பொறுப்பற்ற காரியங்களால் கரோனா ஒழிப்பில் பிரேசிலைப் பின்னடையச் செய்த போல்ஸனாரோ!

பொறுப்பற்ற காரியங்களால் கரோனா ஒழிப்பில் பிரேசிலைப் பின்னடையச் செய்த போல்ஸனாரோ!
Updated on
3 min read

ஒரு தேசம் நெருக்கடியான சமயத்தில் இருக்கும்போது, பொறுப்புள்ள தலைவர்கள் அந்த நெருக்கடியிலிருந்து மக்களைக் காக்கக் கடுமையாக உழைப்பார்கள். இன்றைக்குக் கரோனா வைரஸ் எனும் ஒற்றை அபாயத்தை உலகமே எதிர்கொண்டிருக்கும்போது சில தலைவர்களின் செயல்பாடுகள், தலைமைப் பொறுப்பு என்பதன் அர்த்தத்தையே கேலிக்குள்ளாக்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்குத்தான் முதலிடம். அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவரும் அவரது நெருங்கிய சகாதான். அவர்- பிரேசில் அதிபர் ஜேர் போல்ஸனாரோ.

கரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது பிரேசில். இன்றைய தேதிக்கு 8,29,902 பேர் அங்கே தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 41,901 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலைக்கு பிரேசில் செல்ல முக்கியக் காரணம் அதிபர் போல்ஸனாரோதான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்விஷயத்தில் ஆரம்பம் முதலே அவர் காட்டிய அலட்சியமும், ஆணவமும் ட்ரம்ப்பைவிட ஒருபடி அதிகம் என்றே சொல்லலாம்!

ஜனநாயகத்துக்கும் அறிவியலுக்கும் எதிரானவர்
உலகின் நான்காவது மிகப் பெரிய ஜனநாயக நாடான பிரேசிலின் அதிபராகப் பதவி வகிக்கும் போல்ஸனாரோ ஒரு தீவிர வலதுசாரித் தலைவர். ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். துப்பாக்கித் தடைச் சட்டங்களைத் தளர்த்துவது, போலீஸுக்குக் கட்டற்ற அதிகாரங்களை வழங்குவது என்பன போன்ற கருத்துகளைக் கொண்டவர்.

கரோனா விஷயத்தில் அவர் மேற்கொண்ட அணுகுமுறைகள், அறிவியல், மருத்துவம் போன்றவற்றில் அடிப்படை அறிவைக் கொண்ட யாரையும் திகைக்கச் செய்பவை. “இது சளிக் காய்ச்சலைவிட (Flu) ஒன்றும் மோசமான நோயல்ல” என்றுதான் ஆரம்பத்திலிருந்து பேசிவருகிறார். ஏப்ரல் மாதத்தில், பலி எண்ணிக்கை சீனாவைவிட அதிகம் எனும் செய்திகள் வெளியாகின. புதைக்க இடமின்றி கொத்துக்கொத்தாகச் சடலங்கள் புதைக்கப்பட்டன. அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் சவக்குழி தோண்டுபவன் அல்ல” என்றார் அலட்சியமாக. பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “அதனால் என்ன? சரி, இவ்விஷயத்தில், என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று சீறினார்.

கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை அலட்சியம் செய்தார் போல்ஸனாரோ. மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் தனிமனித இடைவெளியை அமல்படுத்தவே செய்தன. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே அவர் பேசிவந்தார். அதுமட்டுமல்ல, பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் செல்வது, பலர் முன்னிலையில் இருமுவது, மக்களிடம் கைகொடுத்துப் பேசுவது என்று கரோனா காலத்தில் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அவை அனைத்தையும் செய்தார். உலக சுகாதார நிறுவனத்தைப் பழிசொல்வதிலும் ட்ரம்ப்புக்கு நிகரானவராக இருக்கிறார். அந்த அமைப்பிலிருந்து வெளியேறப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார் போல்ஸனாரோ.

ஊடகங்கள் மீது பாய்ச்சல்
கரோனா விஷயத்தில் அறிவியல் சமூகமும் ஊடகங்களும் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் போல்ஸனாரோ. கரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என்பது அவரது வாதம். இவ்விஷயத்தில் தன்னை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது வெளிப்படையாகவே வெறுப்பை உமிழ்கிறார்.

ஒருமுறை தன்னைப் பேட்டியெடுக்க வந்த செய்தியாளர்களைப் பார்த்து, “என்னவோ நான்தான் தவறு செய்வதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள். உங்களுக்குக் கரோனா குறித்த அச்சம் இல்லையா? வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று விரட்டினார். தலைவரே இப்படி என்றால் தொண்டர்கள் ஒருபடி மேலே செல்லமாட்டார்களா! இப்போதெல்லாம், செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களின் மைக்குகளைப் பிடுங்கி, கேமராக்களைத் தட்டிவிட்டு அவரது ஆதரவாளர்களும் அக்கிரமம் செய்துவருகிறார்கள். இது தொடர்பாக, ‘அல் ஜஸீரா’ போன்ற சர்வதேச ஊடகங்கள் விரிவாகப் பதிவு செய்திருக்கின்றன.

மறுபுறம், போல்ஸனாரோவுக்கு ஆதரவான ஊடகங்கள் கரோனா வைரஸ் குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகின்றன. தனக்கு ஆதரவான ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்களை அதிகம் தருவது, விமர்சிக்கும் ஊடகங்களுக்கு விளம்பரங்களை நிறுத்திவைப்பது என்பன போன்ற வழிமுறைகளையும் போல்ஸனாரோ பயன்படுத்துகிறார்.

சுகாதாரத் துறையில் குழப்பம்
சுகாதாரத் துறையை அதிபர் கையாளும் விதம் இன்னும் கொடுமையானது. ஏப்ரல் 16-ல் சுகாதாரத் துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக்கைப் பதவி நீக்கம் செய்த போல்ஸனாரோ, நெல்ஸன் டெய்ச் என்பவருக்கு அந்தப் பதவியை வழங்கினார். தனிமனித இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் லூயிஸ் காட்டிய தீவிர முனைப்புதான் அவரது பதவி பறிக்கப்பட காரணம் என்று செய்திகள் வெளியாகின. அதிபரின் அபத்த நடவடிக்கைகள் அத்துடன் நின்றுவிடவில்லை.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் கரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவை என்று ட்ரம்ப்பைப் போலவே பேசிவருபவர் போல்ஸனாரோ. அந்த மருந்தின் பக்கவிளைவு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் இன்றுவரை எச்சரித்து வருகின்றனர். நெல்ஸன் டெய்ச்சும் இவ்விஷயத்தில் அதிபரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. விளைவு, ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அவரே பதவி விலகிவிட்டார். அறிவியலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட போல்ஸனாரோவிடம் குப்பை கொட்ட முடியாது என்பதாலேயே அந்த முடிவை நெல்ஸன் எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

தரவுகளை மறக்க முயற்சி
இதற்கிடையே, கரோனா பாதிப்பு குறித்த தரவுகளை மறைக்கும் வேலையிலும் போல்ஸனாரோ அரசு ஈடுபட்டது. “கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது எனும் தகவல் மட்டும் இனி வெளியிடப்படும். மொத்த எண்ணிக்கை வெளியிடப்படாது” என்று பிரேசில் சுகாதாரத் துறை அறிவித்தது உலகையே அதிரவைத்தது. அதுமட்டுமல்ல, இதுவரையிலான தரவுகள் அரசு இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸுக்குப் பலியாகின்றவர்களின் சராசரி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த நிலையில் இப்படி ஒரு பித்தலாட்டத்தில் பிரேசில் அரசு இறங்கியது. அந்நாட்டின் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, கரோனா பாதிப்பு குறித்த தரவுகள் மீண்டும் வெளியிடப்படுகின்றன.

கைவிடப்பட்ட மக்கள்
பிரேசிலில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் கரோனா வைரஸ் பரவலுக்கு முக்கியக் காரணியாகியிருக்கின்றன. மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகள் ஏராளம். அங்கு வசிக்கும் பலர் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மூலம் பெருந்தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாட்டின் சரி பாதி மக்கள், முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். பலரும் நடைபாதைக் கடை வியாபாரிகள், உழைக்கும் மக்கள் என்பதால் தனிமனித இடைவெளி என்பது முழுமையாக அமல்படுத்தப்பட முடியாத விஷயமாகிவிட்டது. கரோனா பெருந்தொற்றையே அலட்சியம் செய்யும் போல்ஸனாரோ அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் தவறிவிட்டது.

இதனால், கடும் கோபமடைந்திருக்கும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது அதிபரின் ஆதரவாளர்கள் தாக்குதல் தொடுக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர், உயிரிழந்தவர்களின் நினைவாக கொபாகபானா கடற்கரை மணலில் மாதிரிக் கல்லறைகளை உருவாக்கி அவற்றின் மீது சிலுவைகளை நட்டிருந்தனர் சிலர். அப்போது அங்கு சென்ற போல்ஸனாரோ ஆதரவாளர் ஒருவர், அந்தச் சிலுவைகளைப் பிடுங்கிப்போட்டார். “போராட்டக்காரர்கள் இடதுசாரிகள். அவர்கள் சீனாவுக்குச் செல்லட்டும்” என்று அவரது ஆதரவாளர்கள் முழங்குகிறார்கள்.

ஆதரவும் எதிர்ப்பும்
அமேசான் காடுகள் பற்றியெரிந்தபோதும் இப்படி அலட்சியம் காட்டியவர்தான் போல்ஸனாரோ. அவரது தவறான கொள்கைகள்தான் அமேசான் காடுகள் நெருப்புக்குப் பலியாக முக்கியக் காரணம் என்று இன்றும் விமர்சிக்கப்படுகிறது. பிரேசிலின் ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை போல்ஸனாரோவும் அவரது ஆதரவாளர்களும் தொடுத்துவருகின்றனர். நாடாளுமன்றம், நீதிமன்றம் போன்றவற்றை மூடிவிட்டு மொத்தமாக ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என்று பேசுபவர்களுக்குத் தார்மீக ரீதியில் ஆதரவளிக்கிறார் போல்ஸனாரோ.

1964 முதல் 1985 வரை ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் சிக்கித் தவித்த பிரேசில், கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போல்ஸனாரோவின் செயல்பாடுகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தத் தருணத்தில், கரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தை அடைந்திருக்கும் செய்தியைப் பொருத்திப் பார்ப்பது, ஒருவகையில் பொருத்தம் இல்லாததாகத் தெரியலாம். ஆனால், அந்த வாதம் நிச்சயம் புறந்தள்ள முடியாதது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in