

தமிழகத்தில் செயல்படும் மது ஆலைகள் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், 10 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒருவேளை மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சந்தை மதிப்புகொண்ட மது ஆலைகளை என்ன செய்வது? அவற்றுக்கும் அருமையான தீர்வுகள் இருக்கின்றன.
நமது நாட்டின் மொத்த பெட்ரோலியப் பயன்பாட்டில் 5% எத்தனாலைக் கலக்கும்போது 500 மில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும் என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், சர்க்கரை ஆலைகள் மற்றும் மது ஆலைகளின் மொத்த எத்தனால் உற்பத்தி 184 மில்லியன் லிட்டர் மட்டுமே. 316 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. 2017-ல் எத்தனால் கலப்பு சதவீதம் 20% ஆக உயரும்போது உற்பத்தியும் பற்றாக்குறையும் நான்கு மடங்காக அதிகரிக்கும்.
எனவே, தமிழகத்திலிருக்கும் 11 மது ஆலைகளும் முழு நேரமாக எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டால்கூட, தமிழகத்தின் மொத்த எத்தனால் தேவையையும் பூர்த்திசெய்ய இயலாது. கூடவே, புதியதாக எத்தனால் தயாரிப்பு ஆலைகளையும் அமைக்க வேண்டியிருக்கும். இன்றைக்கு எத்தனால் பயன்பாட்டில் சில இடர்ப்பாடுகள் இருக்கலாம். ஆனால், பெட்ரோலிய எண்ணெய் வளம்கொண்ட வளைகுடா நாடுகளில் மாறி வரும் அரசியல் சூழல் மற்றும் புவி வெப்பமயமாதல் பிரச்சினை போன்ற காரணங்களால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் எதிர்கால எரிபொருள் தேவை 50%-க்கு அதிகமாக எத்தனாலைச் சார்ந்ததாகவே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2007- ல் இந்தியா வந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலாடா சில்வாவிடம் 2017-க்குள் 20% எத்தனால் கலப்பைச் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தவிர, இப்போதே இந்திய வாகனங்களின் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யாமல் 15% வரை எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்த முடியும். அவ்வளவு தூரம் யோசிக்கத் தேவையில்லை. ஏனெனில், இங்கு 5% எத்தனாலுக்கே இங்கே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, மதுபான ஆலைகள் தாராளமாக எத்தனால் தயாரிப்பில் ஈடுபடலாம்.
மேலும், மது ஆலைகள் மதுவுக்குப் பதிலாக எத்தனாலை உற்பத்தி செய்வதற்குப் புதியதாக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை. இப்படி எத்தனால் மட்டுமல்ல, ஆல்கஹால் கலந்த ரசாயனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், சாயப் பொருட்கள், செயற்கை ரப்பர், பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் மதுபான ஆலைகள் உற்பத்தி செய்யலாம். கூடுதலாக இணை மின் உற்பத்தியிலும் ஈடுபடலாம். தமிழகத்தில் 11 மது ஆலைகளைத் தவிர, சுமார் 8 பீர் உற்பத்தி செய்யும் ஆலைகள் இருக்கின்றன. பீர் தயாரிப்பு என்பது முழுமையாக நொதித்தல் தொழில்நுட்பம் அடிப்படையிலானது. எனவே, அந்த ஆலைகள் நொதித்தல் அடிப்படையிலான தயிர், மோர், பாலாடைக் கட்டி, பால் பவுடர், பிரட் போன்றவற்றைத் தயாரிக்கலாம். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளைத் தயாரிக்கலாம். கடந்த இரு ஆண்டுகளில் இந்திய பதப்படுத்தப்பட்ட பழச்சாறு வணிகம் 30% வளர்ச்சியடைந்துள்ளது. 2014 -15-ம் ஆண்டு அந்த வணிகத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,500 கோடி. மேலும் ஆண்டுதோறும் சராசரியாக 15% வளர்ச்சி அடைந்துவருகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் படியான பழச்சாறு உற்பத்தி நிறுவனங்கள் இல்லை. அதேசமயம் இங்கே பழங்கள் உற்பத்தி அதிகம். குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகையாக உற்பத்தியாகும் மாம்பழத்துக்குச் சரியான விலை கிடைக்காமல் சாலைகளில் கொட்டுகிறார்கள் விவசாயிகள். எனவே, பீர் ஆலைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக மாம்பழம் உள்ளிட்ட பழச்சாறுகளைத் தயாரிக்கலாம். அப்படிச் செய்தால் இத்தனை காலமாக தமிழக குடிநோயாளிகளின் வயிற்றைப் புண்ணாக்கியதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டதுபோலவும் அமையும்.
- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in தெளிவோம்…