என்பது ஊகிக்க முடியாத நிலையில் உள்ளது.
சமூக வலைதளங்களே வரும் தேர்தலில் பிரச்சாரத்தின் மையமாக இருக்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இடதுசாரிகளும் இப்போது அதை நோக்கியே ஓடுகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முகநூல் பக்கத்தை மட்டும் 12.5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். முதல்வர் செய்தியாளர்களைச் சந்திப்பதை அவரது முகநூல் பக்கமே நேரலை செய்கிறது. பிரதானக் காட்சி ஊடகங்களுக்கு இணையாக அவரது முகநூல் பக்கத்தில் நேரலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவின் முகநூல் பக்கத்தை ஏழரை லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூரை 13 லட்சம் பேர் அவரது முகநூல் பக்கத்தில் பின்தொடர்கின்றார்.
இந்திய அளவில் படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் இணையத்தை மையப்படுத்தியேதான் இருக்கும் என்று ஆரூடம் சொல்பவர்கள், அதற்குக் கரோனாவே முக்கியக் காரணமாக இருக்கும் என்கிறார்கள்.