

கடந்த பத்தாண்டுகளில் பொருளாதாரத் துறையில் உலக அளவில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட புத்தகம் தாமஸ் பிக்கெட்டி எழுதிய ‘21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்’. பொருளாதாரத் துறையில் புகழ்பெற்ற பாரிஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பணியாற்றிவருபவர் பிக்கெட்டி.
பெரும்பாலும் அவருடைய புத்தகங்கள் பிரெஞ்ச் மொழியில்தான் முதலில் வெளியாகின்றன. ‘21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்’ பிரெஞ்சில் வெளியாகி ஆங்கிலம், ஜெர்மன், சீனம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வெளிவந்த இரண்டாண்டுகளிலேயே 15 லட்சம் பிரதிகள் விற்பனையானது. தமிழில் இந்தப் புத்தகத்தைப் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார், பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. கடந்த 250 ஆண்டுகளில் அமெரிக்காவிலும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் செல்வமும் வருவாய்ப் பகிர்வும் ஒரு சிலரிடமே இருப்பதை இந்தப் புத்தகம் ஆதாரபூர்வமாக விளக்கியது.
ஏழாண்டுகளுக்குப் பிறகு தாமஸ் பிக்கெட்டியின் அடுத்த நூல் 1200 பக்க அளவில் ‘கேபிடல் அன்ட் ஐடியாலஜி’ என்ற தலைப்பில் தற்போது வெளியாகியிருக்கிறது. முந்தைய நூலின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், சமத்துவமின்மை என்பது பொருளாதார ரீதியில் மட்டும் அமையவில்லை, மாறாக அரசியல்ரீதியாக கருத்தியலுக்குள் வேரோடி நிற்கிறது என்பதை விளக்கும்வகையில் அமைந்திருக்கிறது. இந்நூலின் வெளியீட்டையொட்டி சமீபத்தில் ‘புரோ-மார்க்கெட்’ இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கரோனா நோய்த்தொற்றை சமத்துவத்துக்கான நல்வாய்ப்பு என்று கூறியிருக்கிறார் தாமஸ் பிக்கெட்டி.
‘கரோனா நோய்ப்பரவலானது குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பாவின் பணக்கார நாடுகளிலும்கூட பொது சுகாதாரம், அனைவருக்கும் மருத்துவ வசதி, கடந்த சில பத்தாண்டுகளாக நடந்துவந்த பொதுச் சேவைகள் ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்தச் சூழலானது பொது சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள, மிகக் குறைவான வருமானம் கொண்ட ஏழை நாடுகளைவிடவும் மிக மோசமானதாக இருக்கிறது. அடுத்துவரும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் இந்த நிலை இன்னமும் மோசமாகக்கூடும்.
தொழில்நுட்ப- முதலாளித்துவ மாயையானது தொழில்நுட்பம் மற்றும் சந்தை சக்திகளின் மாற்றங்களையடுத்து சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்துவரும் என்றே கருதுகிறது. ஆனால், அது உண்மையல்ல. வரலாற்றுரீதியாகவே சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமானது சமத்துவமின்மையைக் குறைப்பதாலும் சமத்துவத் தன்மை கொண்ட சமூகங்கள் அதிக அளவில் உருவாவதாலுமே நடந்திருக்கிறது. மிகக் குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில்.
வரலாற்றின் இந்தப் பாடங்களை 1980-1990 ஆண்டுகளிலிருந்து நிறைய பேர் மறந்துவிட்டு அதற்கு மாற்றாக, மீ-முதலாளித்துவ கதையாடலை மாற்றாக முன்னிறுத்த முயன்றுவருகிறார்கள். அதை மறுபரிசீலனை செய்வதற்கு இதுவே சரியான தருணம். ஆதிக்கக் கருத்தியல்களை முடிவுக்குக் கொண்டுவரவும் சமத்துவமின்மையைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்திடவும் இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கரோனா காலகட்டம் குறித்து தாமஸ் பிக்கெட்டி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அரசியல் கருத்தாக்கங்கள் யாவும் இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மக்களிடையே நிலவும் தீவிரமான வேறுபாடுகளை இந்தத் தொற்று வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. தற்போதைய சமத்துவமற்ற நிலையையும் பொது அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கரோனா உணரச்செய்திருக்கிறது.