

சாத்தான்குளத்தில் நிகழ்ந்தேறிய காவல் துறை வன்முறை மக்களைக் கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது. இதோடு சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது தற்போது கொலை வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய நூற்றாண்டில் காவல் மரணங்களை நாம் எப்படி எதிர்கொண்டிருந்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
2001-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,727 தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 810 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 334 போலீஸ்காரர்கள் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 26 போலீஸ்காரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா தவிர ஏனைய மாநிலங்களில் போலீஸ்காரர்கள் தண்டிக்கப்பட்டதே இல்லை. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு, குஜராத், வங்கம், ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஒரு போலீஸ்காரர்கூட தண்டிக்கப்பட்டதில்லை.
தடுப்புக் காவல் மரணங்களைத் தவிர 2000-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 2,041 மனித உரிமை மீறல்களைக் காவல் துறையினர் செய்திருப்பதாகப் பதிவாகியிருக்கிறது. 737 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. இதில் 344 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். இது எல்லாமே தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் அளித்த தரவுகள். தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் தரவுகள் இன்னும் அதிர்ச்சியளிக்கின்றன. அந்த ஆணையத்தின் 2017-18-க்கான அறிக்கையின்படி அந்த ஆண்டுகளில் 2,896 பேர் நீதிமன்றக் காவலில் இறந்திருக்கிறார்கள்; 250 பேர் காவல் நிலையத்தில் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையின்படி 2012-2016 ஆண்டுகளில் 157 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 11 பேர் காவல் நிலையத்திலும், 72 பேர் நீதிமன்றக் காவலிலும் இறந்திருப்பதாகத் தமிழக அரசு மாநில மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை அளித்தது. ஆக, காவல் துறைச் சீர்திருத்தமே அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரும்