Published : 18 Jun 2020 06:45 AM
Last Updated : 18 Jun 2020 06:45 AM

ஒருங்கிணைந்த செயல்பாட்டில் சென்னையின் லட்சணம்

பெருநகர சென்னை மாநகராட்சி 77-வது வட்டம் கேசவ பிள்ளை பூங்கா பேருந்து நிலைய இருக்கையில் பழைய டிஜிட்டல் பேனரை விரித்து, உட்கார்ந்துகொண்டும் உறங்கிக்கொண்டும் இருக்கிறார் 65 வயது பாலம்மாள். அவருடைய வீடு எங்கே போனது? அவர் கண்ணை உயர்த்திப் பார்த்தால், புதிய அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டிடம் தெரியும். அங்கு அவருக்கு வீடு இருக்கிறது. ஆனால், உள்ளே நுழைய முடியாது. அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு மறுக்கப்படுவது ஏன்? கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் மாநகராட்சி வட்டத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் குடியமர்த்த வேண்டிய மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது ஏன்? கைக்கெட்டும் தூரத்தில்தான் சென்னை மாநகரத்தை ஆட்சி செய்யும் ரிப்பன் கட்டிட வளாகம் அமைந்திருக்கிறது.

பரந்து விரிந்த கேசவ பிள்ளை பூங்கா மைதானத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக 1983-ல், 35 பிளாக்குகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பாக மாற்றியது தமிழக அரசு. கால ஓட்டத்தில் கட்டிடங்கள் பழுதடைய, அவற்றில் 14 பிளாக்குகள் 2008-ல் புதுப்பிக்கப்பட்டன. அடுத்த கட்டமாக, 2016-ல் 21 பிளாக்குகள் இடிக்கப்பட்டுப் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்குக் குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டது. அதற்காக, 864 குடும்பங்களுக்கு 18 மாதங்களில் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தருவதாக உறுதியளித்த குடிசை மாற்று வாரியம், அதுவரை ரூ.8,000 மட்டும் வாடகைப் பணமாகக் கொடுத்தது. ரூ.8,000-ல் 18 மாதங்களுக்கு சென்னை மாநகரத்தில் வாடகை வீடு எப்படிக் கிடைக்கும்?

எனவே, வாடகை வீடுகளில் இருப்பதற்கு வாய்ப்பற்ற 200 குடும்பங்களுக்குப் புதிய குடியிருப்பு கட்டப்படும் இடத்தின் அருகே எட்டுக்கு எட்டு சதுர அளவில் தகரக் கொட்டகையில் தற்காலிகக் குடியிருப்பைக் குடிசை மாற்று வாரியம் செய்துகொடுத்தது. இதோ, அதோ என்று இழுத்தடித்த பணிகள் முடிக்கப்பட்டு, 2020 ஜனவரியில் வீடுகள் ஒப்படைக்கப்படும் என்று சொன்னார்கள். நடக்கவில்லை. இதனிடையே புதிய குடியிருப்புகளையே கரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப்போவதாக அறிவித்தது அரசு. நெஞ்சில் அடி விழுந்ததுபோல துடித்துப்போனார்கள் மக்கள். ஒரு கொள்ளைநோய் பரவுகையில், மக்களுக்கான சிகிச்சை மையமாக இப்படியான கட்டிடங்களைப் பயன்படுத்துவதில் என்ன தவறு என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஒரு கொள்ளைநோய் பரவுகையில் வீடே இல்லாத சூழலில் தள்ளப்படும் மக்களின் நிலை எப்படியிருக்கும் என்பதே அதற்கான பதில். நோயைத் தடுக்கவில்லை; உருவாக்குவதாக அமைகிறது இந்த முடிவு.

கோரிக்கை மனுக்கள் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன. எந்தப் பயனும் இல்லை. ஊரடங்குக் காலம். ஒரே போராட்டக் களம் நீதிமன்றம்தான். நீதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ‘கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்காலிகக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வுசெய்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என மே 21-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கும் பகுதியாக இந்தப் பகுதி மாறிய பின்பும்கூட எவ்வித அடிப்படை வசதிகளும் அற்று, தகரக் கொட்டகைகளில் மிக நெருக்கமான சூழலில், அபாயகரமான நிலையில் வசிக்கும் இந்த 200 குடும்பங்களைக் காபந்து பண்ண அரசின் எந்தத் துறையும் அக்கறை காட்டவில்லை.

கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளும் இணைந்து செயல்படுவது முக்கியம். குறிப்பாக, சென்னையின் குடிசைப் பகுதிகள் போன்ற நெருக்கடியான இடங்கள் கிருமித் தொற்றின் எளிதான இலக்குகள். சுகாதாரத் துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக இந்த உதாரணம் உங்களுக்குச் சொல்கிறதா?

- ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). தொடர்புக்கு: selvacpim@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x