Published : 22 May 2020 01:07 PM
Last Updated : 22 May 2020 01:07 PM

ஒரு புதிய இயல்பை நோக்கி...

இன்று நாம் 12-ம் நூற்றாண்டில் இருக்கின்றோம். இந்த நூற்றாண்டு பல வகையிலும் ஒரு உன்னதமான நூற்றாண்டாகும். இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு மகத்தான முன்னேற்றம் அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒரு அபரிதமான வளர்ச்சி, அறிவு யுகத்தின் தொடக்கமாகவும் கொள்ளலாம். இதுவே மனித சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய ஒரு மிகப் பெரிய தாக்கமாகும். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத ஒரு வளர்ச்சியை அறிவியல் கண்டது. மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியைக் காட்டிலும், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அதிகமானதாகும். இன்று, இந்த அறிவின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் மனித சமுதாயமும் சிக்கித் தவிக்கின்றது. இனிவரும் காலங்களில் அறிவின் வளர்ச்சி, எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணிப்பது சாத்தியமில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள மிக வேகமான மாற்றங்கள் மனிதனுடைய வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவனுடைய முன்னுரிமைகளை மாற்றி அமைத்துள்ளது. இதன் காரணமாக மனிதன் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியதோடு, அவனது எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மனிதனின் தேவைகள், நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து, இன்று அனைத்து ஆடம்பரங்களும் அத்தியாவசியங்கள் ஆகிவிட்டன.

உலக மயமாக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் வரம்பை மீறிய நுகர்வியல் கலாச்சாரத்தை தோற்றுவித்துள்ளது. பெரும் மனித உழைப்பைக்கொண்டு உருவாக்கிய உற்பத்தி, இன்று முழுவதும் இயந்திரமாகிவிட்டது. நம் தேவைக்குப் பொருட்களை உற்பத்தி செய்கிறோமா, அல்லது உற்பத்திக்கேற்ப தேவைகளைப் பெருக்கிக் கொள்கிறோமா என்பது விடை காண முடியாத ஒரு விந்தையாக உள்ளது. போலித்தனமும், பகட்டுமே இன்றைய யதார்த்தங்கள் ஆகிவிட்டன. இலக்கு மட்டுமே முக்கியம்; அதை அடையும் மார்க்கங்களைப் பற்றி இன்றைய மனிதன் கவலைப்படுவதாக இல்லை. அபரிதமான உற்பத்தியும், போட்டிகள் நிறைந்த பொருளாதார சூழ்நிலையும், காலங்காலமாக கடைப்பிடித்து வந்த வர்த்தக நெறிகளும் மறைந்து போயின. இதற்கு மனிதன் தந்த விலை அவனுள் இருந்த மனநிறைவையும், நிம்மதியையும் இழந்ததே ஆகும். வல்லமை படைத்தவனே வாழ்வான் என்று சொல்வது இன்றைய சந்தைப் பொருளாதாரம். மாறாக, அனைவரையும் வல்லமை பெறச்செய்ய வேண்டும் என்பதே காந்தியப் பொருளாதாரமாகும்.

மனிதன் தன்னுடைய தவறான போக்கின் காரணமாக இன்று வலுவிழந்து, தனிமைப்பட்டு நிற்கின்றான். வீட்டிலும், வெளியிலும் பாதுகாப்பற்ற ஒரு தன்மையை இன்று அவன் உணர்கின்றன். தெய்வீகத்தையே தன்னுடைய உண்மையான சொரூபமாகக் கொண்ட மனிதன், இன்று மிருக உணர்வுகளுக்கு ஆட்பட்டு, தன்னுடைய எண்ணத்திற்கும், சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபட்டு, ஒரு பிளவுபட்ட அவல நிலைக்கு உள்ளாகி உள்ளான்.

மனிதன் தன்னுடைய சுயத்தை விட்டு விலகி வெகுதூரம் கடந்து வந்துவிட்டான். அறிவிற்கும் ஞானத்திற்கும் இடையே பெரும் இடைவெளியை இன்று உணர்கின்றோம். வெறும் உடல் உறுதியையும் மனவளத்தையும் மட்டுமே நம்பியிருந்தால், சில நேரங்களில் விபரீதமாகப் போக வாய்ப்புண்டு. ஆகவே ஆன்மிக அறிவும் அவசியம் என்று சொன்னது தத்துவப் பேரறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

‘பழைமையை நோக்கி’ என்று சொல்வதும், அனைத்தும் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் வாதத்திற்கு பொருத்தமாக இருந்தாலும் நடைமுறைக்குச் சாத்தியமில்லை. ‘புவியைக் காப்போம்’ என்பது வெறும் சுலோகமாக இல்லாமல், மனிதன் தன்னுடைய தேவைகளை வரையறை செய்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். ‘எளிமையான வாழ்வு உயர்வான சிந்தனை’ என்பதே காந்தியடிகள் போதித்த வாழ்க்கை முறையாகும். மேலும் மனிதனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயற்கையால் முடியுமே அல்லாமல், அவனது பேராசையைப் பார்த்துக்கொள்ள இயலாது.

இன்று கரோனா தொற்று நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்துப்போய் உள்ளது. மனிதர்கள் செயலிழந்து, செய்வதறியாது அவரவர் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

கண்டறியாத, கேட்டறியாத இந்த மாபெரும் அவலத்திலிருந்து மனிதன் பாடங்கள் கற்றுக்கொண்டு அவன் தனது வாழ்வைப் புரிந்துகொள்வதிலும், அறிந்துகொள்வதிலும், எதிர்கொள்வதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு ‘புதிய இயல்புக்கு’ தயாராக வேண்டும்.

ஒரு புதிய இயல்பு என்கின்ற ஒரு இலக்கை எதிர்கொள்வதற்கு வீரத்துறவி விவேகானந்தர் கூறிய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்து ஒன்றோடு ஒன்று அனுசரித்துச் செல்வதே தீர்வாகும்.

இதற்கேற்ப மனிதன் தன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு, அதற்கான கொள்கைகளை உருவாக்கி, இயற்கையோடு இசைபட வாழ்ந்து, பொருளாதார மேம்பாட்டைப் பெற, உறுதி பூண வேண்டும்.

மொத்தத்தில் மனித நேயத்தையும், ஆன்ம நேயத்தையும் உள்ளடக்கிய ஓர் மனித மேம்பாடே அனைத்திற்கும் தீர்வாகும். வெறும் பொருளாதார மேம்பாடு மட்டுமே இலக்காகக் கொண்டால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை ஆகிய மிருக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் பேராபத்தில் முடியும்.

சுவாமி விவேகானந்தரின் கூற்றின்படி மனிதன் மகத்தானவன், இறைவனின் படைப்பிலேயே உயர்வானவன். அவன் விதியை அவனே நிர்ணயிக்கின்றான். அனைத்துத் திறனும் அவனுள் ஏற்கனவே உள்ளது. அவன் எதுவாக விரும்புகின்றானோ, அவன் அதுவாகவே ஆகின்றான்.

அரிதான இம்மனிதப் பிறப்பை அலட்சியம் செய்யாமல், பொறுப்போடு வாழ்ந்து தன்னையும் உயர்த்திக்கொண்டு, தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் பேணிக்காத்து, ஒரு புதிய இயல்பு உருவாக காரணமாக இருப்பதே விவேகமாகும்.

டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x