

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் ஷிப்ட் முறை விரைவில் முடிவுக்கு வரும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவசர கதியில் கல்லூரிக்கு வருவது, மாலையில் தாமதமாக வீடு திரும்புவது போன்ற சிரமங்கள் இதன் மூலம் முடிவுக்கு வரும் என்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு கல்லூரிக்கு வந்து மாலை 4.30 மணிக்கு வீட்டுக்குச் செல்லலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெருகி வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கல்லூரிகளைத் திறப்பதற்குப் பதிலாக ஒன்றிணைப்பது, அதுவும் கல்லூரியில் ஷிப்ட் முறையை ஒழிப்பது என்பது சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் வீழ்ச்சியை நோக்கி கொண்டு சென்றுவிடும். எனவே சுழற்சி முறை ரத்து என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே கல்வியாளர்களின் பொதுக்கருத்து.
பொதுவாக 133 அரசுக் கல்லூரிகளிலும் ஏறத்தாழ கிரேட் ஒன்று கல்லூரிகளில் பாதிக்கும் பாதி சுழற்சிமுறை வகுப்புகளுடனான மாலைநேர வகுப்புகள் இயங்கி வருகின்றன. காலை நேரக் கல்லூரியில் 2 லட்சம் மாணவர்கள் எனின் அதன் பெரும்பகுதியாக மாலை நேரக் கல்லூரி ஒன்றுக்கு 500 அல்லது 1000 என்ற எண்ணிக்கையில் அனைத்துக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கையிலான மாணவர்கள் பாதிக்குப் பாதியாக பயின்று வருகின்றனர். கலந்தாய்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில் அரசுக் கல்லூரியின் ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பயன் பெற்று வருகின்றனர்.
கரோனாவின் சமூக இடைவெளி என்ற பாதுகாப்பின் காரணமாக சுழற்சிமுறை வகுப்புகளை காலை நேரக் கல்லூரியோடு ஒன்றிணைத்துக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பேசப்பட்டு வருகிறது. இடைவெளி கருதி சுழற்சி முறை வகுப்புகளை ஒன்றிணைக்கும் பணியும் வரும் காலங்களில் இடப் பற்றாக்குறை என்ற பெயரில் மாலை நேரக் கல்லூரி மூடப்படும் சூழலை தற்போதுள்ள காலம் கபளீகரம் கொண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அரசுக் கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையும் குறைவு கொள்ளும். அதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் அனைவரும் அரசுக் கல்லூரிப் படிப்பை தொடரக் காத்திருக்கும் நம்பிக்கையும் தகர்ந்து போகும். நிறை கல்வி எனும் உயர்கல்வி பெறுவதே சமுதாய வளர்ச்சியின் முதல் படி. கல்வி வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பதை அறியும் நமக்கு சுழற்சி முறை வகுப்புகள் இல்லாமல் போயின் வரும் கல்வியாண்டில் கலந்தாய்வில் வாய்ப்பு பெறக் காத்திருக்கும் ஏழை மாணவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படலாம் . விளிம்புநிலை மக்களின் உயர் கல்வி வாய்ப்பும் எட்டாக்கனியாகி விடும் நிலை உருவாகும். இதனால் ஆயிரக்கணக்கான கௌரவ விரிவுரையாளர்களின் பணியும் முடங்கும் அபாயம் உள்ளது.
கட்டணச் சுமையும் உயர்கல்விக் கனவும்
மாணவர்கள் தன்னாட்சி பெற்ற மற்றும் தனியார் கல்லூரிகளை நோக்கிச் செல்லும் கட்டாயத்திற்கு ஆட்பட வேண்டி வரும். அதனால் மாணவர்களின் பெற்றோர் கைகள் கட்டணச் சுமையால் வீழ்ந்துபடும் நிலைக்கு ஆளாக நேரிடும். அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் முந்தைய ஆண்டுகளில் கட்டணத் தொகைகளின் விண்ணப்பப் படிவங்கள் நமக்கு சாட்சி சொல்லும். இதில் மறைமுகக் கட்டணங்களும் அடங்கும் என்பதை சொல்லித் தெரிவதில்லை. ஆதலால் அரசுக் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் பெறும் உயர்கல்வி என்ற ஏக்கத்தோடு படித்து வரும் ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவு கலைந்து போகவும் நேரலாம்
உயர்கல்வி பெறும் கனவோடு அரசுக் கல்லூரிக்கு மட்டுமே விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அருமருந்தாக உயர்கல்வி வழங்கும் அட்சயப் பாத்திரமாக விளங்குவன அரசுக் கல்லூரிகள். ஆதலால் நகர்ப்புற கூலி, விவசாயக் கூலி என பொருளாதாரத்தின் விளிம்பு நிலைக்குரிய மாணவர்கள் ஏழை பெற்றோரால் கட்ட முடியாத கட்டணச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் மாணவர்கள் பெரு நகரங்களுக்குச் சென்று பகுதி நேர வேலை செய்து மாலை நேரக் கல்லூரிகளுக்கான கல்லூரிக் கட்டணங்களையும் தேர்வுக் கட்டணங்களையும் அதேபோல காலை நேரக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி முடிந்து மதியத்திற்கு மேல் பகுதி நேர வேலை செய்து கல்லூரிக் கட்டணங்களையும் தேர்வுக் கட்டணங்களையும் செலுத்தி கடும் முயற்சியால் படித்து பட்டங்களைப் பெற்று தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர். இது நிதர்சனம்.
எத்தனையோ ஏழை மாணவர்கள் நகர்ப்புறங்களில் திருமணங்களில் உணவு பரிமாறும் பணிகளையும் பகுதிநேர வேலையாகக் கொண்டிருப்பதை பேராசிரியர்கள் அறிவர். மதுரையில் இரவு நேர பரோட்டா கடையில் வேலை பார்த்த கல்லூரி மாணவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி என்பதை இன்னும் நாம் மறந்திருக்க முடியாது தான். ஆகவே குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறும் வகையில் அரசுக் கல்லூரிகள் ஆவன செய்தால் அதுவே நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு வளம் சேர்க்கும். அரசுக் கல்லூரியில் சுழற்சி முறைர த்து என்ற ஆணை குறித்த அச்சத்தில் இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டெடுக்க வேண்டும்.
மாற்று வழிகள்
முதல் சுழற்சி பாடத்திட்டங்கள் உள்ள வகுப்புகளை இரண்டாகப் பிரித்து நடத்திக் கொள்ளலாம். இதன்படி, கல்லூரி வகுப்புகளை இரண்டு நேரங்கள் ஆக பிரிக்க வேண்டும். அதாவது வாரத்திற்கு மூன்று நாட்கள் அறிவியல் பிரிவுகளையும், வாரத்திற்கு மூன்று நாட்கள் கலைப் பிரிவுகளையும் நடத்தலாம். அதாவது அறிவியல் பாடப்பிரிவுகளை திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும், கலைப் பிரிவுகளை செவ்வாய்க்கிழமை வியாழக்கிழமை சனிக்கிழமை என நடத்தலாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் கலை அறிவியல் படிப்புகளை செல்ஃப் ஸ்டடீஸ் ( Self studies) என்பதுபோல் வீட்டிலிருந்து படிக்கும் முறையை நாம் கொண்டு வரலாம். சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டும் இடப் பற்றாக் குறையை கவனத்தில் கொண்டும் மாணவர்களின் எண்ணிக்கையை சமமாகப் பிரித்து இரண்டு வகுப்புகள் ஆகக் குறைக்க வேண்டும். அதாவது எண்ணிக்கையை 50 விழுக்காடு குறைத்து இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உதாரணமாக இயற்பியல் பாடத்தில் 50 மாணவர்களில் 25 மாணவர்கள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலும் மதிய நேரங்களில் பிராக்டிகல் ( practical) வகுப்பும் நடத்தலாம்.
அதாவது அடுத்த 25 மாணவர்களை மூன்றாவதாகப் பிரித்து, தலா 25 மாணவர்கள் என மூன்று வகுப்புகளாக மாற்றலாம். மொழிப் பாட வகுப்புகளை ( Language classes) வகுப்பின் கடைசி நேர வகுப்புடன் சேர்த்துக்கொண்டு மாலைநேர வகுப்பின் முதல் நேர வகுப்புகளையும் அதாவது 12 மணி முதல் ஒரு மணி வரை மொழிப் பாட வகுப்புகளை நடத்தலாம்.
கல்லூரி ஆசிரியர்களுக்கு தன்னாட்சி
கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் கல்லூரியை விட்டு எங்கும் செல்லாதபடி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரி விடுதி மாணவர் வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் என தனித்தனியாக பாடம் நடத்தலாம். வெளியிலிருந்து கொண்டு வந்து மாணவர்களிடம் விற்பனை செய்வதான ( Canteen) கல்லூரிகளில் அமைந்துள்ள கேன்டீன் கட்டாயமாக மூட வேண்டும். பாடத் திட்டங்களை வகுத்துக்கொள்ள அந்தந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு தன்னாட்சி அளிக்க வேண்டும்.
கரோனா கல்வி
கரோனா குறித்த விழிப்புணர்வுக் கல்வியை கலை அறிவியல் மாணவர்கள் மதிப்பீட்டு க்கல்வி ( value education and NME )என்ற பாடத்திட்டமாக கருதி அமைத்திட அனுமதி வழங்கிட வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் மாணவர்களை எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கும் போது கூடுதல் வகுப்புகள் தேவைப்படும். வகுப்புகளுக்குத் தேவையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு கூடுதலான எண்ணிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆகையால் மாணவர் ஆசிரியர் நலன் கருதி வருகின்ற கல்வி ஆண்டிற்கு முன் ஒரு உயர்மட்டக் குழுவை நியமித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அக்குழுவில் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துக் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
- முனைவர் கே.ஏ.ஜோதிராணி,
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர்,
காயிதேமில்லத் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
சென்னை.
தொடர்புக்கு: jothirani.ka@gmail.com