Published : 19 Jun 2020 06:55 AM
Last Updated : 19 Jun 2020 06:55 AM

அரசு அலுவல்களைக் கணினிமயமாக்குவதை இனியும் தாமதிக்கலாமா தமிழ்நாடு?

தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடமிருந்து ஜூன் 17 அன்று அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கை அதிர்ச்சியளிப்பதாகத்தான் இருக்கிறது. கடந்த மார்ச் 25 தொடங்கி மே 17 வரையிலான ஊரடங்குக் காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அலுவலகத்துக்கு வர இயலாத அரசு ஊழியர்கள் பணிபுரிந்ததாகக் கருதப்படுவார்கள் என்று கூறும் அந்தச் சுற்றறிக்கை, மே 18-க்குப் பிறகு பகுதியளவு பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டதால், அலுவலகத்துக்கு வர இயலாதவர்கள் அனைவரும் விடுப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களை அக்கறையுடனேயே அணுகுகிறது என்றாலும், இந்தச் சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறைகள் சார்ந்து சில கேள்விகளையும், மிக முக்கியமான ஒரு நீண்ட காலப் பிரச்சினை ஒன்றையும் நம் கவனத்துக்கொண்டுவருகிறது. முதலில் சில கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம். சென்னையில் பணியாற்றிவந்த ஒரு கடைநிலை ஊழியர், குமரியில் இந்த ஊரடங்குக் காலத்தில் சிக்கிக்கொண்டிருந்தால், சென்னைக்கு மீண்டும் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத சூழலில் எப்படித் தன்னுடைய பணிக்குத் திரும்ப முடியும்? தனி வாகனத்தில் அவர் வந்திருக்க வேண்டும் என்றால், அதற்கான பதினைந்தாயிரம் - இருபதாயிரம் செலவு யாருடையது? சரி, சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து அன்றாடம் ரயிலில் வந்து சென்ற பல நூறு பேர், இந்த ஊரடங்குக் காலத்தில் சென்னைக்கு எப்படி இயல்பாக வந்து சென்றிருக்க முடியும்? எல்லாவற்றுக்கும் மேல் நேரடியாகப் பணிக்கு வரும் உடனடி அவசியமற்ற பணிகளில் இருப்பவர்களும்கூட அரசுப் பணி என்பதாலேயே தொற்று அபாயத்தை அன்றாடம் எதிர்கொள்வதற்கான நிர்ப்பந்தம் என்ன?

அரசு ஊழியர் என்றாலே, கொழுத்த சம்பளத்துடன் அமர்ந்திருப்பவர்கள் என்ற பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு கொஞ்சம் வெளியே வந்து சிந்திப்போம். ஒரு அரசுத் துறையின் அதிகாரியும், கடைநிலை ஊழியரும் ஒன்றல்ல. அதிகபட்சம் மாதம் ரூ.15,000 ஊதியம் பெறும் ஓர் ஒப்பந்த ஊழியரும் அரசின் ஊழியர்தான். பல துறைகளில் கடைநிலை ஊழியர்களின் ஆரம்பச் சம்பளம் ரூ.20,000-க்கும் குறைவுதான். ஒருவேளை நல்ல சம்பளத்தில் இருந்தாலும், ஐம்பது வயதைத் தாண்டிய பெண்மணியை கரோனா ‘அரசு ஊழியர்’ என்று சொல்லித் தன் அபாயக் கட்டத்துக்கு வெளியே நிறுத்திவிடுவதில்லை. நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்குப் பணியாற்றுவதில் அரசு ஊழியர்கள் முன்வரிசையில் நிற்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படி அவர்கள் மக்கள் பணியாற்றுவது அவர்களுடைய கடமை என்பதாலேயே அவர்களுடைய பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது பொதுச் சமூகமாகிய நம்முடைய கடமை ஆகிறது.

தலைமைச் செயலரின் சுற்றறிக்கை அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், இது ஒரு தார்மிகப் பொறுப்பை அரசு தட்டிக்கழிப்பதும் காருண்யமின்றி நடப்பதுமான செயல்பாடு என்பதைத் தாண்டி, அதிகபட்சம் விடுப்புகள் இழப்புடனோ, ஊதிய இழப்புடனோ முடிந்துவிடக் கூடியது. ஆனால், ஒரு சமூகமாக தமிழ்நாடு எவ்வளவு பணிகளை இழக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டில் ஒரு பங்கு ஊழியர் எண்ணிக்கையுடன் பணியாற்றுவது என்பது ஒரு அலுவலகப் பணிக் கலாச்சாரத்தைப் பெரிய அளவில் முடக்கும். ஏற்கெனவே பெரும் பணிச் சுமை – ஆள் பற்றாக்குறையில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் இது பெரும் தேக்கத்தை உண்டாக்கும்.

தமிழ்நாட்டில் மட்டும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு நிர்வாகப் பணிகளில் இருக்கிறார்கள். அலுவலகங்களில் கணக்குப் பராமரிப்புப் போன்ற பணிகளை மட்டும் மேற்கொள்வோரின் எண்ணிக்கையே 10 லட்சத்தைத் தாண்டும். கேள்வி என்னவென்றால், ‘கரோனாவுக்கு இன்னும் மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தொற்றுக்கான வாய்ப்புடன்தான் ஓர் அரசு ஊழியர் அலுவலகத்துக்கு வந்தாக வேண்டும். அலுவலகம் வந்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஏன் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடாது? தனியார் துறைகளில் சாத்தியமுள்ளவர்களை எல்லாம் வீட்டிலிருந்து பணியாற்றச் சொல்கிறது அரசு. தன்னுடைய துறைகளை அதற்கான முன்னுதாரணமாக ஆக்கியிருக்க வேண்டுமா, இல்லையா?’

முன்னெப்போதைக் காட்டிலும் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் அதிகமாகவும், ஒருங்கிணைந்தும் வெளிப்பட வேண்டும்; ஆனால், நேர் எதிரான சூழலில் நம்முடைய அரசு இயந்திரம் இருப்பதையே இந்தச் சுற்றறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஏன் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் இன்னும் கணினிமயமாக்கப்படவில்லை?

தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னேறியிருப்பது எப்படி ஒரு உண்மையோ அதேபோல, கணினிமயமாக்கல் போன்ற பல விஷயங்களில் பின்தங்கியிருப்பதும் உண்மை. பல மாநிலங்களில் அரசு அதிகாரிகள், தேவைப்படும் நிலையிலுள்ள ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, மத்திய அமைச்சக அலுவலகங்கள் இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் இதற்கான முன்னுதாரணமாக இயங்கின. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய தகவலறிவியல் மையம் வடிவமைத்த ‘இ-ஆபிஸ்’ என்ற மென்பொருளின் வழியாக மின்கோப்புகள் அனுப்பப்பட்டதோடு, பாதுகாப்பான முறையில் காணொலி உரையாடல்களும் நடத்தப்பட்டன. கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் ஊரடங்குக் காலத்தில் பெரிய அளவில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்தான் இந்த அலைக்கழிப்பு! இதில் ஒரு பெரிய நகைமுரண் என்றால், இரு தசாப்தங்களுக்கு முன்பே அரசு அலுவலகப் பணிகளைக் கணினிமயமாக்கும் திட்டங்களை அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னெடுத்தார். இதற்கான முன்னோட்டமாக திருவாரூர் மாவட்டம், தன்னுடைய மக்கள் சேவைகளைக் கணினிமயமாக்க நடவடிக்கை எடுத்தது அன்று நாட்டிலேயே முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், மக்களுக்கு வழங்கும் சேவைகள் கணினிமயமானதே அன்றி அலுவலகப் பணிகள் முழுமையும் கணினிமயமாகும் பணி அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் நடந்தேறவில்லை.

வெளியூர்களில் சிக்கியிருக்கும் அரசு ஊழியர்கள் பலரும் அலுவலகங்களுக்கு வர முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தபடி அவர்களுக்குப் பகிரப்படும் வேலைகளைக் கணினி - செல்பேசி வழியாக மேற்கொள்வதை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள். மிக முக்கியமாக இன்று அரசு அலுவலகச் செயல்பாடுகளில் - ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட - அனைத்துத் தொழில்நுட்பங்களும் பெரும் பங்கு வகிக்கிறது. என்ன கொடுமை என்றால், இவர்களுடைய பணிகள் எதுவும் அரசின் கணக்கில் வராது. ஏனெனில், இது எதுவும் அதிகாரபூர்வம் கிடையாது. மேலதிகம் கணினி, இணைய வசதி, பணியாற்றுவதற்கான உத்வேகம் எல்லாமும் இருந்தாலும், எல்லாப் பணிகளையும் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு அரசு அலுவலகங்களில் கிடையாது.

கரோனா குறைந்தபட்சம் மேலும் சில மாதங்களுக்கேனும் நீடிக்கும் பிரச்சினை என்கிற அளவில், அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கிட இதையே தருணமாக அரசு கருதிட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தன் ஊழியர்களை எப்படி நடத்துவது என்பதற்கான முன்னுதாரணத்தை உருவாக்கிடும் முதல் பொறுப்பு தனக்குத்தான் இருக்கிறது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும்!

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x