Published : 03 Jul 2020 07:03 am

Updated : 03 Jul 2020 07:03 am

 

Published : 03 Jul 2020 07:03 AM
Last Updated : 03 Jul 2020 07:03 AM

கரோனாவை எதிர்கொள்ள கிராமங்கள் தயாரா?

covid-19-in-villages

எம்.எஸ்.சேஷாத்ரி, டி.ஜேக்கப் ஜான்

கொள்ளைநோயால் பாதிக்கப்படாத வகையில் இந்தியா ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. நகர்ப்புற இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டது. மருத்துவப் பணியாளர்கள், திட்டம் வகுப்பவர்கள், கொள்கை வகுப்பவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் வகையில் நகரங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் தகவல்கள்படி பார்த்தால், இந்த நகர்ப்புறப் பகுதிகளில் – குறிப்பாக, இந்தக் கொள்ளைநோயின் கேந்திரமாக இருக்கும் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் – மருத்துவக் கட்டமைப்பு திணறிக்கொண்டிருக்கிறது.

மாறுகிறது சூழல்


தற்போது நாம், இந்திய நகர்ப்புறங்களில் ஏற்பட்ட கொள்ளைநோய் அலையின் தீவிரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நினைவில் கொள்க, நாட்டின் 65% மக்கள்தொகை கிராமப்புறங்களில் வசிக்கிறது. குறைந்த அளவிலான தொற்றாளர்கள், மரணங்கள் தவிர்த்து கிராமப்புறங்களில் கரோனாவின் தாக்கம் குறைவே. அதற்குக் காரணம், தொற்று இன்னும் அதிகம் பரவவில்லை. ஆக, கிராமப்புறங்களில் உள்ளவர்களும், எளிதில் கொள்ளைநோய்க்கு ஆட்படக்கூடியவர்களுமான பெருவாரியான மக்கள் இன்னும் இந்தக் கொள்ளைநோயின் தீவிரத்தை உணரவில்லை. ஆனால், சூழல் மாறுகிறது. சமீபத்தில் பொதுப் போக்குவரத்து கணிசமான அளவுக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது; மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மேலும் ஆபத்தான அலைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. பிற நாடுகளிலிருந்து வான்வழியாக இந்தியாவுக்கு வந்தவர்களால் நகர்ப்புறங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்றால், நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்பவர்களால் அங்கு இந்தக் கொள்ளைநோயின் அலை தோன்றுவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது.

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு

மனித மேம்பாட்டுக்கு அத்தியாவசியமான மருத்துவப் பராமரிப்பு, கல்வி இரண்டையும் பொறுத்தவரை இந்தியாவில் நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையே எப்போதும் பிளவு இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் குறைபாடானது, கிராமப்புறத்தினர் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை; ஒட்டுமொத்த தேசத்தின் செல்வ உருவாக்கத்துக்கும்தான். ஓரளவு வசதிகளைக் கொண்டிருக்கும் நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்பாலேயே கரோனா சுனாமியைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை எனும்போது, கொள்ளைநோய் கிராமங்களுக்கும் பெருமளவு பரவினால், ஏற்கெனவே மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் அங்கெல்லாம் என்னவாகும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் கொண்டுவந்த பொதுமுடக்கத்தின் காரணமாக ஒரே நேரத்தில் நகர்ப்புற, கிராமப்புற வாழ்க்கை முடங்கிப்போயிருக்கிறது என்றாலும், இந்தக் கொள்ளைநோயின் பரவல் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரே நேரத்தில் நிகழாது. நகர்ப்புற அலை உச்சத்தைத் தொடும் நேரத்தில், கிராமப்புற அலை தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட தொற்றுப் பரவலே இல்லாத நேரத்தில், பொது முடக்கம் இருந்தது. தற்போது கரோனா தொற்றின் கிராமப்புற அலை தொடங்கியிருக்கும் நேரத்திலோ மக்கள் முகக்கவசம் இல்லாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் வெளியே செல்கிறார்கள், கடைத்தெருக்களில் கூடுகிறார்கள். ஆபத்து நெருங்கிவிட்டதை இது உணர்த்துகிறது. எனினும், இதை யாரும் கவனிக்கவில்லை என்பதால் ஆபத்தைத் தவிர்ப்பதற்கான ஆயத்தம் ஏதுமின்றி இருக்கிறோம்.

எப்படி எதிர்கொள்வது?

சமூகத் தடுப்பு மருந்துக்கு இதுவே தக்க தருணம். இது கொள்ளைநோய் கிராமங்களுக்கு முழுவதுமாகப் பரவுவதற்கு முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கையாகும். ஒவ்வொரு கிராமம், தாலுக்கா, மாவட்ட அளவில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்போடும் மேற்கொள்ளப்படும், அதிகாரங்கள் பகிரப்பட்ட அணுகுமுறைதான் தற்போது மிகவும் தேவை. அச்சு ஊடகம், வானொலி, மின்னணு ஊடகம், செல்பேசி வழியாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்தி, கிராமத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது மிக முக்கியமான நடவடிக்கையாகும். அவர்களின் சுயபாதுகாப்பும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பும் அவர்கள் கையில்தான் இருக்கின்றன என்பதை உணர்த்தும் வகையில், அவர்களுக்குத் தெளிவான மொழியில் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

நமது இயல்புகளில் இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம் – ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பருத்தியாலான முகக்கவசத்தைக் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்; கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லா முதியவர்களும், ஏற்கெனவே வேறு நோய்களைக் கொண்டிருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பிறரிடம் பேசும்போது, வீட்டில் இருக்கும்போதுகூட, இவர்கள் எல்லோரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் இந்த மோசமான நோயால் மரணமடைந்துவிடாமல் நாம் தடுக்க வேண்டும்.

அடுத்து, நம்முடைய மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக, ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மற்ற மருத்துவ அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவையும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மெலிதானது முதல் மிதமானது வரை கரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அடிப்படைப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வீட்டுக்கே கொண்டுவந்து தருதல் வேண்டும், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களைக் கொண்டு தினமும் ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட வேண்டும். இதுபோன்ற ஒவ்வொரு நோயாளியும் ஒரு மருத்துவ நிபுணரின் பொறுப்பாக்கப்பட வேண்டும், அவர் தினமும் தொலைபேசியில் பேசுவதன் மூலம் யாருக்கெல்லாம் நிமோனியா ஆபத்து இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களை மருத்துவமனைக்கு வரச்செய்வார். தொற்றாநோய்களுக்கும் பொதுவான பிற நோய்களுக்கும் தொலைமருத்துவ முறையில் மூத்த மருத்துவ நிபுணர்களால் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து தொலைபேசியின் மூலம் அந்த நோயாளிகளைப் பின்தொடர வேண்டும். இந்த அணுகுமுறையானது, எந்தக் கட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் உதவி நமக்கு அதிகமாகத் தேவையோ அந்தக் கட்டத்தில் தேவையான மருத்துவப் பணியாளர்களை கரோனா காரணமாக நாம் இழந்துவிடாமல் தடுக்கும்.

முக்கியமான இந்தக் கட்டத்தில் நாம் தூங்கிவிட்டோம் என்றால், நம்மை நாமே மன்னிக்கவே முடியாத பெரும் தவறைச் செய்தவர்களாகிவிடுவோம். கிராமப்புறங்களில் பரவக்கூடிய பெருந்தொற்றைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அறிவையும் திறனையும் தமிழ்நாட்டின் மருத்துவ அதிகாரிகளும் மருத்துவத் துறையினரும் பெற்றிருக்கிறார்கள்.

- எம்.எஸ்.சேஷாத்ரியும் டி.ஜேக்கப் ஜானும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவப் பேராசிரியர்கள்.

©‘தி இந்து’, தமிழில்: ஆசை


கரோனாவை எதிர்கொள்ள கிராமங்கள் தயாராCoronavirusCovid 19கரோனா வைரஸ்கிராமங்களில் கரோனாCovid 19 in villages

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x