Published : 17 Jun 2020 15:41 pm

Updated : 17 Jun 2020 15:41 pm

 

Published : 17 Jun 2020 03:41 PM
Last Updated : 17 Jun 2020 03:41 PM

இந்திய  சீனப் போர்: அரசுக்கு அண்ணா சொன்ன ஆலோசனை என்ன?

arignar-anna-to-government-amid-india-china-war

1962-ல் இந்திய சீனப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இந்திய அரசுக்கு அளவற்ற அதிகாரம் வழங்குவது குறித்த தீர்மானத்தை அன்றைய உள்துறை அமைச்சர் கொண்டுவந்தார். அந்த விவாதத்தில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று அறிஞர் அண்ணா (திமுக) பேசிய பேச்சின் பெரும் பகுதி இன்றைய சூழலுக்கும்கூட அப்படியே பொருந்துகிறது. 12.11.1962-ல் மாநிலங்களவையில் நம்முடைய நாட்டின் ஆளுமையான சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசிய பேச்சின் சுருக்கம் இங்கே...

''அவைத் தலைவர் அவர்களே!


என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கப் பெருமைப்படும் திமுகவின் சார்பாகவும் உள்துறை அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன். அரசாங்கத்திற்கு அளவற்ற அதிகாரங்களை நாடாளுமன்றங்கள் வழங்குவது அபூர்வமானதாகும். நாட்டின் கவுரவத்தையும், சுதந்திரத்தையும், சுயாட்சியையும் காப்பாற்றுகின்ற ஒரு பெரும் உன்னத லட்சியத்திற்காக நாடே ஒன்று திரண்டு எழும்போது கோஷ்டி, அரசியல் வேறுபாடுகள் மறைந்துபோய்விடுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் எல்லாக் கட்சிகளும் இணைந்து அரசாங்கத்திற்கு அசாதாரண அதிகாரங்களைத் தரும் செயலாகும்!

ஐயா, வேலூர் மத்திய சிறையிலுள்ள ஓர் அறையில் நான் அடைப்பட்டுக் கிடக்கும்போது சீன ஆக்கிரமிப்பைப் பற்றிய செய்தியைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது இயற்கையாகவே ஆளும்கட்சி மீது சிறிது ஆத்திரம் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய சிறை வாழ்வின் மிகக் கொடுமையான நாட்கள் கடைசி நாலைந்து நாட்கள்தான். அப்போதுதான் சீன ஆக்கிரமிப்புப் பற்றிய செய்தியையும் சீன ஆக்ரமிப்பாளர்கள் அலையலையாக வந்து எல்லையைத் தாண்டியதையும், நமது​ போர் வீரர்கள் வீரச்சமர் புரிந்தாலும் சில இடங்களையும், சில பல காவல் நிலையங்களையும் விட்டுவிட வேண்டிய நிலைமையையும் பற்றிய செய்திகளைப் படித்தேன். சூழ்நிலை பற்றி விரிந்த விளக்கங்கள் தருவதற்கு இது நேரமில்லை. தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் இது நேரமில்லைதான். உள்துறை அமைச்சர் கொண்டுவந்த இத்தீர்மானம் விவாதிப்பதற்கோ, சொற்போர் புரிவதற்கோ உரியதல்ல என்று நான் கருதுகிறேன்.

நமது எல்லைப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை அடித்துத் துரத்தும் ஒரு மகோன்னதக் கடமைக்கு நம்மைத் தயார்செய்து சூளுரைக்க இன்று நாம் கூடியுள்ளோம்! எனவேதான், கடந்த திங்கள் (செப்டம்பர்) 24-ம் நாள், நான் விடுதலை அடைந்ததுமே, நான் சார்ந்திருக்கப் பெருமைப்படும் திமுகவின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையின்படி திமுக தன் செயல்திட்டங்களை ஒத்திவைக்கும் என்றும், ஆக்கிரமிப்பாளரை விரட்டும் இந்திய அரசினருக்கு ஆதரவாக தனது சக்தி முழுவதையும் தரும் என்றும் அறிவித்திருந்தேன்.

இங்கே ஓர் ஆக்கிரமிப்பாளன் நுழைந்துவிட்டான். யாரும் இதில் சந்தேகப்படத் தேவையில்லை. ஆக்கிரமிப்பாளனின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும் நமது குறிக்கோள் மிகமிகத் தெளிவானது. நாம் நாட்டின் கவுரவத்தைப் பாதுகாக்க விரும்புகிறோம்; அதேபோன்று ஜனநாயகத்தின் பயனையும், கவுரவத்தையும் பாதுகாக்க விரும்புகிறோம். இந்தப் பெரிய சச்சரவுக்கான காரணங்களை இந்த நேரத்தில் கிளப்புவது வழக்கமல்ல.

எனினும், நான் இதை வெறும் எல்லை மீறலாகக் கருதவில்லை; வெறும் ஆக்கிரமிப்பாகவும் கருதவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ நாம் இப்போது ஒரு சித்தாந்தப் போராட்டத்தில் இறங்கியிருப்பதாகவே கருதுகிறேன். இன்றைக்கு உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருக்கிறது. ஒன்று ஜனநாயக முகாம், இன்னொன்றை ஜனநாயகமற்ற முகாம் என்று கூறுவேன். அந்த முகாமில் உள்ள நாடுகளின் பெயரை நான் சொல்லப்போவதில்லை. எனினும், ஜனநாயகமற்ற முகாம் என்று மட்டும் இருப்பதைக் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கூடிவாழும் தத்துவம் இருப்பது நமக்கெல்லாம் தெரியும். ஜனநாயகம் அதனுடன் மாறுபட்ட அரசாங்கங்களோடு ஒத்துப்போவதுபோல், நெருக்கடிநிலை வரும்போது மாறுபட்ட அமைப்புடைய அரசாங்கங்களைவிட அதிகமான பலம் உள்ளது என்பதைக் காட்ட முடியாவிட்டாலும், அந்த அரசாங்கத்தைப் போல் ஜனநாயக அரசும் பலம் படைத்ததுதான் என்பதை நிரூபித்தாக வேண்டும்.

எனவேதான், ஜனநாயக அமைப்புகள், தங்கள் அரசியல் வேற்றுமைகளை மறந்து, பூசல்களைக்கூடப் பின்னணியில் வைத்துவிட்டு, ஒன்று சேர்ந்து முன்வந்து ஒரே குரலில் “ஆக்கிரமிப்பு தோற்கடிக்கப்பட வேண்டும், சீனர்கள் அவர்கள் எல்லைக்குள் விரட்டியடிக்கப்பட வேண்டும்” என முழங்குகின்றன.

எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் நமக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிர்வாகத் தலைவர், காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால், அவர்தான் இந்தப் பூபாகத்தின் பாதுகாவலன் என்பதிலும், இந்த நாட்டை உயிர்த்தெழச் செய்தவர் என்பதிலும், சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சீரிய லட்சியங்களின் களஞ்சியம் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. எனவேதான் நம்மில் சிலர் கூறிய யோசனைகளைப் பெருந்தன்மையான உணர்வுடன் சந்திக்க, அந்த ஜனநாயகத் தலைவர் பாதி வழி இறங்கி வந்து ஏற்றுக்கொண்டார். அவசியம் போர் முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். சீன ஆக்கிரமிப்பிற்கான உள் நோக்கத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

எல்லைப் பிரச்சினையைப் பற்றிக் கூடிப் பேச இந்த நாடு தயாராக இருக்கும்போது எல்லையில் ஏன் சீன நாடு போரிட வேண்டும்? அலையலையாக வந்து தவாங் அருகில் சில பல இடங்களைப் பிடித்துக்கொண்டு, போர் முகாம்களை அமைத்துக்கொண்டு தவாங்கைப் பாசறை வீடாக்கி மேலும் பெரியதொரு பாய்ச்சலுக்கு ஏன் சீனர் தயாராக வேண்டும்? சீனம் சினம் கொள்ளும்படி இந்த நாடு எந்தச் செயலைச் செய்தது? உத்தரப் பிரதேசத்திற்கு அருகில்கூடத் தங்கள் எல்லை இருப்பதாக ஏன் சீனர்கள் எண்ண வேண்டும்? சீனரின் இந்தச் செயலுக்கான உள் நோக்கைக் கவனிக்கும்போது நான் முன்பே சொன்னது போல் இது ஒரு தத்துவப் போராட்டம் என்று தோன்றுகிறது.

நமது அணிசேராக் கொள்கையைப் பலவீனம் எனப் பொருள் கொள்கின்றனர் சீனர்கள்! நமக்கு நண்பர்களே இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். பஞ்ச சீலத்தை நாம் மேற்கொண்டிருப்பதால் நம்மால் சண்டைபோட இயலாது என்று நினைக்கிறார்கள். தவறான இலக்கண அறிவு படைத்தவர்கள் சீனர்கள் என்று நான் கூறுவேன்! நாம் சண்டையிட மாட்டோம் என்றுதான் தொடர்ந்து கூறிவந்திருக்கிறோம். இப்படி நாம் கூறியதற்குப் பொருள் நம்மால் சண்டையிட முடியாது என்பதல்ல!

அழிவற்ற, புகழ் சார்ந்த மலைச்சாரலில் நமது போர் மறவர்கள் தங்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுதல்களும் வணக்கமும் உரித்தாகுக. அங்கே இப்போது தாக்கும் சக்தி பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் சீனர்களுக்கு “நாங்கள் சண்டையிட மாட்டோம் என்றால், சண்டையிட முடியாது என்று பொருளல்ல” என்ற பாடத்தைப் புகட்டுவோம்.

ஆகையால், மேன்மேலும் ஆயுதங்கள் போர் வீரர்களுக்குத் தரப்பட வேண்டும். எல்லையில் போராடும் ராணுவத்திற்கு ஆதரவாக நாடே திரண்டு நிற்க வேண்டும்! யுத்த காலத்தில், போர்க்களத்தைப் போலவே உள்நாட்டுத் துறையும் மிக முக்கியமானது. இன்றைய தினம் மக்கள் மனதில் குறிப்பிடத்தக்க உறுதியும், தெளிவும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். துணிச்சல் நிறைந்த போர் வீரர்களிடம்தான் இத்தகைய உணர்வு இருக்க முடியும். மக்கள் தம் உணர்வையும், செல்வத்தையும் அள்ளியள்ளித் தருகின்றனர். இது மட்டும் போதுமா என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்தப் போர் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ நடைபெறும் போர் அல்ல என்றும், இது நீண்ட காலப் போர் என்றும் பண்டிதர் கூறியிருக்கிறார். இது நீண்ட காலப் போராக இருக்குமானால் நம்முடைய கொள்கைகளை அதற்கேற்றபடி அமைத்துக்கொள்ள வேண்டாமா? சீனா போர்ப் பிரகடனம் செய்ய எண்ணும் வேளையிலாவது அதைச் செய்வது சரியல்லவா? “இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே போரே இல்லை; இந்திய - சீன மக்களின் நட்பு குலைக்கப்படவில்லை; சீனர்கள் எல்லையைப் பிடித்துக்கொண்டவர்கள் அல்ல” என்றெல்லாம் சீனர்கள் இப்போதும் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். போர்க்களத் தாக்குதலைவிடப் பயங்கரமான முறையில் சமாதானப் பிரச்சாரத் தாக்குதலைச் சீனர்கள் நடத்துகிறார்கள். நாட்டின் வளங்களை எவ்வளவு தூரம், எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதுபற்றி நம் மனதில் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள கீழ்மட்டத்தில் இருப்போரானாலும் மேல் மட்டத்தில் இருப்போரானாலும் முன் வந்து உதவிகளையும் நன்கொடைகளையும் அளித்துள்ளனர். ஏழை மனிதன் முன்வந்து வாரி வழங்கும்போது, சிற்றரசர்கள் தரும் நன்கொடை மிகக் குறைவாய் உள்ளது. எனவே, சிற்றரசர்களுக்குத் தரும் உதவித்தொகையை ஓராண்டுக்காகிலும் குறைத்து, பாதுகாப்பு நிதிக்கு அளிக்க வேண்டும். ஓராண்டுக்காகிலும் இதைச் செய்தால்தான் தரவாரியாக ஒவ்வொருவரும் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் என்பதைச் சாதாரணமான மனிதன் உணர்ந்துகொள்ள முடியும்.

இப்போதைய போர் நீண்ட போராக இருக்குமானால் நான் இன்னொரு யோசனையும் கூற விரும்புகிறேன். நமது வீரர்களுக்கு ஆயுத உதவி அளிக்க எந்த வழிவகையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நாம் ஆராய வேண்டும். போர் முனை பெரிதாகி இன்னும் போர் நீடிக்குமென்றால், அவ்வளவு காலம் எப்படி நம் வீரர்களுக்கு ஆயுத உதவி அளிக்கப்போகிறோம்? எவ்வகையான ஆயுதங்களை அவர்களுக்கு அளிக்கப் போகிறோம்?

பிரதம மந்திரி நேற்றைய தினம் கூறினார்கள். ஆயுதங்கள் வேகமாக உற்பத்திசெய்யப்படுவதாக! தொழிற்சாலைகள் வேலை முழுமூச்சுடன் நடப்பதாகவும்! தானே இயங்கும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார். நாம் இப்படி ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்போது சீனா கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்காது என்பதை நாம் உணர வேண்டும். உள்ளபடியே அவர்கள் ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்கிறார்கள்!

அவர்கள் இரும்புத் திரைக்குப் பின்னால் இருக்கும் காரணத்தால் அவர்களுடைய உண்மையான பலம் நமக்குத் தெரியாது. அவர்களின் மறைந்துள்ள சக்தியும் நமக்குத் தெரியாது, அவர்களுக்கு மறைந்துதவும் நண்பர்கள் யார் என்றும் நமக்குத் தெரியாது. எனவே, நமக்கு உதவத் துடிக்கும் நாற்பதுக்கும் அதிகமான நாடுகளின் நல்லெண்ணத்தை நாம் பெற வேண்டும்!

எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்று நான் கூற விழைகிறேன். நமது நாட்டிற்கு உதவத் துடிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுக்குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என நான் கருதுகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நம் மீது நட்புரிமை கொண்டாடும் நாடுகளுக்கு அக்குழு சென்று ஆயுத உதவி பெறும் அணியை நிறுவ வேண்டும். நமக்குத் தேவைப்படும் எல்லா ஆயுதங்களுக்கும் நாம் விலை கொடுக்க இயலாது.

சீனர்கள் மேலும் மேலும் ஆக்கிரமிக்கும்போது நாம் மேன்மேலும் ஆயுதங்களை உற்பத்தி செய்துதான் உபயோகிக்க வேண்டும் என்றும் நான் கருதவில்லை. எனவே, ஆயுத உதவி பெறும் அணி அமைக்கப்பட வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுக்குழு அமைக்கப்பட வேண்டும். அந்தத் தூதுக்குழுவில் ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சியினரும் இடம்பெற வேண்டும்.

இதன் மூலம் சர்க்காரின் கொள்கையை ஆளும் கட்சி மட்டுமல்ல; நாட்டிலுள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் கடைப்பிடிப்பதில் உற்சாகமாகியுள்ளன என்பதை உலகிற்குக் காட்ட முடியும் என்பதால் இதைக் கூறுகிறேன்.

நம் மீது ஆதரவு எண்ணம் கொண்டிருக்கும் பிற நாடுகளிலிருந்தும் தொண்டர் படை திரட்டப்படலாம் எனக் கருதுகிறேன். இதில் தவறுமில்லை, இழுக்குமில்லை! நம்முடைய போர்க்களங்களில் வேற்று நாட்டு வீரர்கள்தான் போரிட வேண்டும் என்று நான் கூறவில்லை! ஜனநாயகத்திற்காகத் தங்கள் இன்னுயிர் தருகின்ற மக்கள் எங்குமிருக்கிறார்கள் என்பதை உலகம் உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதைக் கூறுகிறேன். எனவே, நான் கூறியபடி இந்த நல்லெண்ணத் தூதுக்குழு ஜனநாயக நாடுகளுக்குச் சென்று நிதி சேர்த்து, ஆயுதங்கள் சேர்த்து, தொண்டர்கள் சேர்த்து அனுப்ப வேண்டும் என விரும்புகிறேன். இதன் மூலம் நமது நடுநிலைக் கொள்கை எதிர்மறையானதல்ல, நமது அணிசேராக் கொள்கை எதிர்மறையானதல்ல என்பதைச் சீனா உணர வேண்டும்.

எந்த யோசனையும் வரவேற்கப்பட வேண்டும். எந்த நன்கொடையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அந்தக் கட்சி அல்லது இந்தக் கட்சிதான் சீனாவை எதிர்க்கிறது என்றில்லாமல், ஒரே கட்டுப்பாடான பேரணியாக நாம் திரண்டு சீனத் தாக்குதலைச் சந்திக்கலாம்! கருத்து வேறுபாட்டு அடிப்படையில் பேச நான் விரும்பவில்லை. ஓர் உறுப்பினர் கருத்து வேறுபாடுள்ள பிரச்சினையைத் தொடங்கிவிட்டார். “திபெத்தியர்கள் பிரச்சினையில் நாம் நடந்தது தவறில்லை” என்றார் அவர். நான் அவருடன் மாறுபடுகிறேன்.

திபெத், பூடான், சிக்கிம், நேபாளம் ஆகிய நாடுகளில் நமக்கு அக்கறை உண்டு! ஏனெனில், இயற்கையாக அவை இந்தியாவின் எல்லை நாடுகள். மஞ்சள் அபாயத்தைப் பற்றிய தகவல்களை வரலாற்று ஏடுகளில் காணலாம். ஆண் வம்சங்கள் ஆண்டபோதானாலும் சரி; சுன் யாட் சென்னின் புரட்சிக் காலமானாலும் சரி; சீனா மஞ்சள் அபாயமாக மாறி உலகம் முழுவதையும் பயமுறுத்தியது. உள்ளபடியே அங்கே இப்போது மஞ்சளுடன் சிவப்பும் கலந்திருக்கலாம். இந்தக் கலவையால் என்ன வண்ணம் வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், மஞ்சள் அபாயத்தைப் பற்றி எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

சீனா எப்போதெல்லாம் பலம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் தனது எல்லையைப் பெருக்கவே முனைந்திருக்கிறது. திபெத் நிகழ்ச்சிக்குப் பின் சீனாவின் மிக உயர்ந்த பதவி படைத்தவர் பேசிய பேச்சொன்றைப் படித்தேன். திபெத் சீனாவுக்குச் சொந்தம் என்று கூறுவதற்குப் பதிலாக, ஒரு விசித்திர வாதத்தைக் கூறினார். “திபெத் சீனாவுக்குச் சொந்தம். பூடானும், சிக்கிமும், லடாக்கும் திபெத்துக்குச் சொந்தம். எனவே, பூடானியர்களும், சிக்கிமியர்களும், திபெத்தியர்களும், லடாக்கியர்களும் தாயகமான சீனாவுக்குள் சேர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் அவர். இந்தத் தத்துவம் நடைமுறைப்படுத்தப்படுமானால் இது நீண்டதொரு தகராறு என்பது மட்டுமல்ல; நீண்ட காலப் போருக்கும் வழிவகுப்பதாகும்.

ஆகையால், நாம் எல்லா விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஜனநாயக நாடுகளை நம் அணிக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்த நாடுகள் அவ்விதம் அணி சேரும் என்று நான் நம்புகிறேன். பத்திரிகைகள் போர் விளம்பரத்திற்கு இலவச இடம் தர வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சர் கனம் கோபால் ரெட்டி விடுத்த வேண்டுகோளைப் படித்தேன். மந்திரி எவ்வளவு இடம் விரும்புகிறாரோ அவ்வளவு இடம் தர எனது கட்சி சார்பான நாளிதழ்களில், கிழமை இதழ்களில் இலவச இடம் ஒதுக்க நான் தயாராக இருக்கிறேன்.

எங்கள் கட்சிக்கு இரண்டு, மூன்று நாளிதழ்களும், பத்து, பதினைந்து வார இதழ்களும் இருக்கின்றன. பிரச்சாரம் வேகமான முறையில் இயங்க வேண்டும். பிற கட்சிகளுக்கும் உரிய இடம் தரப்பட வேண்டும். அப்படிச் செய்வதின் மூலம் நாட்டைக் காத்துச் சீனரை விரட்டுவதில் நாம் ஒரே குறிக்கோள் கொண்ட மக்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும்.

மேலும், இந்தச் சபையின் நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. உள்துறையமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிப்பதில் திமுக பெயரையும் பதிவுசெய்கிறேன். நாட்டின் எதிர்காலத்தையும் கவுரவத்தையும், பாதுகாப்பையும் காப்பாற்றும் இந்தப் போரின் பெருமைக்குரிய அணிவகுப்புப் பெயர்ப் பட்டியலில் திமுகவின் பெயரைப் பொறிக்கிறேன்''.

இவ்வாறு அறிஞர் அண்ணா அந்த விவாதத்தின் மீது பேசினார்.

இதன் தொடர்ச்சியாக திமுக தலைவர்களும், திமுகவைச் சேர்ந்த நடிகர்களும் பொதுக்கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் வாயிலாக இந்திய ராணுவத்துக்கு பெருமளவு நிதி திரட்டித் தந்தார்கள் என்பதும் திமுக தன்னுடைய தனிநாடு கோரிக்கையையும் ஒரு கட்டத்தில் கைவிட்டது என்பதும் வரலாறு.

தவறவிடாதீர்!


இந்திய  சீனப் போர்அண்ணா சொன்ன ஆலோசனைஅரசுஅண்ணாIndia- China warArignar AnnaGovernmentஇந்தியாசீனாமாநிலங்களவைஆற்றிய உரைSpecial articles

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x