Published : 15 Jun 2020 06:55 AM
Last Updated : 15 Jun 2020 06:55 AM

இணையகளம்: ஊர்ப் பெயர்களை முறையாக ஒலிபெயர்ப்பது எப்படி?

ஊர்களின் பெயரை ஆங்கில எழுத்தில் எப்படி எழுதலாம் என்பது குறித்து அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. மாற்றியது தவறல்ல; மாற்றிய முறை, நேரம் குறித்து எனக்குப் பல கேள்விகள் எழுகின்றன.

நமது நோக்கம் என்ன? ஒரு தமிழ் எழுத்தை ரோமன் வரிவடிவத்தில் (ஆங்கில வரிவடிவத்தில்) எழுத வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்கு முதலில் தமிழ் நெடுங்கணக்கின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிக்கும் அசைக்குமான ரோமன் வரிவடிவ அட்டவணையை உருவாக்கி, மொழியியலாளர்கள், தமிழ் பேசும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவெடுக்க முடியும். இல்லையென்றால் குழப்பம் வரும். தற்போது இதுபோன்ற தரநிர்ணயம் ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா, அதைப் பின்பற்றித்தான் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றவா என்று தெரியவில்லை.

வேலூர் எப்படி ‘Veeloor’ ஆக மாற்றப்படுகிறது? ‘ee’க்கான விதியும் ‘oo’க்கான விதியும் ஒரே மாதிரியாக இதில் பின்பற்றப்படவில்லை. ‘e’ குறில், அதற்கு ‘ee’ நெடில் என்றால், ‘u’ குறிலுக்கு ‘uu’ தான் நெடிலாக வந்திருக்க வேண்டும். அல்லது ‘u-oo’ என்று வர முடியும் என்றால், ‘e-ae’ என்றுகூடச் சொல்ல முடியும். சரி, வேளூர் என்ற பெயரை என்ன செய்வார்கள்?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘ஐபிஏ’ (International Phonetic Association) முறையில், தமிழுக்கு ஒரு ரோமன் வரிவடிவத் தரநிர்ணயம் செய்வது குறித்துப் பலரும் பேசியிருக்கிறோம். அது அப்போது கணிப்பொறியில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழைத் தட்டச்சு செய்வதற்கான தேவைக்காகப் பேசப்பட்டது. சீன மொழிக்கு ‘Pinyin’ முறையும் ஜப்பானிய மொழிக்கு ‘Romaji’யும் இருப்பதுபோல தமிழுக்கு ஒரு தரநிர்ணயம் வேண்டும் என்று அப்போது நான் பல இடங்களில் பேசியிருக்கிறேன்.

இந்த முக்கியமான படிநிலையைக் கடக்காமல், அதாவது ‘Tamil Romanization Rule’ ஒன்றை உருவாக்கித் தரநிர்ணயத்தை அடையாமல், இது போன்ற மாற்றங்களைச் செய்தால், அது அரைகுறை முயற்சியாகவே முடியும். ஊர்ப் பெயர்களுக்கு மட்டுமல்ல; ஆள் பெயர்களுக்கு, நூல்களின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள் போன்றவற்றையெல்லாம் ஆங்கில வரிவடிவத்தில் எழுத இது தேவை.

எனக்கு ஒரு கருத்து உண்டு. இது ஒரு பரிந்துரை மட்டுமே. குறில், நெடில் வேறுபாட்டுக்கு, வேறுபடுத்தக் குறியீடுகளை (diacritic marks or accent) இடுவதே அழகான தீர்வு. சில ஐரோப்பிய மொழிகளில் அதைப் பார்க்கலாம். இதைப் போல மெய்யெழுத்துகளில் வித்தியாசம் செய்ய வேறுவிதமான வேறுபடுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, வேலூரை ‘Vélúr’ என்று எழுதலாம். நாம் பயன்படுத்தும் ஆங்கில எழுத்துருக்களிலேயே இந்த வடிவங்கள் இருக்கின்றன. ஆனால், இதற்கான தரநிர்ணயத்தைச் செய்ய வேண்டும். அனைவரும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கோயம்புத்தூர் ‘Koyamputhur’. இதில் அசை சார்ந்த முடிவும் இருக்கிறது. புதூர், புத்தூர் ஆகிய ஊர்களை ‘Pudhúr’, ‘Puthúr’ என்று ஒலிபெயர்க்கலாம். ‘dh’ என்பது ‘த்’-ஐயும் ‘th’ என்பது ‘த்த்’-ஐயும் குறிக்கும். இங்கே ஒலிபெயர்க்கப்படுவது எழுத்துகள் மட்டுமல்ல; ஒலி, அசையும்கூட. ஆனால், இவற்றை சந்தேகமில்லாத வரையில் முதலில் தரநிலைப்படுத்த வேண்டும். அப்படியென்றால், கோயம்புத்தூரை ‘Kóyamputhúr’ என்று ஒலிபெயர்க்கலாம். (இப்படித் தட்டச்சிடுவது எளிதுதான். மைக்ரோசாப்ட் வேர்டில் ‘Ctrl Apostrophe u’ அடித்தால் இந்தக் குறியீடு ‘ú’ வரும்.)

இதைப் போலவே ள, ல, ழ, ந, ன, ண, ர, ற வேறுபாடுகளுக்கும் ஒரே எழுத்து இடத்துக்கேற்ப ஒலியழுத்தம் மாறக்கூடிய நேர்வுகளுக்கும் (க என்ற எழுத்து கங்கை என்ற சொல்லில் இரு ஒலிகளைக் கொண்டிருக்கிறது) நாம் முதலில் வரிவடிவ மாற்ற விதிகளை உருவாக்க வேண்டும். அதைச் செய்துவிட்டால், அதன் பிறகு, கோடி பெயர்களாக இருந்தாலும் ஒரு நொடியில் கணிப்பொறி மூலம் ஒலிபெயர்த்து எழுதிவிடலாம். யார், எங்கே ஒலிபெயர்த்தாலும் அது மாறாது.

ஆனால், நிச்சயமாக இது கரோனா கால வேலையே கிடையாது. இப்போதைக்குப் பல்வேறு மாவட்ட ஆட்சியரகங்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், அறிஞர்கள் பலர் கூடித் திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டிய ஒரு சமூகச் செயல்பாடு இது.

- ஆழி செந்தில்நாதன், ‘தன்னாட்சித் தமிழகம்’ கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்.

தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x