Published : 29 May 2020 07:11 am

Updated : 29 May 2020 07:11 am

 

Published : 29 May 2020 07:11 AM
Last Updated : 29 May 2020 07:11 AM

கரோனா நிவாரணங்களைத் தீர்மானிப்பது எது?

corona-relief

சீனாவும் இத்தாலியும்

கரோனா பாதிப்புக்கு முதலில் ஆளான நாடு சீனா. நோய் பற்றிய அறிவிப்பு வெளியானபோதே, முதல் கட்டத்தில் 17,400 கோடி டாலர் ரொக்கப் புழக்கத்துக்காக விடுவிக்கப்பட்டது. பிப்ரவரி 4 அன்று 7,100 கோடி டாலர்களும் மார்ச் 5 அன்று 1,593 கோடி டாலர்களும், மார்ச் 13 அன்று 7,900 கோடி டாலர்களும் ஒதுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நகரங்களில் மக்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டன. நோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. சீன தொழில் நிறுவனங்கள் கடன் பெற வசதியாக மத்திய வங்கியின் ரொக்கக் கையிருப்பு 7,880 கோடி டாலர்கள் குறைக்கப்பட்டது.


இத்தாலியில் கரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் அதிகம். முதல் கட்டமாக 2,500 கோடி யூரோக்களை நிவாரணத் தொகையாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது. இதில் வேலைவாய்ப்புக்கு ஒதுக்கியிருப்பது 1,000 கோடி யூரோ. சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த 350 கோடி யூரோ. பொது ஊரடங்கின்போது பணிபுரிபவர்களுக்கென்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, நடுத்தரத் தொழில்களுக்குத் தேவைப்படும் கடன்தொகைக்கு அரசே பிணைநிற்கிறது. கடன் தவணைகளை வசூலிப்பதை நிறுத்திவைத்துள்ளது. 50 லட்சம் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 600 யூரோ நிதியுதவி தரப்படுகிறது. சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோருக்கும் பருவகால வேலைகளைச் செய்பவர்களுக்கும்கூட இந்த நிதியுதவி உண்டு. சின்னக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள செவிலியர்களை அமர்த்திக்கொள்ளும் பெற்றோருக்கு மாதம்தோறும் 600 யூரோ தரப்படும்.

மத்திய ஆசிய நாடுகள்

ஏழை நாடான உஸ்பெகிஸ்தான் 100 கோடி டாலர்களைச் சிறப்பு நிதியாக அறிவித்தது. தனியார் துறைக்குக் கடன் வழங்க 300 கோடி டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. 50 கோடி டாலர் மதிப்புள்ள கடன்களுக்குத் தவணை நீட்டிப்பு வழங்கியிருக்கிறது. வரிச் சலுகைகள், வட்டி வீதம் குறைப்பு, சமூகநலத் துறை மற்றும் சுகாதாரத்துக்குக் கூடுதல் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன.

வளரும் நாடான கஜகஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகமில்லை. முன்னெச்சரிக்கையாக அடித்தளக் கட்டமைப்புத் துறைகளை வலுப்படுத்த 74 கோடி டாலர்களை அரசு ஒதுக்கியது. பள்ளிகளுக்கு மூன்று வாரம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. கரோனாவுக்காகத் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டால் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பாக அதைக் கருத ஆணையிடப்பட்டிருக்கிறது.

தென்கிழக்காசிய நாடுகள்

இந்தோனேசியா மக்களுடைய நுகர்வுச் செலவை அதிகப்படுத்த நேரடியாக 72 கோடி டாலர்களை அளித்தது. 800 கோடி டாலர்களை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட தொழில்பிரிவுகளுக்கு 22.9 லட்சம் கோடி ருபய்யா (இந்தோனேசிய செலாவணி) கடனாகத் தரப்படும். அடுத்த ஆறு மாதங்களுக்கு நிறுவன வரியில் 30% குறைப்பு. தொழிலாளர்களுக்கு வருமான வரிச் சலுகை. சமூகநலத் துறை, ஊரக வளர்ச்சிக்கும் வீட்டுச் செலவுக்கும் நேரடி நிதியுதவி.

மலேசியா 660 கோடி டாலர் மதிப்புக்கு நிதி ஊக்குவிப்புகளை வழங்குகிறது. சுற்றுலா முகமைகள், ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள், பேரங்காடிகளின் மின்சாரக் கட்டணத்தில் 15% அடுத்த ஆறு மாதங்களுக்குக் குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மாதம்தோறும் 600 ரிங்கிட்டுகள் உதவித்தொகையாக ஊரடங்கு காலம் முழுக்க வழங்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறைப் பணியாளர்களுக்கும் கரோனா ஆபத்து நீங்கும் வரையில் மாதம்தோறும் 400 ரிங்கிட்டுகள் கூடுதலாகத் தரப்படும்.

நமது பக்கத்து நாடான வங்கதேசம் 72,750 கோடி டாகாவை நிதி ஊக்குவிப்பாக முதல் கட்டத்திலேயே அறிவித்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் தருவதற்காக மட்டும் 5,000 கோடி டாகா தரப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியம் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியுதவியை 2% வட்டி கணக்கிட்டு இரண்டரை ஆண்டுகளில் (30 தவணை) தொழிலதிபர்களிடமிருந்து அரசு வசூலித்துக்கொள்ளும்.

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: vrangachari57@gmail.comவ.


Corona reliefகரோனா நிவாரணங்களைத் தீர்மானிப்பது எதுதென்கிழக்காசிய நாடுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

narasimma-rao

ராவ்: செயல் வீரர்

கருத்துப் பேழை
x