Last Updated : 30 Aug, 2015 10:57 AM

 

Published : 30 Aug 2015 10:57 AM
Last Updated : 30 Aug 2015 10:57 AM

கட்சி அரசியல் அல்ல; மக்கள் நலனே முக்கியம்: ரணில் விக்ரமசிங்கே பேட்டி

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உற்சாகமாக இருக்கிறார். மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளினூடே அவரைப் பார்க்கிறார்கள். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல சவால்கள் அவர் முன் நிற்கின்றன. ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலின்போது, இந்தச் சவால்களை அவரும் உணர்ந்திருப்பது புரிந்தது. நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே.

இலங்கைக்குப் புதிய அரசியல் சட்டம் வகுக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள்; கடைசியாக 1978-ல் இயற்றப்பட்டது, அதிலும் உங்களுடைய பங்களிப்பு இருந்தது. அதற்கும் முன்னால் 1972. இதில் உங்களுக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது. இதை இயற்ற நீண்ட காலம் பிடிக்காதா?

இலங்கை சுதந்திரக் கட்சி இதற்கு ஓராண்டு பிடிக்கும் என்று நினைக்கிறது. நாங்கள் (ஐக்கிய தேசியக் கட்சி) 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தேர்தல் நடத்த புதிய முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் கலந்திருக்க வேண்டும் என்பதில் எங்களுக்குள் கருத்தொற்றுமை இருக்கிறது. பொதுப் பட்டியலில் எவ்வளவு இருக்க வேண்டும், விகிதாச்சாரத்தில் எவ்வளவு என்பதில்தான் கருத்து வேற்றுமை நிலவுகிறது. நாட்டின் அதிபர் பதவி தொடர்பாகவும் கருத்துகள் வேறுபடுகின்றன. நிர்வாக அதிகாரம் கொண்ட அதிபர் பதவி கூடாது என்பது மக்கள் குழுக்களின் கருத்து. இலங்கை சுதந்திரக் கட்சி அக்கருத்தை எதிர்க்கிறது. இதை முற்றாகப் பரிசீலிக்க வேண்டும்; நாடாளுமன்றத்துக்கு வலுவூட்ட வேண்டும் என்பதே எங்களுடைய நிலை. மாகாண ஆணையங்களின் நிர்வாகம் குறித்தும் முடிவெடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையுமே பரிசீலித்தாக வேண்டி யிருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட கால வரம்புக்குள் இதைச் செய்து முடித்துவிட முடியும் என்றே நான் நம்புகிறேன்.

தேர்தல் பிரதிநிதித்துவம் தொடர்பாக வலுவான, தெளிவான பார்வை உங்களுக்கு இருக்கிறதா?

அது இரண்டும் கலந்த கலவையாக, விகிதாச்சார உறுப்பினர் பிரதிநிதித்துவ முறையாக இருக்க வேண்டும். இரு பெரிய கட்சிகளும் அரசுகள் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றன; சிறிய கட்சிகள் தங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தேவை என்று விரும்புகின்றன. ஆனால் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்த விதத்தைப் பார்த்தால் இரு பெரிய கட்சிகளையும் மூன்றாவதாக ஒரு சிறிய கட்சியையும் விரும்புவது தெரிகிறது.

நேபாளத்தில் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்; புதிய அரசியல் சட்டத்தை இயற்றுவது தொடர்பாக முதலில் நம்பிக்கையுடன் இறங்கினார்கள். பிறகு அதிலேயே சிக்கிக்கொண்டார்கள். நீங்கள் எப்படி இதில் வித்தியாசப்பட முடியும்?

எங்களால் முடியும் என்றே நம்புகிறேன். எங்களிடம் அரசியல் சட்டம் இருக்கிறது, அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றை உருவாக்கப் போகிறோம். நேபாளத்துக்கு அரசியல் சட்டமே கிடையாது. இந்த அரசியல் முறையை மாற்ற வேண்டும் என்பதில் எங்களுக்குள் ஒப்புதல் இருக்கிறது. தேர்தல் நடைமுறையை மாற்ற முனையும்போது வெவ்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிராந்திய கட்சிகள், சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்று ஒவ்வொன்றும் தனக்கு எது நல்லது என்று பார்க்கின்றன.

இலங்கையின் வடக்கு, கிழக்கு தொடர்பான தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக நியாயமான அரசியல் தீர்வு காண இதுவே சரியான தருணம் என்ற கருத்து நிலவுகிறது; இதையே நீங்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறீர்கள். அதிகாரப் பரவலை ஆதரிக்கிறீர்கள். நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் எப்படியிருக்கின்றன? ஏற்கெனவே, 2009-ல் போர் முடிந்த பிறகு கணிசமான ஆண்டுகள் வீணடிக்கப்பட்டுவிட்டன…

ஏராளமான நிர்வாகத் தடைகள் உள்ளன, அவற்றையெல்லாம் நீக்கியாக வேண்டும். மத்திய அரசும் மாகாண அரசுகளும் சேர்ந்து அதிகாரம் செலுத்தக் கூடிய துறைகளை மாகாண அரசுகளிடமே ஒப்படைத்துவிட வேண்டும் என்று சில மாகாணங்கள் கோரிவருகின்றன. இவையெல்லாம்தான் முக்கியப் பிரச்சினைகள். இலங்கையின் இரு பெரிய கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டணியும் பேச வேண்டியவை இவை. இது தொடர்பான உத்தேச யோசனைகளை வகுக்க வேண்டியவையும் அவைதான்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்?

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உடன் வரும். இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள முஸ்லிம்களின் நலன் எப்படி பாதுகாக்கப்படும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை உன்னிப்பாகக் கவனித்துவரும்.

நிலம், காவல் துறை தொடர்பான முழு அதிகாரங்கள் மாகாணங்களுக்கே தரப்பட வேண்டும் என்று தமிழர்கள் நீண்ட காலமாகக் கோரிவருகிறார்கள்; இப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகள்கூட எடுக்கப்பட்டன, ஆனால் தீர்வுதான் எதுவும் ஏற்படவில்லை…

நில நிர்வாகம் தொடர்பாக நிறையப் பேர் திருப்தி அடைந்திருக்கிறார்கள். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உண்மையான பிரச்சினை எதுவென்றால் தங்களுடைய நிலங்களிலிருந்து விரட்டப்பட்டவர்களை மீண்டும் அதே இடங்களில் குடியமர்த்துவதுதான். தேசியப் பாதுகாப்பை மனதில் கொண்டு, நிலங்களைப் படிப்படியாக விடுவித்துவிடுவோம் என்று கூறியிருக்கிறோம். ராணுவப் படைப் பிரிவுகள் இதற்கான மேல் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை நிர்வாகப் பொறுப்பை மாநிலங்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக மறுசிந்தனைகள் ஏற்பட்டுள்ளன. சுயேச்சையான போலீஸ் ஆணையம் இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கட்டும். 13-வது அரசியல் சட்டத் திருத்தம் மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் தேசியக் கூட்டணி இலங்கையின் கிழக்கு மாகாணத்திலேயே சிக்குண்டிருக்கும். அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் காவல் துறையில் அரசியல் நுழைய அனுமதிக்கப்பட்டது. மாகாணத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பான பொறுப்பு மாகாண ஆணையத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது சரியானதுதான். அரசியல் செல்வாக்குக்கு இடம் தராமல் அதை எப்படி அமல்படுத்துவது என்பதுதான் சிக்கலே. காவல் துறைத் தலைவர் இது தொடர்பான தேசியக் கொள்கையை வகுக்கலாம், சட்டம் ஒழுங்கை நன்றாகப் பராமரிப்பதை காவல் துறைத் தலைவர் செயல்படுத்தலாம். அவர் நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே நிர்வாக அமைப்பாக இணைப்பது என்ற முடிவை 2006-ல் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது; அது இப்போது விவாதப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டதா?

அது தாற்காலிக இணைப்புதான், நிரந்தரமான இணைப்பு அல்ல. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாகாணங்கள் இணையலாம், அதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புகள் சம்பந்தப்பட்ட மாகாணங்களில் நடப்பதுடன் மாகாண ஆணையங்களும் அதை ஏற்றிருக்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். இப்போதும் அந்த சட்டப் பிரிவு அமலில்தான் உள்ளது.

மாகாணங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதில் பதப் பிரயோகத்தில்தான் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு தரப்பு கூட்டாட்சிதான் தீர்வு என்கிறது. இதற்கு முன்னால் தனியாட்சி, தனி மாகாணம் கோரப்பட்டது. அரசியல் சட்டம் இலங்கையை ஒரே அலகான அரசாகத்தான் பார்க்கிறது. இந்த பதப்பிரயோகச் சண்டையில் சிக்காமல், முக்கியமாகத் தேவைப்படுவது அதிகாரப் பகிர்வுதான் என்பதால் அதில் கவனம் செலுத்தினால் என்ன? பிளவுபடாத, ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள், மாகாணங்கள் தங்களுக்குத் தேவைப்படும் முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரங்களை அரசியல் சட்டப்படியே பெற்றால் என்ன? இந்திய அரசியல் சட்டமும் கூட்டாட்சி என்று தன்னை அழைத்துக்கொள்வதில்லை. மாநிலங்களைக் கொண்ட ஒன்றிய அரசுதான் இந்தியா; இத்தகைய சர்ச்சையில் கவனத்தைத் செலுத்தாமல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் என்ன?

நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். கூட்டமைப்பு அரசியல் சட்டம் கொண்டுள்ள நாடுகளில் இருப்பதைவிட இலங்கையில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் முக்கியமானப் பிரச்சினை களைத் தீர்க்க இதை எப்படிப் பயன்படுத்துவது என்றுதான் பார்க்க வேண்டும். இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள உத்திப்படி இலங்கை அரசியல் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை எந்த அளவுக்கு அதிகபட்சம் செயல்படுத்த முடியும் என்று பரிசீலிப்போம். இதைத்தான் நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கோரப்படுகிறது; உள்நாட்டு விசாரணையே போதும் என்ற கருத்தொற்றுமை இலங்கைக்குள் காணப்படுகிறது…

ரோம் நகரில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடாததால் உள்நாட்டு விசாரணையே போதும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். 2009-ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்கு மகிந்த ராஜபக்‌ஷ அப்போது அளித்த உறுதிமொழிக்குக் காரணம் என்ன என்று பலவாறாக விளக்கலாம். அவர்கள் ஒருகட்டத்தில் சர்வதேச விசாரணையை நோக்கி நகர்ந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் அந்த விசாரணை உள்நாட்டளவில்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறினோம். நீதித் துறை மீது நம்பிக்கை இழந்த சிலர்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டனர். இதற்கு முன்னரும் வடக்கு, கிழக்கில் இப்பிரச்சினை நிலவியது. நீதித் துறை மற்றும் காவல் துறையின் சுதந்திரம் குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த அமைப்புகள் முறையாகச் செயல்படாமல் முடங்கிவிட்டன. இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண சந்திரிகா குமாரதுங்கவால் உதவ முடியும்; அவர் அதிபராக இருந்தபோது அரசியல் சட்டரீதியாகவே நல்ல யோசனைகள் வெளிவந்தன. இன்றைய சூழலில் அவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

தேசிய ஒற்றுமைக்கான அமைப்பின் தலைவராகச் செயல்படுகிறார். இலங்கை சுதந்திரக் கட்சியிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இரு கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய அரசு அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை வகுக்கும் குழுவுக்கு அவர்களுடைய கட்சி சார்பில் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அதிபர் மைத்றிபால சிறிசேனாவும் குமாரதுங்கவும் இலங்கை சுதந்திரக் கட்சியினர் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்க பேருதவி புரிகின்றனர். இலங்கை சுதந்திரக் கட்சியைச் செல்வாக்கு மிக்கதாக்க இருவரும் செயல் படுகின்றனர். அவர் ஒரு முக்கியமான பங்கை இனி வகிப்பார்.

தேர்தல் முடிவுகள் இப்படித் தெளிவாக வருவதற்கு தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். உங்களுடையே தேசியப் பட்டியலில் ஒரு இடம்கூட அவர்களுக்குத் தரப்படவில்லை என்ற மனக்குறை அவர்களுக்கு இருக்கிறதே?

அவர்களுக்கு நல்ல பிரதிநிதித்துவம் தரப்பட்டி ருக்கிறது. மலைப் பகுதியில் வாழும் தமிழர்கள் அங்குள்ள மற்றவர்க ளோடும் சேர்ந்து வாழ்கின்றனர். முந்தைய காலத்தைவிட கடந்த சில மாதங்களில் அவர்கள் நன்கு முன்னேறி வருகின்றனர். அவர்களை மலைத்தோட்டத் தமிழர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக இலங்கையின் மலைப்பகுதியில் வாழும் தமிழர்கள் என்றே அழைக்க விரும்புகிறேன். காரணம், இன்னும் எத்தனைக் காலத்துக்கு அவர்கள் தோட்டத் தொழிலிலேயே நீடிப்பார்கள்? இப்போது தமிழ் வழி பயில மேலும் 25 பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் அங்கு சூழல் மாறும்; மேம்படும். மேலும் மேலும் பலர் தோட்டத் தொழிலிலிருந்து வெளியேறி ஏனைய தொழில்களுக்கும், ஏனைய நகரங்களுக்கும் செல்வார்கள். மலைத் தோட்டங்களில் வேலை செய்தாலும் வேறு வேலை செய்தாலும் எல்லோரும் இலங்கை வாசிகளே.

சிறுபான்மைச் சமூகத்தவர் கூட்டு சேர்ந்து வாக்களித்ததால் இந்தத் தேர்தல் முடிவு இப்படியானது என்று சிலர் பேசிவருகிறார்கள்; விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெறும் என்றுகூட அவர்கள் பேசிவந்தார்கள். தேர்தலில் அது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா?

நான் அப்படி நினைக்கவில்லை. ராஜபக்‌ஷவின் தீவிர ஆதரவாளர்களைக் குறிவைத்து அப்படிப் பேசப் பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் அவர்கள் ராஜபக்‌ஷவுக் குத்தான் வாக்களித்திருப்பார்கள். இத்தேர்தலில் வகுப்புவாதப் பிரச்சினைகள் ஓய்ந்துவிட்டன. எனவே ஆதரவைப் பெருக்கிக்கொள்ள எதையெதையோ பேசிப்பார்த்தார்கள், கடைசியில் அவர்களுக்கே தர்மசங்கடமாகிவிட்டது. நாங்கள் நாட்டைத் துண்டாட விடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். நாங்கள் பதிலுக்குச் சொன்னோம், “ஒருவேளை விடுதலைப் புலிகள் பலம் பெற்று மீண்டும் வந்தாலும் மிகச் சிறந்த ராணுவ அமைச்சர் நம்மிடம் இருக்கிறார் அவர்தான் உங்களுடைய கட்சித் தலைவரான இலங்கை அதிபர்” என்று. அதன் பிறகு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவரையே கண்டித்துப் பேசியிருந்தால் கட்சியிலிருந்தே தூக்கி எறியப்பட்டிருப்பார்கள். ராஜபக்‌ஷவும் அவருடைய சகாக்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன; பிரபாகரனுடன் தேர்தல் உடன்பாட்டுக்கு வருவதைவிட பதவி ஏதும் இல்லாமல் அரசியல் வனாந்தரத்தில் காலம் கழிக்க நான் தயார் என்று அறிவித்தேன், அதன்படியே பத்தாண்டுகள் பதவிக்கே வர முடியாமல் விலகியிருந்தேன். போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட நான் பிரபாகரனுடன் செய்துகொள்ளவில்லை, நார்வே அரசுடன்தான் செய்துகொண்டேன்.

2005 அதிபர் தேர்தலில் உங்களுடைய தோல்விக்கு அதுதான் காரணமா?

பத்தாண்டுகள் நான் பதவி இழந்திருந்தேன்.

அப்படியென்றால் (ரகசிய) பேரம் இருந்ததா?

பேரம் நடந்தது; அதை அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இலங்கை ரூபாயில் 200 கோடிக்கும் மேல் கைமாறியது; சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகளைக் கட்டித் தர பணம் தரப்பட்டது. எந்த வீடும் புதுப்பிக்கப்படவில்லை. 2006 இறுதி வரை, 2007 தொடக்கம் வரையில்கூட பணம் தரப்பட்டுவந்தது.

நீங்கள் பிரதமராக பதவியேற்றபோது முன்னாள் அதிபர் நிகழ்ச்சிக்கு வந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது; இருவரும் கை குலுக்கிக்கொண்டீர்கள், பேசிக்கொண்டீர்கள், புதிய அரசியல் சூழலில் அவருடைய பங்களிப்பு என்னவாக இருக்கும்?

எனக்கு அரசியல்ரீதியாகத்தான் அவருடன் போட்டி. நாட்டின் ஒற்றுமையையும் ஜனநாயகப் பண்பையும் காப்பதில் அவர் நடந்துகொள்ளும் முறை சரியில்லை என்பதால்தான் அவரை எதிர்க்கிறேன் என்று அப்போதே தெளிவுபடுத்தினேன். இனி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்குச் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு யோசனைகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சர்வதேச உறவுகளுக்கு வருவோம்; மேற்கத்திய நாடுகளுடனான உறவு மோசமடைந்தது. இந்தியாவுடனான உறவில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அணுகுமுறையில் இப்போது மாற்றம் இருக்குமா?

ராஜபக்‌ஷவின் அணுகுமுறை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது தவறுதான். மேற்கத்திய நாடுகளுடன் விரோதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது. மேற்கத்திய நாடுகளுடன் உறவைச் சீரமைப்போம். இந்தியாவுடன் உறவு கொள்ளும் அதே வேளையில் சீன உறவையும் பராமரிப்போம். சர்வதேசப் பிரச்சினைகளில் இப்பிராந்தியத்தில் எங்களுக்குரிய பங்கை ஆற்றுவோம்.

உள்நாட்டிலேயே ஏகப்பட்ட விவகாரங்கள் இருக்கின்றன; இலங்கை, இந்தியா இடையே பாலம் அமைக்க வேண்டும் என்ற உங்களுடைய நீண்ட காலத் திட்டத்தை அமல்படுத்துவீர்களா? அல்லது அதற்கு மேலும் சிறிது காலம் பிடிக்குமா?

முதலில் எங்கள் நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்ப்போம், பிறகு மற்றவற்றில் கவனம் செலுத்துவோம்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x