Last Updated : 02 Jul, 2020 06:30 AM

 

Published : 02 Jul 2020 06:30 AM
Last Updated : 02 Jul 2020 06:30 AM

அரச வன்முறையின் ஊற்றுக்கண்

நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம்.

அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் குத்திக்குதறி அவர்கள் விளையாடும்போது, வாயை மூடியபடி கதற வேண்டும். கொடூர விளையாட்டு அவர்களுக்கு அலுத்துப்போகும்போதோ, தாங்கவே முடியாத எல்லையை உடல் அடையும்போதோ வெளியே இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து நீங்கள் இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். உடலின் ரணமும், ரத்தம் கசிந்த உடைகளும் தெரியாத தொலைவில் நீதிபதி ஒருவரின் முன் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் நிறுத்தப்படுகிறீர்கள். அந்த நீதிபதி உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். பின்னர் நீங்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறீர்கள். அங்கே உங்களுடைய மோசமான உடல்நிலையைப் பார்த்தும், காவல் அதிகாரிகளைச் சங்கடப்படுத்தாத வகையில் அவர்கள் விரும்பும் திருப்திகரமான ஒரு மருத்துவச் சான்றிதழை, அரசு மருத்துவர் வழங்குகிறார். பின்னர், சிறையில் நீங்களும் உங்கள் பிள்ளையும் உயிரை விடுகிறீர்கள்.

நாட்டு மக்கள் அதிர்கிறார்கள். எல்லோரும் பேசத் தொடங்கியதும், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல்வர் பேசுகிறார். இந்தக் கொடுங்கோன்மையை வன்முறை என்று சொல்லக்கூட தயங்கும் அவர், மகன் மூச்சுத்திணறலாலும், தந்தை உடல்நலக் குறைவாலும் இறந்ததாகச் சொல்கிறார். எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்கவும், குற்றஞ்சாட்டப்படும் காவல் துறையினரைப் பணியிடை நீக்கம் செய்யும் அவர், அதேசமயம் அவர்கள் மீது அதுவரை பதியப்படாத ஒரு வழக்கை, தன்னுடைய பொறுப்புக்குக் கீழேயுள்ள காவல் துறையிடமிருந்து தன்னுடைய பொறுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றவிருப்பதாக அறிவிக்கிறார். இதனிடையே சம்பவத்தை விசாரிக்க நீதிபதி ஒருவர் செல்கிறார். விசாரணையில் ‘உங்களால் ஒன்றும் புடுங்கக்கூட முடியாது’ என்று நீதிபதிக்கு சவால் விடுகிறார் ஒரு காவலர். விசாரணைக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நிர்வாகத்தைக் காவல் துறையிடமிருந்து பறித்து, வருவாய்த் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

அன்றாடம் காவல் கம்பிகளுக்குப் பின் ஐந்து பேர் உயிரை விடும் ஒரு நாட்டில் இந்த விவகாரம் எப்படி முடியும் என்ற கேள்விக்கு முன் சுற்றிலும் இங்கு நடக்கும் விவாதங்களிலிருந்து வேறு ஒரு அடிப்படையான கேள்விக்கு முகம் கொடுப்போம். இது வெறும் காவல் துறையின் சீர்கேடா அல்லது ஒட்டுமொத்த அமைப்பினுடைய சீர்கேட்டின் வெளிப்பாடா?

ஆயுதப் படைகள் அல்லது காவல் துறை வழியே நாம் காணும் வன்முறைகள் யாவுமே அரசின் வன்முறைதான். தன் அளவிலேயே வன்முறைப் பண்பைக் கொண்டதான அரசு எனும் அமைப்பானது, சமத்துவமும் அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமும் ஜனநாயக விழுமியங்களும் குறைந்த சமூகங்களில் தன்னுடைய அரசாங்கம் வழியே அந்த வன்முறையை அடிக்கடி வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அரசின் எந்தத் துறையைக் காட்டிலும் காவல் துறை அதிகமான வன்முறையை நாட்டு மக்களின் மீது வெளிப்படுத்துவதற்கான முக்கியமான காரணம், ஒரு அரசின் கருத்தியல் சாய்வுகளைக் காவல் துறைதான் மிக அதிகமான அளவில் பிரதிபலிக்கிறது. ஆக, ஒரு கருத்தை எப்படி உள்வாங்குவது என்ற பயிற்சி அரசின் எல்லா அங்கங்களுக்கும், முக்கியமாகக் காவல் துறைக்கு அத்தியாவசியமானதாகிறது.

காலனியக் காலகட்டத்தில் ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையையும் வன்முறையையும் குழைத்து அடிமை விழுமியங்களால் கட்டப்பட்ட இந்திய அரசாங்க அமைப்பானது சுதந்திரத்துக்குப் பிறகு முற்றிலுமாகக் கலைத்துப்போடப்பட்டு, தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகார வேட்கையோடு ஆட்சியில் அமர்ந்த நம்முடைய அரசியலர்களுக்கு ஏற்கெனவே இருந்த அமைப்பே வசதியானதாக இருந்ததன் விளைவாக அது நடக்காமலேயே போனது. இனி தொடர் சீர்திருத்தங்கள் வழியிலேனும் அது நடக்க வேண்டும்.

சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறைக்குள் ஊடுருவியிருக்கும் சாதியத்தைப் பலரும் பேசுகின்றனர். இதில் ஆச்சரியமே இல்லை. இந்தியக் காவல் துறை சாதி, மத, இனக் கலவைப் பூச்சோடுதான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால், காவல் துறையின் அடித்தட்டு அலுவலர்களின் நியமனமே அந்தந்தப் பகுதி சாதிப் பரவல் கணக்குகளுக்கு ஏற்பவே நடக்கிறது. சமத்துவமற்ற ஒரு சமூகத்தில் இப்படியான சாதிப் பிரதிநிதித்துவம் நிர்வாகரீதியில் ஒரு சாதுர்யமான தற்காலிக ஏற்பாடாகக்கூட இருக்கலாம். கேள்வி என்னவென்றால், ஒரு நாடு குடியரசாகி எழுபதாண்டுகளுக்குப் பிறகும் சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட குடிமையுணர்வை, சட்டத்தைப் பாதுகாக்கும் சீருடைப் பணியாளர்கள் மத்தியிலேயே நம்மால் கொண்டுவர முடியவில்லை என்றால், அந்த அமைப்பின் கேவலத்தை எப்படி வர்ணிப்பது?

அரசியல் வர்க்கமானது குறுகிய நோக்கங்களுடன் அமைப்பைக் கையாள முற்படுவது உலகளாவிய போக்கு. அதேசமயம், எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது; எல்லா சமயங்களிலும் இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒரு சமூகம் குடிமையுணர்வையும், அரசின் அங்கங்கள் தொழில்முறைக் கலாச்சாரத்தையும் வரித்துக்கொள்ளும்போது மக்களுக்கு நெருக்கமானதாகவும் வன்முறைகள் குறைந்ததாகவும் அந்தச் சமூகத்தின் அரசும் அதன் அங்கங்களும் மாறுகின்றன. எப்போதெல்லாம் அரசியல் தலைமை மோசமாகிறதோ, அப்போதெல்லாம் காவல் துறையும் மோசமாகிறது.

நெகிழ்வான அரசியல் தலைவர்கள் அமைப்பை மேலும் ஜனநாயகமயமாக்குகின்றனர். ஆனால், பலவீனமான தலைவர்கள் காவல் துறைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்குவதன் வாயிலாகத் தங்களைப் பலமானவர்களாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள். சமூகத்திலும் அரசியலிலும் பீறிட்டெழும் புதிய பிரச்சினைகளை, மாற்றுச் சிந்தனைகளை, எதிர்க் கருத்துகளை எதிர்கொள்ளும் திராணி இல்லாதபோது, அவற்றோடு உரையாடி விவாதிக்க முடியாதபோது, காவல் துறையை அந்தப் பக்கமாகக் கைகாட்டிவிடுகின்றனர். காவல் துறைக்கோ எல்லாப் பிரச்சினைகளுமே சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அரசை விமர்சிக்கும், அரசைக் குறைகூறும், அரசின் உத்தரவை மீறும் எதையும் அது அரச விரோதமாகவே கருதுகிறது. ஊரடங்கு விதியைக் கறாராகக் கடைப்பிடிக்காதது எனும் சாதாரண மனிதத் தவறு, ஒரு பெரும் குற்றத்துக்கு ஒப்பாக வெறியூட்டக் காரணம் ‘ஊரடங்கு’ எனும் கருத்தைக் காவல் துறையினர் எப்படி உள்வாங்கியிருக்கின்றனர் என்ற அர்த்தப்பாட்டிலிருந்தே உருவாகிறது. தற்செயலாக ஊரடங்கு விதியை மீறுவது என்ற இடத்திலிருந்து ஊரடங்குக்கு எதிரான போராட்டம் என்ற இடத்துக்குச் செல்வோம். ‘ஊரடங்கு’ ஒரு சிந்தனை என்றால், ‘ஊரடங்கை எதிர்ப்பது’ இன்னொரு சிந்தனை. ஒருவர் அதற்கு எதிராகப் போராடினால் நம்முடைய காவல் துறை அதை எப்படி எதிர்கொள்ளும்? நினைவில் கொள்ளுங்கள், ஊரடங்குக் காலத்தில்தான் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு கொலையைக் கண்டித்து, வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள்; சில இடங்களில் காவல் துறையினரும் தார்மீக அடிப்படையில் அதில் பங்கேற்றார்கள்.

கருத்து வேறுபாடு என்பது தேச விரோதம் அல்ல. மாறாக, தேசத்தை இப்படியும் பார்க்கலாம் என்பதற்கான இன்னொரு செயல்திட்டம். போராட்டச் செயல்பாடுகள் பயங்கரவாதம் அல்ல. அவைதான் சமூகத்தின் குரலற்றவர்களின் குரலை ஆட்சியாளர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. ஒரு கருத்தை எப்படிப் பார்ப்பது? இதைக் கற்பிப்பதுதான் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், மிக முக்கியமாக காவல் துறையினருக்கும் கற்பிக்க வேண்டிய அடிப்படையான சீர்திருத்தம் என்று நினைக்கிறேன். அடுத்தது, ஒவ்வொரு பணிக்குமான சுயமரியாதையை உருவாக்குவது; துறைகளை சுயாதீனமாகச் செயல்பட அனுமதிப்பதுதான் இதற்கான வழி என்றாலும், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களே இதற்கான பாதையையும் கட்டமைக்க வேண்டும்.

என்னுடைய துறை அந்தந்தக் காலகட்ட ஆட்சியாளர்களுக்காக செயல்படுகிறதா அல்லது சட்டத்தின்படி செயல்படுகிறதா? இந்தக் கேள்வியை ஒவ்வொரு அரசு அலுவலரும் கேட்டுக்கொள்ள வேண்டும். காவல் துறையைப் பொறுத்த அளவில் அந்தத் துறையை ஆழமாக நேசிக்கும் முன்னாள் இந்நாள் அதிகாரிகள் முதலில் இதை ஆத்மார்த்தமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு குடியரசு நாட்டில் இன்னமும் காவல் துறையானது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாகவும், மக்களிடமிருந்து இவ்வளவு அந்நியமாகவும் செயல்படுவது தொடர்பில் அவர்கள் வெட்கப்பட வேண்டும். காவல் துறையின் தவறுகளுக்காகவும் சீரமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

சமூகம் ஜனநாயகமாக மாறுவதற்கும் அரசு ஜனநாயகமாக மாறுவதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. நம் சமூகத்தில் இருக்கும் ஒடுக்குமுறையிலிருந்து வேறுபட்டதல்ல சாத்தான்குளக் காவலர்களின் அடக்குமுறை. இதையும் மௌனமாகக் கடந்துபோகத் தூண்டும் யத்தனம் அதற்கான உயிரோட்டமான சாட்சியம்!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x