Published : 28 Sep 2015 08:56 AM
Last Updated : 28 Sep 2015 08:56 AM

பிரிவினை அல்ல, கூட்டுவினை!

இப்பூவுலகிலிருந்து ஓர் உயிரி அற்றுப்போவதும் ஒரு மொழி வழக்கொழிந்துபோவதும் ஒன்றேதான்

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போரின் 50-வது ஆண்டை மொழியுரிமை ஆண்டாகக் கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம், ‘தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தினர்’ அறிவித்தபோது, அது ஒரு வெற்றுச் சூளுரையாகவே பலருக்கும் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தால் நடத்தப்பட்ட மொழி உரிமை மாநாடு இந்தியத் துணைக்கண்ட மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் நிச்சயமாக ஒரு மைல்கல்லாகவே பதிவாகியிருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் அம்மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களில் பலர் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து வந்தவர்கள். எங்கிருந்தோ வந்தவர்கள் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியபோது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த மொழிப் போராட்டத் தியாகிகள் நெகிழ்ந்தார்கள். பிற பார்வையாளர்கள் வியந்தார்கள். “இவர்கள் தமிழ் மொழிக்காகப் போராடிய தியாகிகள் மட்டுமல்ல, எங்களுடைய தியாகிகளும்கூட” என்று பிற மாநிலப் பிரதிநிதிகள் பேசியபோது தமிழ் இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்தது. பிற மாநிலத்தவர்களின் பேச்சில் உண்மை இருந்தது. இந்தித் திணிப்பின் கோரப்பிடிக்குள் சிக்கித் தங்கள் அடையாளத்தை இழந்தவர்கள் அவர்கள். அதனால்தான் பெங்களூரிலிருந்தும் கொல்கத்தாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் பாட்டியாலாவிலிருந்தும் காலடியிலிருந்தும் நாம் புராணங்களில் மட்டுமே படித்திருக்கும் கோசல நாட்டிலிருந்தும் வந்த பிரதிநிதிகள் அவரவர் மொழிகளை அழிவிலிருந்தும் இழிவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக நம்மோடு கைகோக்க அணியமாக இருந்தார்கள். நமது நீண்டநெடிய மொழிப் போராட்ட வரலாற்றிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்த்தார்கள். “நான் ஒரு புனித யாத்திரையாகத் தமிழகத்துக்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு முடித்தவரும் கொல்கத்தாவில் உயர்நிலைக் கல்வி நிறுவனமொன்றில் பணியாற்றுபவரும் வங்க மொழிப் போராளியுமான கார்கா சாட்டர்ஜி.

ஆதிக்க சக்திகளின் குறுக்கீடு

தமிழ் மொழியுரிமைக்காகப் போராடும் அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தையும் இந்தியாவின் பிற மொழிகளின் பிரதிநிதிகளையும் இணைத்தது எது? எந்த மொழிகளையும் நாம் எதிரிகளாக இனம் காணவில்லை. ஆனால், சில ஆதிக்க சக்திகள் ஒரு சில மொழிகளைக் குண்டாந்தடிகளாகக் கொண்டு நம்மை அடிப்பதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்பதுதான் எல்லோருடைய பொதுக்கோரிக்கையாக இருந்தது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் நமது மொழிகளைத் துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. நமது மொழிகளோ அதிகாரமின்றித் தமது பிடிப்பை இழந்துகொண்டிருக்கின்றன. எந்தச் சந்தை அடிப்படைவாத சக்திகள் இயற்கையைக் கொன்று உயிர்ப்பன்மையை அழித்துக்கொண்டிருக்கின்றனவோ அதே சக்திகள்தான் மொழிப்பன்மையையும் சேர்த்து அழித்துக்கொண்டிருக்கின்றன. எந்த மதவாத சக்திகள், இந்தியாவின் பன்மத அடித்தளத்தை நிர்மூலமாக்குகின்றனவோ, அதே சக்திகள்தான் இந்தியாவின் பன்மொழி அடித்தளத்தையும் நிர்மூலமாக்குகின்றன.

மொழியுரிமைக்கான சென்னைப் பறைசாற்றம்தான் இந்த மாநாட்டின் மையமான நிகழ்வாக இருந்தது. சென்னைப் பறைசாற்றம் என்ன சொல்கிறது? அது முதலில் இந்தியாவில் பாதிப்பில் சிக்கியுள்ள மொழிகளை மூன்றாகப் பிரிக்கிறது.

முதலாவது, இந்திய அரசியல்சாசனத்தின் 8-ம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மொழிகள். இவற்றில் பல மொழிகள் மாநிலங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. பல ஆகாமலும் இருக்கின்றன. இந்த மொழிகளை மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.

இரண்டாம் வகை மொழிகள், 8-வது பட்டியலில் இடம்பெறுவதற்காக போராடிக்கொண்டிருப்பவை. முதல் வகை மொழிகளுக்குக் கொஞ்சமேனும் அதிகாரம் இருக்கிறது என்றால், இரண்டாம் வகை மொழிகளுக்கு அதுகூட இல்லை. எத்தனை மொழிகள் தங்களை 8-ம் அட்டவணையில் இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளன? மத்திய உள்துறை அமைச்சகமே அந்த பதிலைச் சொல்கிறது. 1.அங்கிகா, 2. பஞ்சாரா (லம்பாடி), 3. பாஸிகா, 4. போஜ்புரி, 5.போத்தி, 6.போதியா, 7.புந்தேல்கண்டி, 8.சத்தீஸ்கரி, 9.தக்தி, 10.ஆங்கிலம் 11.கார்வாலி 12.கோந்தி, 13. குஜ்ஜாரி, 14.ஹோ, 15.கச்சாச்கி 16.காமத்பூரி 17.கார்பி 18.காஷி 19.குடகு 20.கோக் பாராக் 21.குமோவானி 22.குராக் 23. குர்மாலி 24.லெப்சா 25. லிம்பு 26. மிசோ 27. மாகஹி 28.முண்டாரி, 29.நாக்பூரி 30.நிகோபாரி 31. இமாச்சலி 32.பாலி 33.ராஜஸ்தானி, 34. கோசலி, 35.செளரசேனி, 36.சிராய்கி, 37.தென்யிதி 38. துளு.

மேற்கண்ட பட்டியலில் உள்ள போஜ்புரி, அங்கிகா, புந்தேல்கண்டி, சத்தீஸ்கரி, கார்வாலி, லம்பாடி, குமோவானி, மாகஹி, இமாச்சலி, ராஜஸ்தானி, கோசலி போன்ற மொழிகளை இந்தியின் வட்டார வழக்குகள் என்று இந்திய அரசு சொல்கிறது. இல்லை என்று மறுக்கிறார்கள் இம்மொழிகளைப் பேசுபவர்கள். ஏற்கெனவே மைதிலி, தோக்ரி போன்ற மொழிகள் போராடி 8-ம் அட்டவணையில் இணைந்திருக்கின்றன. 8-ம் அட்டவணையில் இடம்பெறுவதால் அப்படி ஒன்றும் பயனில்லை என்று தெரிந்தும், தங்களுடைய அடையாளத்துக்காகவாவது அதில் இடம்பெற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. அது அரசியல் சாசன அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இம்மொழியினரின் கோரிக்கையை சென்னைப் பறைசாற்றம் ஏற்கிறது.

பரிதவிக்கும் மொழிகள்

மூன்றாவது வகையிலான மொழிகள் மிகவும் பரிதாபகரமானவை. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 122 பெரிய மொழிகளும் (10,000-க்கும் மேற்பட்டோர் பேசும் மொழிகள்) 1,599 சிறிய மொழிகளும் இருக்கின்றன. பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் வெளியிட்ட இந்தியாவின் மக்கள் மொழிக் கணக்கெடுப்பு, அதிர்ச்சிகரமான பல தகவல்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் வழக்கொழிந்துபோயிருக்கின்றன. இந்த மொழிகள் விடும் இறுதி மூச்சைக் கேட்க நீங்கள் நீலகிரிக்கும் மத்திய இந்திய காடுகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இமயமலை அடிவாரங்களுக்கும் செல்ல வேண்டும். பெரிய மொழிகளைப் பேசுவோர் எப்போதும் சிறிய மொழிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வலியவன் வாழ்வான் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இம்மொழிகளின் மரணத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அந்தந்த மொழி பேசுவோரைப் பொறுத்தவரை அத்தகைய மரணங்கள் அந்த இனக்குழுவின் பேரூழி. இப்பூவுலகிலிருந்து ஓர் உயிரி அற்றுப்போவதும் ஒரு மொழி வழக்கொழிந்துபோவதும் ஒன்றேதான். இவ்வாறான அழிவின் விளம்பில் உள்ள மொழிகளுக்காகவும் சென்னைப் பறைசாற்றம் குரல் கொடுக்கிறது.

இதுவரை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட பேரரசுவாத மற்றும் காலனியவாத தன்மையுள்ள மொழிக்கொள்கை இனி நீடிக்க முடியாது என்பதை இந்த மாநாடு உணர்த்தியிருக்கிறது. அந்த அளவில் இந்த மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. பல்வேறு மொழியினர் மாநாட்டிலும், மாநாட்டுக்கு வெளியே இணையப் பரப்பிலும் இணைந்து நின்ற காட்சி, ஒரு நிலைமாறு புள்ளியாகக் கருதப்படக் கூடியது. இது காலத்தினால் ஏற்பட்ட நல்வினை. பிரிவினை அல்ல, கூட்டுவினை!

- ஆழி.செந்தில்நாதன்,

தமிழ் மொழியுரிமைக் கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர்.

தொடர்புக்கு; mozhiurimai2015@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x