அச்சப்படத் தேவையில்லை; நமக்கும் கரோனா வரலாம்!

அச்சப்படத் தேவையில்லை; நமக்கும் கரோனா வரலாம்!
Updated on
3 min read

தமிழகத்தில் கரோனா தொற்றைக் காட்டிலும் அது தொடர்பான பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் மீளக்கூடிய இந்த நோய் குறித்த அச்சத்தால், வசதி படைத்த தொழில் அதிபர்களே தற்கொலை செய்து கொள்வதாக வரும் தகவல்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால்தான், தமிழகத்தில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை உடனுக்குடன் சொல்ல அரசு தயங்குகிறதோ என்று கருத வேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மருத்துவத் துறையைக் கவனிக்கும் செய்தியாளர்களுக்கு வருகிற இறந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவலுக்கும், அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் இறப்பு எண்ணிக்கைக்கும் இடையே இடைவெளி தொடர்கிறது. பீதியைக் கட்டுப்படுத்தவே அரசு தாமதப்படுத்தி அறிவிப்பு வெளியிடுவதாகச் சொல்கிறார்கள் மருத்துவத் துறையினர்.

தமிழ்நாட்டில் அதிகாரபூர்வமாக அரசு அறிவித்துள்ளபடி, இதுவரையில் 911 பேர் இறந்திருக்கிறார்கள். மொத்த பாதிப்பு 70,977 பேர் என்பதால், இறப்பு விகிதம் வெறும் 1.28 சதவீதம் தான். அதாவது, நூற்றுக்கு ஒருவர்தான் இறக்கிறார். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ சில ஊடகங்கள், தொடர்ந்து பீதியை ஏற்படுத்துகிற மாதிரியாகவே செய்திகளை வெளியிடுகின்றன. உதாரணமாக, மதுரை மாவட்டத்தில் நேற்று இறந்ததாக அரசு தந்த கணக்கு வெறுமனே 2 பேர் மட்டுமே. ஆனால், சில நாளிதழ்களில் ஒரே நாளில் 12 பேர் இறந்தாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. "அரசு சொல்கிற கணக்கு உண்மையல்ல என்றாலும், ஊடகங்களில் வெளியான செய்தியும் மிகைப்படுத்தப்பட்டதே" என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

இதுகுறித்துப் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டபோது, "கரோனா தொற்று கண்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு எப்போது அது வந்தது, எப்போது போனது என்று கூட அறிய முடியாத அளவுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போயிருக்கிறது. அறிகுறிகள் தோன்றிய நோயாளிகளிலும் கூடப் பெரும்பாலானோர் சாதாரண சளி, இருமல் போன்ற அறிகுறி இருக்கும்போதே குணமாகிவிடுகிறார்கள். மரண விகிதமும் குறைவாக இருக்கிறது. எனவே, கரோனா வந்தாலே பீதியடையத் தேவையில்லை.

தேவையற்ற பயம் பல நேரங்களில் நம்மைத் தீவிர மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி, தேவையற்ற விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது. அல்வா கடைக்காரரின் தற்கொலையும் அதுபோன்ற தவறான முடிவினால் விளைந்ததேயாகும். கரோனா தொற்று ஒருபுறம் அச்சுறுத்த, இன்னொரு பக்கம் அதைச் சுற்றி எழுப்பப்படும் தேவையற்ற பீதியும் அச்சுறுத்துகிறது.

எனவே, அரசு தினமும் தொற்று எண்ணிக்கையை அறிவிப்பதையும், பலி எண்ணிக்கையை அறிவிப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது. காரணம், அதையே அனைத்துக் காட்சி ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகின்றன. இதனால் மாலை 6 மணி ஆகிவிட்டாலே வீட்டில் இருப்போர், குறிப்பாக முதியவர்கள் மன அழுத்தத்துக்கும், பதற்றத்துக்கும் ஆளாகிறார்கள்.

தேவை எச்சரிக்கை உணர்வும், நோய் தொற்றாமல் காத்துக்கொள்ளக்கூடிய விழிப்புணர்வும்தானே ஒழிய பயமல்ல. கரோனா என்றாலே மரணம் என்று ஒரு தரப்பினரும், கரோனா என்று ஒரு நோயே இல்லை, எல்லாம் சும்மா என்று இன்னொரு தரப்பினரும் இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினைகள். இந்த இரண்டிற்கும் இடையே ஒரு உண்மை இருக்கிறது. அந்த நோய் குறித்த உண்மையை, அறிவார்ந்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

மனநல மருத்துவர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் கூறுகையில், "சீப்பை ஒளித்து வைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்த முடியாது. 'ஆம், தமிழ்நாட்டில் கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது. உண்மைதான். ஆனால், இறப்பு விகிதம் மிகமிக குறைவாக இருக்கிறது. சிகிச்சை பெறுவோரில் முக்கால்வாசிப் பேர் மிகமிக விரைவாகக் குணமாகி வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள்' என்ற உண்மையை அரசும், மருத்துவத் துறையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ஒருவரை திடீரெனப் பரிசோதனை செய்து, 'உங்களுக்கு கரோனா பாசிட்டிவ்' என்று அறிவிக்கும்போது பதற்றமடையவே செய்வார். அடுத்த சில மணி நேரங்களில் அவரைப் பிடித்துக்கொண்டு போய்த் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கும்போதும், சுற்றிச் சுற்றிக் கவச உடையணிந்த செவிலியர்களும், டாக்டர்களும் நடமாடுகிறபோதும் அவரது பயம் மேலும் அதிகரிக்கும்.

'அய்யோ நாம் பிழைப்போமா? நம்முடைய குடும்பத்தில் மற்றவர்களுக்கும் நோய் இருக்குமோ? கடன் பிரச்சினை இருக்கிறதே? வேலை போய்விடுமே' என்று பயந்தால், அது அவரை மேலும் பலவீனமாக்கும். எனவே, பரிசோதனைக்கு முன்பே அவருக்கு கவுன்சிலிங் தர வேண்டியது அவசியம். அவரது குடும்பத்துக்கும் கவுன்சலிங் அளிக்க வேண்டும். குணமாகி வீடு திரும்பும் போதுகூடக் கவுன்சலிங் தேவை. 'அக்கம் பக்கத்தினர் உங்களைக் கண்டு விலகினால் பயப்படாதீர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்' என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

நான் சொல்கிறேன், இப்போது பேசிக்கொண்டிருக்கிற உங்களுக்கோ, எனக்கோ கூடக் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமக்கு வரவே வராது என்று அளவுகடந்த தன்னம்பிக்கையோடு இருந்துவிட்டு, வந்துவிட்டால் ஒரேயடியாக மனமுடையத் தேவையில்லை. நோய் வரலாம். ஆனால், அதில் இருந்து நாம் நிச்சயமாக மீள்வோம். அதற்குரிய மருத்துவ வசதி தமிழ்நாடு அரசிடம் இருக்கிறது" என்றார்.

தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது, சுகாதாரமான முறையில் கை கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை உட்கொண்டால் கரோனாவைக் காணாமல் போகச் செய்யலாம். பொறுப்பை உணர்ந்து கவனமுடன் செயல்படுவோம். கரோனாவைக் கடப்போம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in