குடிமகன்: பொருள் திரியும் வார்த்தை

குடிமகன்: பொருள் திரியும் வார்த்தை
Updated on
2 min read

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக் கடைகள் ஊரடங்கு முடிவுக்கு வருவதற்கு முன்பே திறந்துவிடப்பட்டிருக்கின்றன. மதுநோயாளிகள் மீதான கருணையோ இல்லை நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழக்கமான உத்தியோ காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஏறக்குறைய 45 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மது வாங்க வந்தவர்கள் அக்னி நட்சத்திர வெயிலில் கி.மீ. தொலைவுக்குக் காத்திருப்பதைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.

முதல்நாள் நிலவரத்தைக் காட்சிப்படுத்திய ஊடகங்கள் ‘வரிசைகட்டி நின்ற குடிமகன்கள்’, ‘காத்திருந்து ஏமாந்த குடிமகன்கள்’, ‘குடைகளோடு வந்த குடிமகன்கள்’ என்று மது வாங்க வந்தவர்களைக் ‘குடிமகன்கள்’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டன. கடைக்கு வருபவர்கள் அனைவரையுமே குடிகாரர்கள் என்று கணக்கில் கொள்ளலாமா, பெண்களும் வரிசையில் நிற்கையில் பால்பேதம் காட்டுவது நியாயமா என்றும் கேள்விகள் எழுகின்றன. அதைப் போலவே, ஒரு நாட்டில் வசிப்பதற்கு சட்டபூர்வமாக உரிமைபெற்றிருப்போரைக் குறிக்கும் ‘குடிமக்கள்’ என்ற வார்த்தையை மதுநோயாளிகளுக்குரியதாக மாற்றிவிட்டால், அப்புறம் குடிமக்களை எந்த வார்த்தையால் அழைப்பது? பிரஜை என்ற வடமொழி வார்த்தையும் பயன்பாட்டிலிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டது. குடிமக்களைக் குறிப்பதற்கான மாற்று வார்த்தைகளும் புழக்கத்தில் இல்லை.

குடி என்ற வார்த்தையானது தொடக்கத்திலிருந்தே மக்களைத்தான் குறித்துவந்திருக்கிறது. தமிழின் பழமையான இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் ‘படை குடி கூழ் அமைச்சு’ என்று பட்டியலிடுவதில் குடி என்பது மக்களையே குறிக்கும். வள்ளுவர் குடியைவிட படைக்கு முதன்மை கொடுத்திருப்பது சரியா என்றொரு கேள்வியும் உண்டு. வள்ளுவம் இயற்றப்பட்டது முடியரசுக் காலம், அந்நாட்களில் மக்களாட்சித் தத்துவங்கள் பரவலாகவில்லை என்பதால் வள்ளுவரின் பிழையை மன்னித்துவிடலாம்.

குடி என்னும் வார்த்தையை மரபு, குடும்பம் என்னும் பொருளில் 13 இடங்களிலும் உயர்ந்த மரபு என்னும் பொருளில் 7 இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார் வள்ளுவர். குடிக்கு, குடிமை, குடிமைக்கண் என்று பின் ஒட்டுகளோடு அவர் குறிப்பிடுவதெல்லாம் உயர்குடிப் பிறப்பையே. குடும்பத்தையும் குடி என்ற வார்த்தையாலேயே குறிப்பிட்டிருக்கிறார். குடிமக்கள் என்ற பொருளில் அவர் பயன்படுத்தியிருப்பது 6 இடங்களில் மட்டும்தான். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்று கருதிய காலமது. இன்று எல்லோரும் ஓர் நிரை. எனவே குடி என்னும் வார்த்தை குடியுரிமை பெற்ற எல்லா மக்களையும் குறித்துநிற்கிறது.

குடி என்ற வார்த்தையால் மதுவை ஒருபோதும் வள்ளுவர் குறிப்பிடவில்லை. மதுவிலக்கை அறிவுறுத்தும் அதிகாரம் கள்ளுண்ணாமை என்றே தலைப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்துக் குறள்களிலுமே மதுவை கள் என்றும் அதை அருந்துவதை களித்தல் என்றுமே என்றுமே குறித்திருக்கிறார் வள்ளுவர். தெங்கும் பனையும் தரும் கள்ளை உண்பதே மொழிவழக்கு. இடைப்பட்ட காலத்தில் அருந்துவதும் பருகுவதும் குடிப்பதும் ஒன்றானதால் மதுவும் குடிபானம் என்றே அழைக்கப்படலாயிற்று. குடிப்பவர் இன்று குடிமகனாகவும் ஆகிவிட்டார். இன்றைய அரசுகள் குடிப்பழக்கத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் குடிமக்கள் அனைவரையுமே குடிமகன்களாகிவிடுவதற்கு முயல்கிறதோ என்றும்கூட தோன்றுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in