Published : 01 Jul 2020 07:54 AM
Last Updated : 01 Jul 2020 07:54 AM

காவல் துறை எப்போது நம் நண்பனாகும்?

டிசம்பர் 2019-ல் நடந்த திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழா ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கப்பட சினிமாவுக்கு வெளியிலிருந்து அழைக்கப்பட்ட ஒரு முக்கிய விருந்தினர் காரணமாக இருந்தார். அவர் பிரபாவதி அம்மா. 2005-ல் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் செய்த சித்ரவதைகளால் இறந்துபோன தனது மகன் உதயகுமாரனுக்கு நீதி கேட்டு, நீண்டதொரு சட்டப் போராட்டத்தை நடத்தியவர் அவர். கேரளத்தில் பிறந்தவரும் மராத்திய சினிமாவின் முக்கியத் திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநருமான ஆனந்த் மகாதேவன், பிரபாவதி அம்மாவின் கதையை ‘மை காட்: குற்ற எண் 103/2005’ என்ற தலைப்பில் திரைப்படமாக்கியிருந்தார். அந்தப் படத்தின் திரையிடலுக்காகத்தான் எழுபது வயதான பிரபாவதி அம்மா வந்திருந்தார்.

நான்காயிரம் ரூபாய் பணத்தைத் திருடியதாகவும், அந்தப் பணம் உதயகுமாரனின் சட்டைப் பையில் இருந்ததாகவும் விசாரணைக்குக் காரணம் சொன்னது காவல் துறை. விதவையான தனது அம்மாவுக்கு ஓணம் பண்டிகைக்குப் புதுத் துணி எடுப்பதற்காக உதயகுமாரன் வைத்திருந்த பணம் அது. காவல் துறைக்கு எதிரான வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாயினர். சிபிஐ விசாரணை கோரிய பிரபாவதி அம்மாவின் மனுவை கேரள நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. உதயகுமாரனை சித்ரவதை செய்து கொன்ற இரண்டு காவலர்களுக்கும் சிபிஐ நீதிமன்றத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. விசாரணையின் பெயரால் சித்ரவதை செய்து கொல்லப்படுவதைக் கடுமையாகச் சாடிய நீதிபதி ஜே.நாசர், குற்றமிழைத்த காவலர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதல்ல என்று கூறியே மரண தண்டனையை விதித்தார்.

இன்னமும் நாம் கற்காலத்து மனவியல்புகளிலிருந்து முழுமையாக மாறிவிடவில்லை என்பதையே காவல் துறையின் விசாரணை நடவடிக்கைகளானவை உணர்த்துகின்றன. விசாரிக்கப்படும் நபரை ஈவிரக்கமின்றித் தாக்குவதை அனுமதிப்பதோடு, அத்தாக்குதலில் மரணங்கள் நிகழ்ந்தால், அதற்குக் காரணமானவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் உயரதிகாரிகள் ஈடுபடுவதே ஒரு வழக்கமாக இருப்பதும் காவல் துறையின் வன்முறைக் கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு காரணம். கேரளத்தில் உதயகுமாரன் கொலை வழக்கு 15 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதே நேரத்தில் ஆறுதலான மற்றொரு அம்சம், காவல் துறையினர் பொதுமக்களின் நண்பர்களாகப் பணிபுரிவதை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஜனமைத்ரி’ திட்டமும் வெற்றிகரமாக அங்கு செயல்படுத்தப்பட்டுவருகிறது. கரோனா காலத்தில் இந்தியா முழுக்க காவல் துறையினர் முன்களத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், கேரளத்தில் அவர்களுடைய செயல்பாடுகள் மாறுபடுகின்றன. ஏனைய மாநிலங்களில் கேட்கும் புகார் குரல்கள் கேரளத்தில் குறைவாகக் கேட்கின்றன; இதற்கு ‘ஜனமைத்ரி’யையும் ஒரு காரணமாகச் சொல்ல முடியும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரளம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. அதுபோலவே, அந்த நடவடிக்கைகளில் காவல் துறையினரை ஈடுபடுத்தியதிலும் அம்மாநிலமே முன்னுதாரணமாக இருக்கிறது. இன்றைக்கு இந்தியா முழுக்க சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் பெரும் பகுதி காவல் துறையை நோக்கி நகர்த்தப்பட்டிருப்பது பெரும் விமர்சனமாக இருக்கிறது. அரசியல் களத்திலும், அரசு நிர்வாகக் களத்திலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பிறகு காவல் துறை அழைக்கப்படுவதற்குப் பதிலாக நேரடியாக அவர்களிடமே பொறுப்பை ஒப்படைக்கும் செயல் அரசியல் - அரசு நிர்வாகத் தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது. இது காவல் துறையின் கையில் அதிகாரம் குவிவதையும், வன்முறைகள் அதிகரிப்பதையும் அதிகமாக்குகிறது. அதைப் போலவே, நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது, காவல் துறையினரை ஏனைய பொது விஷயங்களிலும் ஈடுபடுத்துவதற்குப் பதில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மட்டுமே ஈடுபடுத்துவதாகும். மாறாக, கேரளக் காவல் துறை சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைத் தாண்டியும் பொது விஷயங்களில் ஈடுபடுத்தப்படுகிறது. இது பொதுச் சமூகத்துக்கும் காவல் துறைக்கும் இடையிலான உறவை மேம்படுத்துகிறது.

முன்னுதாரண ஊரடங்கு

இந்த ஊரடங்குக் காலத்தில் காவல் துறையிடம் நிறையப் பணிகளை ஒப்படைத்தது கேரள அரசு. ஆனால், சமூகத்துடன் இணக்கமாகப் பணியாற்றுவதை அது உறுதியாக்கியது. ஊரடங்கின் ரோந்துப் பணிகளில் மட்டும் அல்ல; ஊரடங்குச் சூழலில் வெளியே வர முடியாமல் இருந்தவர்களுக்கு உதவும் பணியிலும் காவல் துறையை அது ஈடுபடுத்தியது. தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவரது குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்டவரின் பயண விவரங்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பது தொடங்கி தனித்திருந்தவர்களுக்குத் தேவைப்பட்ட மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தேடிப்போய் செய்வது வரையிலான பல சேவைப் பணிகளில் காவலர்கள் கேரளத்தில் ஈடுபடுகிறார்கள். மிக முக்கியமாக, முதியவர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்ற நிலை அம்மாநிலம் முழுவதும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் அத்தனையிலும் முன்னணியில் இருப்பவர்கள் ‘ஜனமைத்ரி காவலர்கள்’.

வழக்கமான காவல் துறையைப் போல் அல்லாமல் மக்களிடம் கலந்து பழகி, அவர்களது உடனடித் தேவைகளைக் கண்டறிந்து, அதை மக்களின் வாயிலாகவே நிவர்த்திசெய்துகொள்ளும் முயற்சி இது. அரசால் தொடங்கப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க திட்டம் என்பதாக இல்லாமல், ஆண்டுதோறும் கருத்தரங்குகள், ‘ஜனமைத்ரி’ என்ற பெயரில் ஆய்விதழ் என்று தொடர்ந்து அதை ஆக்கபூர்வமான முறையில் மேம்படுத்திவருகிறது கேரள அரசும் காவல் துறையும். ஜனநாயகக் காவல் துறைக்கான ஒரு முன்னெடுப்பாகவே கேரள அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகிறது.

இங்கேயும் சாத்தியமா?

உலகெங்கும் காவல் துறையினர் மீதான விமர்சனங்கள் தொடர்கின்றன. கேள்வி என்னவென்றால், எப்படி காவல் துறையினரை அந்த விமர்சனச் சூழலிலிருந்து வெளியே கொண்டுவரப்போகிறோம்? மேம்பட்ட ஜனநாயகச் சமூகங்கள் காவல் துறைக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை அதிகமாக்குகின்றன. காவல் துறை மீதான மக்களின் அச்சமும் அவநம்பிக்கையும் மக்களிடமிருந்து அவ்வளவு எளிதில் அகன்றுவிட வாய்ப்பில்லை. ஆனால், அரசு நினைத்தால் அதை மாற்றியமைப்பதற்கான முயற்சியை எடுக்கலாம். தமிழ்நாட்டில் மாவட்டங்களிலும் மாநகரங்களிலும் 40% காவல் நிலையங்கள், ஐடியல் காவல் நிலையங்களாக மாற்றப்படும் என்று அறிவிப்புகள் வெளிவந்து பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அந்த முயற்சி வெறும் பெயர்ப்பலகை மாற்றமாகவே நடந்துமுடிந்தது. காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிப்பதுபோல மக்களுக்கான காவல் நிலையங்களில் பயிற்சி பெறுவதையும் கட்டாயமாக்க வேண்டும். மக்களிடம் சிரித்த முகத்தோடு கைகுலுக்கப் பயிற்றுவித்த பின்னர், கைத்தடிகளையும் துப்பாக்கிகளையும் அவர்களின் கைகளில் கொடுக்கலாம்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x