Published : 06 Jul 2020 08:02 AM
Last Updated : 06 Jul 2020 08:02 AM

யாரால் கரோனா பரவுகிறது?

கார்ல் சிம்மர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மே 30 அன்று நடந்த ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒருவர், தனது குடும்பத்தினர் 17 பேருக்கு கரோனாவைப் பரப்பியிருக்கிறார். இதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது, இந்த வைரஸ் போகும் இடமெல்லாம் காட்டுத் தீயைப் போல பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மற்ற தரவுகளும் செய்திகளும் முற்றிலும் வேறான சித்திரத்தைத் தருகின்றன.

இந்த வைரஸின் தொடக்க நிலைத் தடத்தைக் கண்டறிவதற்காகப் புட்டிகளில் அடைக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை இத்தாலியில் அறிவியலாளர்கள் ஆய்வுசெய்தார்கள். கரோனா வைரஸ் இத்தாலியின் ட்யூரிங், மிலன் ஆகிய நகரங்களில் டிசம்பர் 18 அளவிலேயே வந்துவிட்டிருந்ததாக அவர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வடக்கு இத்தாலியின் மருத்துவமனைகள் இரண்டு மாதம் கழித்துத்தான் கரோனா நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் டிசம்பர் மாத வைரஸ்கள் வலுவிழந்துபோனதாகத் தோன்றுகிறது.

யார் தொற்றை ஏற்படுத்துகிறார்கள்?

இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், இந்த அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. கரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் பிறருக்குத் தொற்று ஏற்படுத்துவதில்லை. அதிகமானவர்களுக்குத் தொற்று ஏற்படுத்தும் சாத்தியமுள்ள பெரும் பரவல் (சூப்பர்ஸ்ப்ரெடிங்) நிகழ்வுகள் மூலமாகச் சிறிய எண்ணிக்கையிலானவர்கள்தான் பிறருக்கு நோய்த் தொற்றைப் பரப்புகிறார்கள்.

“விறகுக் குச்சியின் மீது தீக்குச்சியைக் கொளுத்திப்போடுவதுடன் இதை ஒப்பிடலாம். ஒரு தீக்குச்சியை எறிவீர்கள், அது விறகுக் குச்சியைப் பற்ற வைக்காமல் போகலாம், இன்னொரு தீக்குச்சியை எறிவீர்கள் விறகு பற்றாமல் போகலாம். அப்புறம் சரியான இடத்தில் ஒரு தீக்குச்சி வந்து விழவும் சட்டென்று தீ பற்றிக்கொள்கிறது” என்கிறார் அமெரிக்காவின் பெல்வியூ நகரில் உள்ள ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஸீஸ் மாடலிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த பென் அல்தூஸ். ஏன் சில தீக்குச்சிகள் தீயைப் பற்றவைக்கின்றன, ஏன் பல தீக்குச்சிகள் தீயைப் பற்ற வைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வது இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம்.

சீனாவில் இந்த வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்தபோது, அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எப்படிப் பரவுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு தொற்றுநோயியலாளர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தொற்றாளரும் சராசரியாக எத்தனை பேருக்குத் தொற்றைப் பரப்பிவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதுதான் அவர்களின் ஆரம்பக் கட்டப் பணிகளுள் ஒன்றாக இருந்தது. இதைத் தொற்றுநோயியலாளர்கள் ‘தொற்றுப்பெருக்க எண்’ (ரீபுரொடக்டிவ் நம்பர்) என்று அழைப்பார்கள்.

கரோனா வைரஸின் ‘தொற்றுப்பெருக்க எண்’ இரண்டுக்கும் மூன்றுக்கும் இடையே அமைந்துள்ளது. பொதுமுடக்கம் கொண்டுவந்ததால் அமெரிக்காவின் மாசசூஸிட்ஸ் மாநிலத்தின் ‘தொற்றுப்பெருக்க எண்’ மார்ச் தொடக்கத்தில் 2.2-ஆக இருந்து, அந்த மாதத்தின் முடிவில் 1-ஆகக் குறைந்தது; தற்போது அது 0.74-ஆக இருக்கிறது.

பத்து பேரில் ஒன்பது பேர் யாருக்கும் வைரஸைப் பரப்பாமல் இருந்து, பத்தாவது ஆள் இருபது பேருக்குப் பரப்பினால் அந்தச் சராசரி இப்போதும் 2-ஆகத்தான் இருக்கும். இன்ஃப்ளூயென்சா, பெரியம்மை போன்ற நோய்களைப் பொறுத்தவரை அவை பரவும் வேகம் குறைவே. ஆனால், தட்டம்மை, சார்ஸ் போன்றவை மளமளவென்று பரவக் கூடியவையாகும். மிகச் சில தொற்றாளர்கள் பலருக்கும் அந்த நோய்களைப் பரப்பிவிடுவார்கள்.

ஒரு விநோத உண்மை

கரோனா தொற்றானது ஃப்ளூகாய்ச்சல் போன்று இருந்தால் வெவ்வேறு இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலானவர்களுக்குப் பரவும் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால், தொற்றுநோயியலாளர் டாக்டர் குச்சார்ஸ்கியும் அவரது சகாக்களும் பரவலான வேறுபாடுகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்பின்படி தொற்றாளர்களில் 10% பேர்தான் 80% பேருக்குப் புதிதாக நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறார்கள். அப்படியென்றால், பெரும்பாலான தொற்றாளர்கள் மிகச் சிலருக்கே தொற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று அர்த்தமாகிறது. தொற்றுநோயியலாளர்கள் பலரும் நோய்ப் பரவலின் விதங்களை வெவ்வேறு வழிமுறைகளில் அளவிட்டுக் கிட்டத்தட்ட குச்சார்ஸ்கி குழுவினரின் முடிவை ஒட்டிய மதிப்பீட்டுக்கே வந்திருக்கிறார்கள்.

மிகக் குறைந்த தொற்றாளர்கள் ஏன் மிக அதிகமானோருக்கு வைரஸைப் பரப்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முனைந்திருக்கிறார்கள். பெரும் பரவல் தொற்றாளர்கள் (சூப்பர்ஸ்ப்ரெடர்ஸ்) யார்? பெரும் நோய்த்தொற்று நிகழ்வுகள் எப்போது இடம்பெறுகின்றன? எங்கே?

முதல் கேள்வியைப் பொறுத்தவரை, சிலருடைய உடலில் கரோனா வைரஸ் அதிக அளவில் பெருக்கமடைவதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் மூச்சு விடும்போது நோய்க்கிருமிகள் அடங்கிய மூச்சு மேகங்களை வெளியிடும் வைரஸ் புகைபோக்கிகளாகச் சிலர் ஆவதற்குச் சாத்தியம் இருக்கிறது. நோய்த் தொற்றுக்குள்ளாவதற்குச் சிலருக்கு அதிக வாய்ப்பிருப்பதுபோல் மற்றவர்களைத் தொற்றுக்குள்ளாக்குவதற்கும் சிலருக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டு, அறிகுறிகள் தோன்றாத நிலையிலிருந்தே அவர் பிறருக்குப் பரப்ப ஆரம்பித்துவிடுகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு அவர் போகாமல் இருந்தால் அவரிடமிருந்து வைரஸ் பிறருக்குப் பரவாது.

சில இடங்கள் பெரும் பரவல் கேந்திரங்களாகிவிடுகின்றன. ஆட்கள் நிரம்பி வழியும் மது விடுதியை உதாரணத்துக்குச் சொல்லலாம். அங்கே நிறைய பேர் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவர் இருமாமலேயேகூட பேச்சின் போக்கில் வைரஸை வெளியிடலாம். நல்ல காற்றோட்ட வசதி இல்லாமலேயே வைரஸ் காற்றில் பல மணி நேரங்கள் மிதக்கலாம். ஜப்பானிலிருந்து சமீபத்தில் கிடைத்த ஆய்வு முடிவொன்று மருத்துவமனைகள், பகல் நேரப் பராமரிப்பகங்கள், உணவுவிடுதிகள், மதுவிடுதிகள், தொழிலகங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்ற இடங்கள் கரோனா பரவலின் கேந்திரங்களாக இருப்பதாகக் கூறுகிறது.

பெரும் பரவல் விதங்களை உற்றுப்பார்த்தால் இத்தாலிக்கு எந்த இடத்தில் இடைவெளி ஏற்பட்டது என்பது நமக்குப் புரியும். இதுபோன்ற கால இடைவெளிகள் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன என்பதை மரபணுவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு பிரதேசத்துக்கு முதன்முதலாக வந்த வைரஸால் பெருந்தொற்று ஏற்படவில்லை என்பது அவர்களுடைய எண்ணம்.

பெரும் பரவல் தொற்றுநோய்

சிங்கப்பூரில் ஆரம்பத்தில் ஒவ்வொரு தொற்றாளரையும் அவருடன் தொடர்பு கொண்டவரையும் கண்டுபிடித்து நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்து உலகத்தின் பாராட்டுதலைப் பெற்றார்கள். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பெரிய பெரிய விடுதிகள் பெரும் பரவலை ஏற்படுத்துபவையாக மாறக்கூடும் என்பதை சிங்கப்பூர் அரசு கணிக்கத் தவறிவிட்டது. அதனால், தற்போது அங்கே மறுபடியும் கரோனா பரவல் அதிகரிக்க அதனுடன் போராடிக்கொண்டிருக்கிறது அந்நாடு. ஆகவே, கரோனாவானது பெரும் பரவல் தொற்றுநோய் என்பதை அறிந்திருப்பது நல்லது. “நோயைக் கட்டுப்படுத்த அது முக்கியம்” என்கிறார் டாக்டர் நெல்ஸன்.

பெரும்பாலான பரவல்களும் ஒரே மாதிரியான சிறுசிறு சூழல்களால் பரவுவதால் அதைத் தடுத்து நிறுத்துவதற்குப் புத்திசாலித்தனமான உத்திகளை நாம் வகுக்க வேண்டும். எல்லாவற்றையும் முடக்கிப்போடும் பொதுமுடக்கத்தைத் தவிர்த்துவிட்டுப் பெரும் பரவல் நிகழ்வுகளை மட்டும் குறிவைப்பது சாத்தியமே. “அது போன்ற நிகழ்வுகள், செயல்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் நாம் பெரும்பாலான ஆபத்துகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் டாக்டர் குச்சார்ஸ்கி.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில் சுருக்கமாக: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x