Published : 30 Jun 2020 07:42 AM
Last Updated : 30 Jun 2020 07:42 AM

பொதுப் போக்குவரத்தை மீட்டெடுக்க என்ன வழி?

இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்து வதற்குப் போக்குவரத்தை முழுவதும் முடக்குவது முக்கியம். பொது முடக்கத்திலிருந்து நாடு விடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், நமது போக்குவரத்துக் கட்டமைப்பை முறையாக வலுப்படுத்து வது அவசியம். இது அவசரகதியில் செய்யப்பட வேண்டிய விஷயம் இல்லை. போக்குவரத்து சேவை, குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை மறுபடியும் தொடங்கும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதைப் பற்றி நாம் தற்போது யோசிக்க வேண்டும்.

கரோனாவும் பொதுப் போக்குவரத்தும்

கூட்ட நெரிசல் காரணமாகத் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனிப் போக்குவரத்தை மக்கள் நாடுகின்றனர். டெல்லியில் நான்கு வாரங்களுக்கு முன்பே பொதுப் போக்குவரத்து தொடங்கியது. அதைப் போன்ற நகரங்களில் ஒவ்வொரு பஸ்ஸுக்கும் அனுமதிக்கப்பட்ட 20 பயணிகளைவிடக் குறைவானவர்களே பயணிக்கிறார்கள். இத்தனைக்கும் பல வழித்தடங்களில் பஸ்கள் குறைக்கப்பட்டுவிட்டன. மும்பை போன்ற நகரங்களில் பஸ்ஸில் கூட்ட நெரிசல் காணப்பட்டாலும் மாற்று வழி ஏதும் இல்லாததால் இது தற்காலிகமானதே. போக்குவரத்து தொடங்கியதும் பல மாதங்களுக்குப் பொதுப் போக்குவரத்தைக் குறைந்த அளவிலான மக்களே பயன்படுத்துவார்கள். சாலைப் போக்குவரத்தில் மோசமான மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமென்றால் பொதுப் போக்குவரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தனிமனித இடைவெளி, தூய்மை போன்றவை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. டோக்கன்கள், மின்தூக்கியில் உள்ள பொத்தான்கள், ரயில் நிலையங்களின் நகரும் படிக்கட்டுகளில் உள்ள கைப்பிடி போன்றவற்றின் மூலம் வைரஸ் பரவும் சாத்தியத்தை எதிர்கொள்வது குறித்தும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பேசுகின்றன. தீவிரமான வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு இவை மட்டும் போதுமா?

தொற்று பரவுவதில் ‘தொடர்புக் காலம்’ (contact-time) முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில்களின் பயண நேரம் 20 நிமிடங்களுக்கும் மேலே இருக்காது. இந்தக் கால அளவுக்குள் தொற்று ஏற்படுத்தும் அளவிலான வைரஸ் கிருமிகள் ஒரு பரப்பில் ஒட்டிக்கொள்ள முடியாது; தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றாலும்.

எனினும், எல்லோரும் தொடக்கூடிய பரப்புகளைக் கையால் தொடுவதென்பது கரோனா பரவலுக்குப் பெருமளவு காரணமாகிறது. இந்தியா உருவாக்கியுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுகின்றன. எனினும், தீவிர கவனம் காட்ட வேண்டிய சில முக்கியமான அம்சங்களை அந்த நெறிமுறைகள் கண்டுகொள்ளவில்லை. பஸ், ரயிலின் உட்பக்கக் கூரையிலிருந்து தொங்கும் கைப்பிடி வளையங்கள், பிடித்துக்கொள்வதற்கான செங்குத்துக் கம்பிகள், இருக்கைகளுக்குப் பின்னால் உள்ள கைப்பிடிகள் போன்றவைதான் அவை. தொற்றுள்ள, ஆனால் அறிகுறியற்ற நபர் இதுபோன்ற பரப்புகளைத் தொடுவதன் மூலம் வைரஸ் கிருமிகளை அங்கே விட்டுச்செல்கிறார். அந்த இடத்தைச் சிறிது நேரமேனும் தொடும் இன்னொரு நபரின் கைகளில் அந்த வைரஸ்கள் ஒட்டிக்கொள்கின்றன. அந்த நபர் பிறகு தன் முகத்தைத் தொடுவதன் மூலம் அந்தக் கிருமிகளை அங்கே கடத்துகிறார்.

ரயிலில் கைப்பிடி வளையங்கள்தான் மிகவும் ஆபத்தானவை. வைரஸ் செறிந்திருக்கும் அந்தப் பரப்பை அடுத்தடுத்துப் பலரும் தொடுவதன் மூலம் அவர்கள் அனைவருக்கும் வைரஸ் பரவுகிறது. இதற்கான நிகழ்தகவு அதிகம். கைப்பிடி வளையத்தில் ஒருவர் விட்டுச்சென்ற வைரஸ் ஒரு மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பேருக்குத் தொற்றிக்கொள்கிறது. அதற்குப் பிறகு, அவர்கள் தங்கள் முகத்தைத் தொடுவதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பாதுகாப்புக்கான பரிந்துரைகள்

இப்படியெல்லாம் நிகழக்கூடும் என்பதால், உடனடியாகச் செயல்படுத்தக்கூடிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். கைப்பிடிகளை அடிக்கடி துடைப்பதற்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும். அந்த ஊழியர் ரயிலின் முதல் பெட்டியிலிருந்து கடைசிப் பெட்டி வரை தொடர்ந்து செல்ல வேண்டும். பஸ்களில் இருக்கும் கைப்பிடிகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். மெட்ரோ ரயிலுக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் ஈரமான கிருமிநாசினித் துடைப்புக் காகிதங்களைத் தர வேண்டும். எதையும் தொடுவதற்கு முன்பு அந்தக் காகிதங்களைக் கொண்டு கைகளை நன்றாகத் துடைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும். அந்தக் காகிதங்களைப் போடுவதற்கு ரயில் பெட்டிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்.

ரயிலை விட்டு வெளியேறுபவர்கள் மீது மெட்ரோ ரயில் நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் வெளியேறும் அவசரத்தில்தான் இருப்பார்களே தவிர கையைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் பொறுமை இருக்காது. நடைமேடைகளில் கிருமி நாசினிகளைத் தரும் ஊழியர்களையோ தன்னார்வலர்களையோ நிற்க வைக்கலாம். தொடுவதற்கு அவசியமில்லாத வகையில் தண்ணீர் கொட்டும் கழுவுத் தொட்டிகளையும் அவற்றுடன் சோப்புகளையும் வைப்பது பயனளிக்கும். பரப்புகளைத் தொடக் கூடாது என்றும் தூய்மையை வலியுறுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட வேண்டும்.

வைரஸ் துகள்களைக் கலைத்துவிடும் வகையில் வெளிக் காற்றோட்டம் உள்ளே வரும்படியான சூழலை மெட்ரோ ரயில்களில் உருவாக்க வேண்டும். இறுதி ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலும் புறப்படுவதற்கு முன்பு வரை கதவுகளைத் திறந்து வைத்திருக்க மெட்ரோ ரயில் அதிகாரிகள் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள மெட்ரோ ரயில் பாதைகளில் பெரும்பாலான தூரம் வரை தரைக்கு மேலே உயரத்தில் இருப்பதால், பாதுகாப்பு குறித்த அக்கறைகள் அனுமதிக்கும் என்றால், மேலும் பல புதுமையான வழிமுறைகள் இருக்கின்றன.

ஊழியர் ஒருவரை நியமித்து அவரைப் பயணிகளோடு பயணிக்கச் செய்யலாம். அவர் ஒரு பெட்டியிலிருந்து மற்ற பெட்டிகளுக்குப் பயணிகளை அனுப்பலாம். காலியாக உள்ள பெட்டியில் கதவுகளை மெட்ரோ ரயில் ஓடும்போது இரண்டு அல்லது சில நிமிடங்களுக்குத் திறந்து வைத்திருக்கலாம். வெளிக் காற்று தாராளமாக உள்ளே புழங்கும் வகையில் மெட்ரோவின் குளிர்சாதன வசதி மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், எந்த முயற்சியும் எச்சரிக்கையுடன் பரிசோதித்துப் பார்க்கப்பட வேண்டும்.

நம் பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க அதிகாரத் தரப்பிடமிருந்தும் மக்களிடமிருந்தும் நடவடிக்கைகள் தேவை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றாலும், பிற்பாடு வைரஸ் பரவல் தீவிரமானதற்குப் பொதுப் போக்குவரத்துதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டால் மக்கள் அனைவரும் தனிப் போக்குவரத்துக்கு மாறிவிட நேரிடும்.

இந்தியாவில் கரோனாவால் இறப்பவர்களைவிட மாசுவாலும் விபத்துகளாலும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பொதுப் போக்குவரத்தைப் புறக்கணிப்பது என்பது நீடித்த விளைவுகளை ஏற்படுத்திவிடும். நமது பஸ்களும் ரயில்களும் பாதுகாப்பானவையாக மக்களால் பார்க்கப்பட வேண்டும். ஆகவே, பொதுப் போக்குவரத்தானது பொதுமக்களுக்கானதே தவிர, வைரஸுக்கானது இல்லை என்ற எண்ணத்தை நமக்கு நாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

© ‘தி இந்து’, தமிழில் சுருக்கமாக: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x