Published : 12 May 2020 13:23 pm

Updated : 12 May 2020 14:16 pm

 

Published : 12 May 2020 01:23 PM
Last Updated : 12 May 2020 02:16 PM

கலைத்தடம் பதித்த இசைக்குரல் டாக்டர் கே. ஏ. குணசேகரன்

dr-k-c
ஆசிரியப் பெருந்தகையர் கரு.அழகன், யோ.பாக்கியவதியம்மாள் இணையரின் மூன்றாவது அருமைமகன். மண்பேசும் மரபு மாறாத் தமிழ் கலையறிஞர். மண்ணின் மாண்பு போற்றும் கே.ஏ.குணசேகரன், கே.ஏ.ஜி. என்றே விரும்பியழைக்கப் பெற்றார். இசையின் தோற்றமாய் 12.05.1955 இல் மாரந்தையில் பிறந்து 17.01.2016 இல் இசையின் மறைவாக நம்மைவிட்டுப் பிரிந்தார். இன்று அவரது 65-வது பிறந்த நாள்
கைதட்டுகள் வாங்கிய கே.ஏ.ஜி.
கலை உலகிலும், கல்வி உலகிலும் கே.ஏ.ஜி. என தோழமையோடு அழைக்கப்பட்ட டாக்டர் கே.ஏ.குணசேகரன், வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் மாரந்தை என்ற கிராமத்தில் பிறந்த அவரை கலையின் பிதாமகனாய்க் கண்டெடுத்தது அதிகாலை நேரம், சாதியக்கட்டுக்குலையாத கிராமத்தில் தொன்மையான மரபுக் கலைஞரான தாத்தாவின் வார்ப்பாய் வாழ்ந்து வந்தவர் கே.ஏ.ஜி. சாதி மறுத்த கல்விக்காக ஊர்தாண்டிச் சென்ற அப்பா, பட்டாளத்திலிருந்து வந்தாலும் சாலையூர் இளையான்குடி தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பா பணியாற்றிய ஹமீதியா தொடக்கப் பள்ளியில் கே.ஏ.ஜி. ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அண்ணன் கே.ஏ.ஜி. உட்பட ஆறு பேருக்கும் அந்தப் பள்ளி தான் கல்விக்கான விடியலைத் தந்தது.
இசுலாமியப் பள்ளியில் இறைவணக்கப் பாடல் பாடும் பள்ளிப் பாடகனுக்கு, சினிமா தியேட்டர்களில் பார்த்த கதையை அச்சளக்காக நகைச்சுவையோடு குரல் மாறாமல், கதாப்பாத்திரங்களின் நளினத்தோடு நடித்துக் காட்டுவதிலும் விருப்பம் இருந்தது. சினிமாவைப் பார்த்திராத முஸ்லிம் மாமிகளுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும், மீண்டும், சளைக்காமல் ரசனையோடு நடித்துக்காட்டி கைதட்டுகள் வாங்கிக் கொள்வார். சினிமாவில் பார்த்த ‘கரு’ வைத் தழுவிய நாடகம் தயாரிப்பார். அதை வீட்டு முற்றங்களில் நடத்தி, அதற்கான கட்டணமாக 25 புளியங்கொட்டைகளை வசூலிக்க வைப்பார். வீட்டுக்கொள்ளைப் புறத்தில் திசைக்கு ஒன்றாக நின்ற நாவல் ( நவ்வாமரம்) மரங்களையும், முரங்கை மரங்களையும், அரங்கமாக்கி அம்மாவின் சேலையை திரைசீலையாக்கிக் கொண்டு கலையோடு வளர்ந்ததும், பள்ளிக் காலம் தான்.
இளையான்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஆறு ஆண்டுகளுமே பாட்டுப்போட்டியின் முதல் பரிசினை அண்ணன் கே.ஏ.ஜி. தான் பெற்றிருந்தார். இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நாடகத்தில், தாமே ஒப்பனையேற்றிக் கொண்டு மைக்கில்லாமலேயே 2 பர்லாங்குக்கும் கேட்கும்படி குரலெடுத்துப் பாடி நடித்தவர். பார்வையாளர்களிடம் பரிசும் பாராட்டும் குவித்துக்கொண்டவர். ஒப்பனை தரித்த உடையில் குத்தப்பட்ட ரூபாய் நோட்டுப் பரிசு மாலைகளைத் தான் உடுத்தியிருந்த லுங்கியில் மடித்துக் கட்டிக் கொண்டு அம்மாவின் மடியில் கொட்டிக் கிடந்து பாசமாலையைச் சேர்த்துக் கொண்ட அன்புக் கலைமகன்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரியின் ஆண்டு விழாப் போட்டிகளில் தெம்மாங்குப் பாட்டுப்பாடியும், கரகாட்டம் ஆடியும் பரிசு பெற்ற கிராமியக் கலை மாணவனைப் பார்த்த, திருச்சி வானொலி நிலையத்தார் கிராமியப் பாடல்பாட முதன்முதலில் வாய்ப்புத் தந்தனர்.
அந்நிகழ்ச்சியில்
‘ஏ. . . தன்னன்னே தானன்னே, தன்னன்னே தானன்னே, தானே தன்னானே ,,
அடி சந்திர சூரிய சோதிகிளம்பிடும் சாமத்துவேளையிலே
நட்ட நடு சாமத்து வேளையிலே - உன்னை
சொந்தங் கொண்டாடிடத் துடிக்குதடி சித்சிரப்பூமயிலே
எந்தன் சித்திரப் பூங்குயிலே . . . .
என்ற காதல் பாடலை, தானே எழுதி இசையமைத்து, கிராமத்துத் தெம்மாங்கு மெட்டாகப் பாடிய பாட்டு, அவரை ‘கிராமியப் பாடகர்’ என்ற தகுதிக்கு அழைத்துச் சென்றது.
மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்த கே.ஏ.ஜி.க்கு கலையோடு கல்வியிலும் ஆர்வம் இருந்ததால், மதுரைக் காமராசர் கல்கலைக்கழகத்தில் ‘தங்கப்பதக்கம்’ ( Gold Medalist ) பெற்று சிறந்து நின்றார். கே.ஏ.ஜி. கலை இலக்கிய மன்றச் செயலராகவும் இருந்ததால் அவரது ஆர்வத்தை அறிந்த NCC ஆசிரியர் தில்லி - சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கிராமிய ஆட்டக் கலை மாணவனாக தேர்வு செய்தார்.
இந்திரா காந்தி பாராட்டு
தில்லி சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் தமிழக நாட்டுப்புறக் கலையின் மகுடமான கரகச் செம்பினை அணி செய்து தலையில் சுமந்தபடி மரபுக் கலை நுட்பத்திறம் காட்டி பாராட்டுப் பெற்றவர். இலக்கிய மன்றப் போட்டிகளில் காட்டிய வித்தைகளைப் போன்று கால்களில் சலங்கைகளை மிடுக்காக ஒலித்து தாளநடையோடு ஆடிக்கொண்டே தலையில் வைத்த ‘கரகம்’ கீழே விழாதபடி - தரையில் வைத்து வாழைக்காய்களைக் கண்ணை கட்டிக்கொண்டு வெட்டுவது, கைக்குட்டையும் ஊசியையும் இமைகளால் எடுப்பது, என கண்கட்டு வித்தையாக ஆட்டத்தின் காலடி வைப்பு முறையை நேர்த்தியோடு நிகழ்த்தியவர். அவரது கிராமிய ஆட்டப் பாங்கினைப் பார்வையாளர்கள் ரசித்ததும் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் வெகுவாகப் பாராட்டிப் பரிசு அளித்ததும், Folk Dance Research செய்ய வேண்டும் என விருப்ப மொழி தந்ததும் அம்மொழி மறுக்காதவராகவும் தனக்கு விருப்பமான நாட்டுப்புறக் கலைகளில் ‘ஆட்டங்களை’ மட்டும் Ph.D ஆய்வுத் தலைப்பாக வரையறுத்துக்கொண்டதும் அவரது மனம்பகிர்ந்த நினைவு.
தனது முனைவர் பட்ட ஆய்வை கிராமத்து வீடுகளில் தொடங்கினார். தாய் மாவட்டமான ‘ராமநாதபுரம், ஆட்டப்பாடல்கள்’ என வரையறுத்துக் கொண்டாலும், கே.ஏ.ஜி.யின் கிராமியக் கச்சேரியில் சொந்தமாகிப் போன கிராமங்கள் கள ஆய்வில் அணுகுவதற்கு அணியமாயின. பாடல்களும் நாட்டுப்புற ஆட்டங்களும், தமிழகக் கிராமங்களில் பரந்து கிடப்பதறிந்து பல திசைகளிலுமுள்ள ஆட்டக் கலைகளைத் தொடர்ந்து தேடிக் கொள்ள முனைந்து நின்றார். வயலோரப்பாட்டுக்காரர்களும் கிராமிய இசைக் கருவிகளும், நாயனங்களும், நையாண்டிமேளங்களும், தவில், கஞ்சக்கருவிகளும், பம்பை, உறுமிகளும், தப்பாட்டங்களும் ஏராளம் காணக் கிடைத்தன அவற்றை மேடையிலும் அச்சிலும் பதித்துத் தந்துள்ளார். வள்ளித் திருமணம், பவளக்கொடி, அல்லி அரசாணி, அரிச்சந்திரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நாடங்களும் , கலைஞர்களும் நலிந்த நிலைக்குக் தள்ளப்பட்டதால் அவர்களின் மேடை இசைக்கருவிகளும் கலையிழந்து நின்றன. பாடல்களைத் தேடிய போது ஏராளமான பாடல் வகைகள் கிடைத்ததால் காலப்போக்கில் அவையும் அழிந்துவிடுமோ என்ற மனப்பதிவில் அச்சுப்புத்தகங்களாயின. அவை அனைத்தும் தமிழரின் நாட்டுப்புற இசைக்கலை வரலாற்று ஆவணங்கள் இன்று.

தென் மாவட்டங்களில் தன் கால்பட்ட நாற்றங்காலிலிருந்தே, தொடங்கிய நாட்டுப்புறக்கலைப் பயணம் தமிழகத்தின் தொட்டபெட்டா சிகரம் வரைக்கும் நீண்டது. களத்தில் சேகரித்த நெல் மணிகளைப் போல களையெடுக்கும் போது பாடப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களும் மலையின மக்களின் தொன் மரபுக் கலைக் கூறுகளும் நாட்டுப்புறவியல் எனும் துறை உருவாகாத காலத்திலும் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளாக பதியம் கொண்டன.
நாட்டுப்புறவியலுக்குப் பெருமை சேர்த்தவர்
ஒதுங்கியோ ஒதுக்கியோ குழுவாக வாழும் கிராமியக்கலை ஒடுக்கப்பட்டுக் கிடப்பதை ஆய்வுக்களங்கள் உணர்த்தியதால் கல்விக் கூடங்கள் நோக்கிய கலைப் பயணத்தில் பல்கலைக் கழகங்கள், மாநிலங்கள், தலைநகரங்களைக் கடந்து இலங்கை, கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளுக்கு நாட்டுப்புறக் கலை வரலாறுகளை இசைப் பாட்டாகவும் கொண்டு சென்றவர்.
அவரது கல்விப் பயணத்தில் நாட்டுப்புறவியல் துறைக்கென அணிசேர்ப்பவையாக; தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை, கரகாட்டம், நாட்டுப்புற மண்ணும் மக்களும், நீலகிரி மலையின் மக்கள் ஆட்டங்கள், நாட்டுப்புற இசைக்கலை, நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும், நாட்டுப்புற நிகழ்கலைகள், தமிழ் மண்ணின் மரபுக் கலைகள், சேரிப்புறவியல் தலித்தியம் என்ற நூல்களும் நாடகத் துறை சார்ந்த படைப்புகளாக; நாடக அரங்கம், தமிழ் நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும், பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு, நாட்டுப்புறக் கதைகளும் நாடக ஆக்கமும், தலித் அரங்கியல், தலித் கலை கலாச்சாரம், ஒடுக்கப்பட்டோர் அரங்கியல் என்ற இயல்வடிவிலான நு£ல்களும் நாடக ஆக்கங்களாக, கனவுலகவாசி, சத்திய சோதனை, பாறையைப் பிளந்து கொண்டு, வெகுமதி, அறிகுறி, வள்ளித் திருமணம் ,கோப்பு, தொடு, மாற்றம் பலி ஆடுகள், போன்ற பல நாடகங்கள் இயக்கப்பட்டு மேடையேற்றப்பட்டன.
தலித் நாடகம், தலித் அரங்கு என தமிழ் நாடகத்துறையில் புதிய சொற்களை வழங்கியவர். “மந்தனம் என்ற சொல்லை கமுக்கம்” என மாற்றி நாட்டுப்புற வழக்காற்றுச் சொல்லை அரசுக் கோப்புகளில் பதித்து வைத்தவர். அவரது ஒலிப்பதிப்பாக தன்னானே ஒலி நாடா, அக்னீஸ்வரங்கள், மண்ணின் பாடல்கள், வயலோரப் பாட்டு, உழைக்கும் மக்கள் இசை மனுசங்கடா, புத்தகம் பேசுது போன்ற ஒலி இசைப் பேழைகளும் ( ஒலிநாடா ) அவரது மேடைகளில் பாடப்பட்டவையே.

‘புதுத்தடம்’ என்ற கவிதை நூல் இவருடையது , சங்க இலக்கிமான பதிற்றுப்பத்திற்கும் ‘ பட்டினப்பாலை’க்கும் உரை எழுதியவர். அவை கலை உலகில் புத்துரையாவே பார்க்கப்படுகிறது. அவரது வாழ்க்கை அவரால் எழுதப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள. தன் வரலாற்று நூல் கே.ஏ.ஜி யின் ‘வடு’. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மண்ணின், மக்களின், வாழ்க்கையை எழுதியவரின் ‘தன்வரலாறு வடு’ பல்கலைக்கழக விரிவுரையாளர், பல்கலைக்கழக இணைப் பேராசிரியர், பேராசிரியர், துணைத்தலைவர், புலமுதன்மையர் (Dean) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் என உயர்க்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வந்த டாக்டர் கே.ஏ.குணசேகரன் எனும் பன்முகத் தன்மை கொண்ட சிந்தனையாளருக்கு இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழாவில் சிறந்த நகைச்சுவை நடிகர் பரிசு.
தேடி வந்த விருதுகள்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சிறந்த நடிகர் பரிசு (1975) காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தனி நடிப்புக்கான பரிசு (1974) மதுரை தியாகராசர் கல்லு£ரியில் ‘தமிழ்ச் செம்மல் விருது (1980) சதங்கை இதழின் - மக்கள் கலைக் காவலர் விருது (1992) பாரதி திரைப்படத்தில் நடப்புக்கான தேசிய விருது, ‘பலி ஆடுகள்’ நாடகத்திற்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ( 2020) என தன் கலைப்பங்கினை சிறப்பாக அமைத்துக்கொண்டு பயணித்த மேடைக் கலை அறிஞர். கே.ஏ.குணசேகரனை தமிழக அரசு கலைமாமணி விருதினையும்‘ சிறந்த நுண்கலை ஆசிரியர் விருதினையும் அளித்து சிறப்பித்துள்ளது. புதுவை அரசின் கலைமாமணி விருதும், கனடா தமிழ்சங்கம் ‘தலித் இசைக்குரிசில்’. விருதும் பெற்றுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர், கடல் கடந்தும், விரிவுரை செய்து வந்தவர். 150ற்கும் மேலான நூல்களுக்கு அணிந்துரை தந்தவர். 34 நூல்களின் ஆசிரியர் அவரது ‘பலி ஆடுகள்’ நாடகம் 100 மேடை கண்ட பெருமைக்குரியது. எனினும் இசைத்த மேடைகள் ஆயிரத்தைத் தாண்டி நிற்கின்றன. பல்கலைக் கழகத் தகுதி வழங்கும் வல்லுநர் குழு உறுப்பினர் ( NACC Committee Member ), ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ( Syndicate Member), பேரவைக் குழு உறுப்பினர் ( Senate Member), தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் வல்லுநர் குழு உறுப்பினர், கேரளா, ஆந்திரா பல்கலைக் கழங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினர் என உயர்கல்விக் கூடங்களில் சிறப்புத் தகுதிகளோடு வாழ்ந்தவர்.

16 வயதில் கல்லூரியிலிருந்து புறப்பட்ட, கலை மாணவரை தில்லி சுதந்திர தின விழா நிகழ்ச்சி அழைத்துப் பாராட்டியதும், வாழ்நாளெல்லாம் குரலெடுத்து இசைபாடி கலையோடு பயணித்து வந்த அவரை 2015 ஆம் ஆண்டு தில்லி தமிழ்ச்சங்கம் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவப் படுத்தியதும், அவரின் கடைசிக் கலைப்பயணமாக அமைந்துவிட்டது. அப்போது அவருக்கு 61 வயது.

தன் கால் பதித்த இடமெல்லாம் ‘ கலைத்தடம்’ உருவாக்கும் மந்திரம் அவரது இசைக் குரல் என்றால் பொருந்தும். கோவை, செம்மொழி மாநாட்டில் “தமிழே உலகின் முதன் மொழி” என்பதைப்
பறைசாற்றி நிற்கும், செம்மொழிப் பாடலில்;
‘அது. . . . . வே. . . . ஏ. . . . ஏ. . . ஏ’
என்ற “ஒன்றைச் சொல்லை” இசைக்குரலாய்ப் பாடி சுட்டு விரல் சுட்டி, ஓங்கி ஒலித்த படி நிற்பவர். ஆம் ! அந்தக் கலைக் குரல் தமிழ் குரலாய் என்றென்றும் ஒலிக்கும்.
‘அகரம் எழுதுவதற்கு முன்பே பள்ளியில் இறைவணக்கப் பாட்டு மாணவனாக பதிவுகொண்டு பயணித்த, கே.ஏ.ஜி யின் கலைத்தடம் நாட்டுப்புறக் கலை மாமணியாய் தில்லி தமிழ்ச் சங்கத்திலும் பதிந்திருக்கிறது. கலைக்கு ஆற்றிய அவரின் பங்களிப்புப் பணிக்கு வணக்கம் செய்வது, கலைக்கு செய்யும் மரியாதை.

- முனைவர் கே.ஏ.ஜோதிராணி,
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர்,
காயிதேமில்லத் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
சென்னை.
தொடர்புக்கு: jothirani.ka@gmail.com


கே.ஏ.குணசேகரன்கலைத்தடம்கே.ஏ.ஜி.

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x