Published : 25 May 2020 07:26 AM
Last Updated : 25 May 2020 07:26 AM

காவிரி நீரும் குறுவைப் பட்டமும்

தங்க.ஜெயராமன்

வழக்கமான நாளான ஜூன் பன்னிரண்டில் மேட்டூர் அணை திறந்து இவ்வாண்டு குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் வரப்போகிறது; இதனால், மூன்றேகால் லட்சம் ஏக்கரில் காவிரிப் படுகை விவசாயிகள் குறுவை பயிரிடுவார்கள் என்பது அரசாங்கத்தின் கணிப்பு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்று சொல்வது சரி என்றால், அரசாங்கத்தின் இந்தக் கணக்கும் சரியே.

குறுவை நாற்று என்றாலும், நடவு என்றாலும் காவிரிப் படுகை விவசாயிகள் இப்போதெல்லாம் மேட்டூரை நம்புவதில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் மேட்டூர் அணை திறந்தது. மேட்டூர் நீரை எதிர்பார்க்காமலேயே அப்போது 2.90 லட்சம் ஏக்கரில் குறுவை பயிரானது. சென்ற ஆண்டைவிட இரண்டு மாதங்கள் முன்கூட்டியே இந்த ஆண்டில் அணை திறக்கும்போது மூன்றேகால் லட்சம் ஏக்கர் குறுவை பயிராகும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. வெறும் முப்பத்தையாயிரம் ஏக்கர் மட்டுமே குறுவை பயிரிடும் பரப்பு அதிகமாகிறது. மேட்டூர் திறப்பதால்தான் மூன்றேகால் லட்சம் ஏக்கரில் குறுவை பயிராகுமா என்பதை இப்போது நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

அதிசயம் சாதிக்குமா அரசு?

அதிகரிக்க இருக்கும் இந்த முப்பத்தையாயிரம் ஏக்கரும் நிலத்தடி நீர் இல்லாத வெண்ணாற்றுப் பாசனக் கடைமடைப் பகுதி என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். குறுவை நாற்று விடுவதற்குக் கடைசி எல்லையான ஜூன் மூன்றாம் வாரம் அங்கு வாய்க்காலில் தண்ணீர் வந்துவிடுமானால், அந்த அதிசயத்தைச் சாதிக்கவிருக்கும் நம் அரசைப் பாராட்ட வேண்டும். ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள பகுதியிலேயே இந்த அதிகரிப்பு நிகழுமென்றால், ஜூன் பன்னிரண்டின் அணை திறப்பு புதிய பயனாளிகளை உருவாக்கப்போவதில்லை.

கைக்கும் வாய்க்குமான பொருளாதார நிலையில் இருந்த விவசாயிகளுக்கு அரை ஏக்கர், ஒரு ஏக்கரில் குறுவை என்பது புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நெருக்கடி நேர உதவியாக இருந்தது. இந்தக் கிஞ்சித்து நிவாரணத்தை சம்பாதித்துக்கொள்ள அவர்கள் அறுவடைக் கால மழையைப் பொருட்படுத்துவதில்லை. வைக்கோலைக் கத்தரித்து அதை ஈச்சம்பாயில் பரப்பி, அதன் மேல் புண்ணாக்குக் கரைசலைத் தெளித்து, வீட்டுக் கொல்லையில் குறுவை நாற்று பாவியிருக்கிறார்கள். வயலில் நடுவதற்கு இந்தப் பாய் நாற்றங்காலைச் சுருட்டி எடுத்துச்செல்வார்கள். முதிர்ந்து நிற்கும் நெல், மழையில் நனைய நனைய கதிராகவே முளைத்து சடைப்பூரான்போல் வேர்விட்டுத் தொங்கும்.

கொட்டும் மழையில் அறுத்து, அடித்து, மண்டியில் விற்பதற்கு வீட்டுக்குள்ளேயே நெல்லை உலர்த்தி எடுத்துச்செல்வதுண்டு. பிறகு, தாளடிப் பயிருக்கு நாற்றுப் பறியும் நடவும் மழையில் நனைந்துகொண்டே நடக்கும். அதிகம் மழை பெய்த நேரங்களில் நாற்று முடியெல்லாம் வெள்ளத்தில் மிதந்து போய்விடும். இவ்வளவு இன்னல்களுக்கு இடையில், விவசாயிகள் செய்த குறுவைப் பங்களிப்பால்தான் 1960-களில் இருந்த உணவுப் பற்றாக்குறையை அரசால் சமாளிக்க முடிந்தது. நெல்லுக்கு முடைபட்ட அந்த நேரத்தில், ஜூன் பன்னிரண்டாம் நாள் தண்ணீர்த் திறப்பு என்பது ஒரு முக்கிய நிகழ்வு.

பொருந்தாத ஆரவாரம்

இன்றைக்குக் குறுவை என்பது ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள இடங்களுக்குள்ளேயே ஒடுங்கிக்கொண்ட பயிர். மேட்டூர் நீர் வந்தால் குறுவைக்கு எவ்வளவு செலவாகுமோ அந்த அளவுக்கு மேல் நிலத்தடி நீர் செலவாகிறது என்று இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேட்டூர் நீர் நிச்சயமில்லை என்ற நிலையில், விவசாயிகளும் தங்கள் பயிர் முறையை மாற்றிக்கொண்டார்கள். மழையைக் கொண்டே முளைக்கும் சம்பா பட்டத்து நேரடி நெல் விதைப்பு, தண்ணீர் உள்ள இடங்களில் தை மாதத்துக்கு மேல் ஒரு முன்கோடைப் பட்டம், இயன்ற இடங்களில் ஆடி கடைசிவரை வயலில் இருக்கும்படியாகப் பருத்திச் சாகுபடி, நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் வைகாசி முதல் வாரத்திலேயே குறுவைக்கு நாற்று. இப்படிப் பயிர் வகையும் பட்டமும் பலவாறாக மாறிக்கொண்டன. ஜூன் பன்னிரண்டில் மேட்டூர் அணைத் திறப்பு என்பதற்கு இப்போதெல்லாம் கதையின் திருப்புமுனை சம்பவம் போன்ற முக்கியத்துவம் கிடையாது. அணை திறப்பு தொடர்பிலான இந்த அறிவிப்பு பொருந்தாத ஆரவாரத்தோடு வருவதாகத்தான் விவசாயிகளுக்கு ஒலிக்கும்.

ஜூன் இரண்டாவது வாரம் தண்ணீர்த் திறப்பு என்று மே மூன்றாம் வாரக் கடைசியில் தெரிந்தால், அது விவசாயிகளுக்கு எப்படி உதவும்? இருபது நாட்களில் தயாராகிவிட இடம்கொடுக்கும் தொழில் அல்ல விவசாயம். ஆற்றில் தண்ணீர் வந்தாலும் அதை அப்படியே, அன்றைக்கே வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை நம் வாய்க்கால்கள். வழக்கமான ஜூன் பன்னிரண்டில் தண்ணீர் திறப்பார்கள் என்ற நிச்சயம் தை மாதம் இருந்திருந்தால், காவிரிப் படுகையின் இன்றைய வயல்வெளி நிலவரம் வேறாக இருந்திருக்கும். என்றைக்குத் தண்ணீர் திறக்கிறார்கள் என்பது முக்கியமான அறிவிப்புதான். எவ்வளவு தண்ணீர் திறக்கிறார்கள், அது அளவில் குறையாமல் எத்தனை நாட்களுக்குத் தொடர்ந்து வரும் என்ற விவரங்களைக் கழித்து வரும் அறிவிப்பு விவசாயிகளுக்கு எவ்வகையில் நிச்சயத்தை உருவாக்கும்?

அதீத மேலாண்மை

மேட்டூர் அணையின் நீர் இருப்பைக் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான் அரசின் இக்கால அக்கறை! நினைத்தால் அணை திறந்து பதினாறு லட்சம் ஏக்கர் நிலத்தை நனைக்கலாம், நினைத்தால் அணையை மூடி காயப்போடலாம் போன்ற அதீத நீர் மேலாண்மை காவிரிப் படுகையின் தன்மையைப் பாதுகாக்காது. அது நதிகளின் மீதுள்ள மனித ஆதிக்கத்தின் உச்சம். அப்படி இல்லை என்பவர்கள், ஒரு சந்தேகத்தை நீக்கித் தர வேண்டும். அரசின் இருப்பிலிருந்து பத்து ரூபாய் செலவழிக்கக்கூட நிரந்தர நெறிமுறைகள் உண்டு. மேட்டூரின் அறுபத்தைந்து டி.எம்.சி. நீர் இருப்பைச் செலவழிக்க நிரந்தர நெறிகள் வேண்டாமா? காவிரி நீர் நெறியாற்றுக் குழு இந்த நேரத்தில் ஏன் களத்திலேயே தென்படவில்லை?

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.comதங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x