Published : 25 Aug 2015 08:46 AM
Last Updated : 25 Aug 2015 08:46 AM

மெல்லத் தமிழன் இனி பாகம் 2 - ஏற்றம் தரும் எத்தனால் உற்பத்தி!

சாராய ஆலைகளின் தயவு இல்லாமல் சர்க்கரை ஆலைகளின் சங்கடங்களைத் தீர்க்க வழிகள் நிறைய இருக்கின்றன. அதில் ஒரு வெற்றிகரமான வழி இது. மொத்தக் கரும்பையும் சர்க்கரை உற்பத்திக்கு மட்டும் பயன்படுத்துவதால்தானே கூடுதல் உற்பத்திப் பிரச்சினை ஏற்படுகிறது.

உற்பத்தியைக் கொஞ்சம் மடைமாற்றினால் சமநிலை ஏற்படும் இல்லையா. கரும்பிலிருந்து சர்க்கரை மட்டும்தான் தயாரிக்க முடியுமா? எத்தனால் தயாரிக்கலாமே. எத்தனால் என்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத ஓர் எரிபொருள். கரும்புச் சாற்றுடன் Saccharomyces cerevisiae என்கிற நுண்ணுயிரி சேர்க்கப்படும்போது உருவாகிறது.

ஒரு டன் கரும்பிலிருந்து 70 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். அதாவது, ஒரு கிலோ சர்க்கரைக்குப் பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை விலை வைக்கலாம். இதன்படி ஒரு டன் கரும்புக்கு ரூ.2,450 முதல் ரூ.3,150 வரை விலை கிடைக்கும். இது கரும்பிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் எத்தனால் மூலம் கிடைக்கும் வருவாய். இன்னொரு பக்கம், சர்க்கரை உற்பத்தியின்போது கிடைக்கும் கழிவான மொலாசஸிலிருந்தும் எத்தனால் தயாரிக்கலாம். இதன்படி ஒரு டன் மொலாசஸிலிருந்து 10 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யலாம். இது உபரி வருவாய். உபரி லாபம்.

உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசலில் லிட்டருக்கு 25% முதல் 85 % வரை கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம். மத்திய அரசு கடந்த 2012-ல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஓர் உத்தரவிட்டது. அதில், ஒரு லிட்டர் பெட்ரோலில் முதல்கட்டமாக 5% எத்தனாலை கலக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. இதன் மூலம் சுமார் 105 கோடி லிட்டர் (1.8 மி.பேரல்) கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியும்.

முன்னதாக 2010, ஆகஸ்ட் 16-ல் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எத்தனாலுக்கு குறைந்தபட்ச விலையாக லிட்டருக்கு ரூ.27-ஐ நிர்ணயித்தது. தொடர்ந்து 2014 டிசம்பரில் ரூ.48.50 - 49.50 என விலையை உயர்த்தி நிர்ணயித்துள்ளது. இதனால், தற்போது நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களில் சுமார் 25 % மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் வகையிலான Flexible fuel engine கொண்டவையாக வடி வமைக்கப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும்விட எத்தனால் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எத்தனாலில் 35% ஆக்ஸிஜன் உள்ளது. எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி 34% வரை (பெட்ரோல், டீசல் ஓப்பீட்டு அளவில்) குறைகிறது. காற்றில் மாசு அளவும் குறைகிறது. 6,800 முதல் 8,000 லிட்டர் எத்தனால் உற்பத்தி மூலம் 87 முதல் 97% வரை பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முடியும் என்கின்றன ஆய்வுகள். தவிர, 4.5 லிட்டர் எத்தனால் உற்பத்திக்கு 12.15 லிட்டர் மட்டுமே மறைநீர் தேவை. இது ஒரு கோப்பை காபிக்கு ஆகும் மறை நீர் தேவையைவிட (180 லிட்டர்) பலமடங்கு குறைவு.

இதனால் அமெரிக்கா, பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எத்தனால் பயன்பாட்டுக்கு மாறிவிட்டன. 1976-ல் எத்தனால் பயன்பாட்டைத் தொடங்கிய பிரேசில், இன்று 100% எத்தனாலை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான வாகனங்களை உற்பத்திசெய்கிறது. அமெரிக்கா கடந்த 2009-ல் 10.6 பில்லியன் கேலன்கள் எத்தனால் உற்பத்தி மூலம் 4,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது; உபரியாக 30.5 மில்லியன் மெட்ரிக் டன் கால்நடைத் தீவனத்தை உற்பத்தி செய்தது; 364 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது.

நாம் நமது கச்சா எண்ணெய் தேவையில் 80% இறக்குமதி செய்கிறோம். ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களால் புவி வெப்பமயமாதல் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது. மறுபக்கம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நிலையாக இருப்பதில்லை. மதுவிலக்கு என்கிற ஒற்றை ஆயுதத்தில் இத்தனை இடர்ப்பாடுகளையும் களைய முடியும்.



தெளிவோம்...

- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x