Published : 20 May 2020 07:35 am

Updated : 21 May 2020 08:49 am

 

Published : 20 May 2020 07:35 AM
Last Updated : 21 May 2020 08:49 AM

அயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம்

ayothidhasar

ரவிக்குமார்

தமிழ்த் தேசியத்தின் தந்தையும், ‘தமிழன்’ இதழின் நிறுவனருமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். நாம் இன்று பேசும் சமூகநீதி அரசியல், இந்தி ஆதிக்க எதிர்ப்பரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைக் காலத்தே முன்பேசிய முன்னோடி.

தமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து, பௌத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர் அயோத்திதாசர். தமிழ் மக்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு சடங்குகளுக்கும் கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி முதலான பண்டிகைகளுக்கும் பௌத்த நோக்கில் ஒரு கதையாடலை உருவாக்கியவர். புகழ்பெற்ற சித்த மருத்துவராகவும் அவர் திகழ்ந்தார்.

அயோத்திதாசரின் பௌத்தம்

அயோத்திதாசரின் 175-வது பிறந்த நாளை (20.05.2020) நாம் கொண்டாடும் சூழலில், அவரது கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாட்டை ஆராய்வது அவசியம். பௌத்தத்தை அம்பேத்கர் தழுவினாலும் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்தம் என்பது ஏற்கெனவே இருந்த பௌத்த மதப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவரது ‘புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் மூலம் அறிகிறோம். அதனால்தான், அவர் முன்வைத்த பௌத்தத்தை ‘நவயானா பௌத்தம்’ என்கிறார்கள். அதுபோலவே அயோத்திதாசர் முன்வைத்த பௌத்தமும் வேறுபட்ட உள்ளீட்டைக் கொண்டதாகும்.

பௌத்தம் குறித்த விழிப்புணர்வு சமீப காலமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. சாதியை மறுப்பவர்கள் பௌத்தத்தை ஏற்பதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், பௌத்தத்துக்கு அயோத்திதாசர் அளித்த விளக்கம் எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அயோத்திதாசர் 1898-ல் இலங்கைக்குச் சென்று, அங்கு பௌத்தத்தைத் தழுவி தீட்சை பெறுகிறார். அதே காலத்தில், பௌத்தத்தை ஏற்றுப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவர் பேராசிரியர் பி.லட்சுமி நரசு. அவர் ஆங்கிலத்தில் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ என்ற நூலை எழுதி, 1907 மே மாதத்தில் வெளியிட்டார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் ‘தமிழன்’ இதழை அயோத்திதாசர் தொடங்கினார். அந்தப் பத்திரிகையின் முதல் இதழிலிருந்தே புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ‘புத்தரது ஆதிவேதம்’ என்னும் தலைப்பில் அவர் எழுதத் தொடங்கினார். 28 காதைகளில் புத்தரின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் விளக்கும் அந்த நூலின் பாயிரத்தில், அவர் தனது அணுகுமுறையை விவரித்திருக்கிறார். “அன்னிய தேசத்தோரும், அன்னிய பாஷைக்காரரும் அன்னிய மதத்தோர்களுமான பெரியோர்களால் வரைந்துள்ள நூற்களை விசேஷமாகக் கவனியாது, அவர் (புத்தர்) பிறந்து வளர்ந்து இத்தேசத்துள் நாட்டிய சங்கத்தவர்கள் வரைந்துள்ள அருங்கலை செப்பு, அறநெறி தீபம், அறநெறிச்சாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிவாசகம், திரிகடுகம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நிகழ்காலத்திரங்கல், நிகண்டு, திவாகரம், பெருங்குறவஞ்சி, சிறுகுறவஞ்சி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு ஆகிய நூல்களையும் சமண முனிவர்களின் நூற்களைக் கொண்டும், புராதன பௌத்த விவேகிகள் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் சுருதிகளை ஆதாரங்களாகக் கொண்டும்” அந்த நூலை எழுதுவதாக அயோத்திதாசர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தமும் சாதியும்

பேராசிரியர் பி.லட்சுமி நரசுவின் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ நூலில் ‘பௌத்தமும் சாதியும்’ என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் உள்ளது. அதில் புத்தர் எவ்வாறு பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களையும் தனது சங்கத்தில் இணைத்து சமமாகப் பாவித்தார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தர் சண்டாள சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியிடம் தண்ணீர் கேட்டு அருந்தியதையும் அந்தப் பெண் பின்னர் புத்தரால் பிக்குணியாக்கப்பட்டதையும் அந்த அத்தியாயத்தில் விவரித்துள்ள லட்சுமி நரசு, தீண்டாத சாதியைச் சேர்ந்த அப்பெண், சங்கத்தில் சேர்க்கப்பட்டதற்கு மன்னர் பிரசேனாஜித் என்பவரும், ஸ்ராவஸ்தியைச் சேர்ந்த பிராமணர்களும் சத்திரியர்களும் புத்தரைச் சந்தித்து எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும், புத்தர் அவர்களுக்கு விளக்கம் அளித்தார் என்றும் எழுதியுள்ளார்.

இதை விமர்சிக்கும் விதமாக அயோத்திதாசர் ‘புத்தரது தன்மத்தை ஆராய முயல்வோர் சித்தார்த்தரது காலத்திலேயே தற்போதிருக்கும் சாதிகளெல்லாம் இருந்தன என்பதைப் போன்ற பொய்க் கதைகளை நம்பி, அதைத் தாமும் வழிமொழிவது தவறு’ எனக் கண்டிக்கிறார்.

லட்சுமி நரசு காலமானதற்குப் பிறகு, அவரைப் பற்றி பட்டாபி சீத்தாரமையா மூலமாக அறிந்துகொண்ட அம்பேத்கர் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ நூலின் மூன்றாவது பதிப்பை 1948-ல் வெளியிட்டார். “இதுவரை புத்த மதத்தைப் பற்றி வந்துள்ள நூல்களிலேயே இதுதான் மிகச் சிறந்த நூல் என்று நான் நினைக்கிறேன்” என அந்த நூலின் முன்னுரையில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். அயோத்திதாசரின் புத்தமத விளக்கங்களை அம்பேத்கர் அறிந்திருந்தால், அப்படி எழுதியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. ஏனெனில், லட்சுமி நரசுவின் நூலில் உள்ள தகவல்கள் தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவுக்கு முரணாக உள்ளன.

தீண்டாமை தொடங்கிய காலம்

‘தீண்டாதார் யார்’ அவர்கள் எவ்வாறு தீண்டாதார் ஆக்கப்பட்டார்கள்' என்ற தனது நூலில் மனுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தீண்டாமை இல்லை என அம்பேத்கர் நிறுவுகிறார். அடுத்து, கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் ஃபாகியானின் குறிப்புகளில், ‘சண்டாளர் பற்றிய குறிப்புகள், அவர்கள் தீண்டாதார் என்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், அது உண்மையல்ல’ எனக் கூறு​கிறார். அதற்கு, ‘காதம்பரி என்ற இலக்கிய நூலில் சண்டாளப் பெண் ஒருத்தியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விவரணை அவர் ஒரு தீண்டாதவர் என்ற கருத்தை நிராகரிக்கின்றன. அது ஃபாகியான் பதிவுசெய்துள்ள விவரணைகளிலிருந்து முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது’ என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். லட்சுமி நரசுவின் நூலையும், தீண்டாதார் குறித்த தனது நூலையும் ஒரே ஆண்டில்தான் அம்பேத்கர் வெளியிட்டிருக்கிறார். நரசுவின் நூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியின் பொருத்தமின்மை அவருக்குத் தெரியாமல் இருந்திருக்காது.

பௌத்தத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலான போட்டியில்தான் தீண்டாமை உருவானது என்பது அம்பேத்கரின் தீர்க்கமான முடிவாகும். அயோத்திதாசரும் லட்சுமி நரசுவும் தெரிவித்திருக்கும் கருத்துகள், அந்த அம்சத்தில் ஒன்றுபட்டே உள்ளன. ஆனால், தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவோடு அயோத்திதாசரின் நிலைப்பாடு உடன்படுவதாக இல்லை.

தீண்டாமை உருவான காலமாக கி.பி. நான்காம் நூற்றாண்டை அம்பேத்கர் வரையறுக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டு ஆதாரங்களோ இங்கே பிற்காலச் சோழர் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில்தான் தீண்டாமை என்பது தெளிவாக உருப்பெறத் தொடங்கியது என்பதைக் காட்டுகின்றன. அதை உணர்ந்துதான், தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது சமீப காலத்தில்தான் உருவானது என அயோத்திதாசர் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளார். அயோத்திதாசரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இவ்வேளையில், பௌத்தம் குறித்த அவரது சிந்தனைகளின் செழிப்பான பகுதிகளை அவரது சமகாலச் சிந்தனையாளரான லட்சுமி நரசுவின் கருத்துகளோடும், அவருக்குப் பின் 58 ஆண்டுகள் கழித்து பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளோடும் ஒப்பிட்டு வளர்த்தெடுக்கத் தமிழ் அறிவுலகம் முன்வர வேண்டும்.

- ரவிக்குமார், எழுத்தாளர், விழுப்புரம் மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: adheedhan@gmail.com


Ayothidhasarஅயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம்அயோத்திதாசப் பண்டிதர்SPECIAL ARTICLES

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author