

ஊரடங்குக் காலத்தில் திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையர் சரவணன், எளிய மக்களின் சேவகனாகியிருக்கிறார். ‘காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக, உங்களின் செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கின்றன’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இவரைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாகவும், பொதுமக்களைக் காவல் துறையோடு இணைக்கும் கண்ணியாகவும் பார்க்கும் சரவணனிடம் பேசினேன்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எப்படியான முன்னெடுப்புகளைச் செய்கிறீர்கள்?
நெல்லை மாநகரக் காவல் துறையில் ஏற்கெனவே 'வேர்களைத் தேடி’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம். இதில் மூத்த குடிமக்கள் 450 பேர் பதிவுசெய்திருக்கிறார்கள். தனித்திருக்கும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தொடங்கப்பட்ட அமைப்பு இது. ஊரடங்கு நேரத்தில் அவர்களது இல்லங்களுக்கே போய் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொடுக்கிறோம். நெல்லை மாநகரில் ஆன்லைன் மூலம் மளிகைப் பொருள் விநியோகம் நடக்கிறது. அதன் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை காவலர்கள் உறுதிசெய்கின்றனர். ஏற்கெனவே மாநகர எல்லைக்குள், ‘மக்களை நோக்கி மாநகரக் காவல்’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம். இதில் ஆய்வாளர் நிலையில் உள்ள காவலர் வாரம் ஒரு பகுதிக்குப் போய் அவர்களின் குறைகளைத் தீர்த்துவைப்பார். இப்படியெல்லாம் ஏற்கெனவே மக்களோடு நெருங்கி இருந்ததால், நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்பதும், அவர்களது தேவைகளை எங்களிடம் சொல்வதுமாகப் பரஸ்பரப் புரிதல் இருக்கிறது.
முதல்வர் பாராட்டிய நிகழ்வு பற்றிச் சொல்லுங்கள்?
நெல்லையைச் சேர்ந்த பிச்சைராஜா என்பவர் சவுதியில் வேலைசெய்கிறார். அவர் ஊரில் தன் பெற்றோர் தனித்திருப்பதாகவும், காவல் துறை அவசர உதவிக்கு எண் வழங்கக்கேட்டும் ட்வீட் செய்திருந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் காவலர்கள் அவரது வீட்டில் நின்றனர். அவர்களை ‘வேர்களைத் தேடி’ குழுவிலும் சேர்த்துவிட்டோம். இந்தப் புகைப்படத்தை பிச்சைராஜாவுக்கு டேக் செய்திருந்தோம். அதைப் பார்த்துவிட்டுத்தான் முதல்வர் பாராட்டியிருந்தார்.
கரோனா களத்தில் பணியாற்றும் அனுபவம் எப்படி இருக்கிறது?
காவல் துறை இந்த நேரத்தில் மக்கள் தொடர்புத் துறையாகவும் மாற வேண்டியிருந்தது. களத்தில் நிற்கும் காவலர்களுக்கும் ஆரம்பத்தில் விழிப்புணர்வூட்ட வேண்டியிருந்தது. அதற்காகவே, ‘காவலர் நலனில்’ என்று ஒரு குறும்படமும் எடுத்துத் திரையிட்டோம். தூய்மைப் பணியாளர்களும் களத்தில் இருக்கின்றனர். மற்ற எவரையும்விட வாழ்வாதாரத்தில் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு நெல்லை மாநகரக் காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுத்து, சல்யூட் அடித்தோம். இந்தியாவிலேயே அதுதான் முதல் நிகழ்வும்கூட! இப்படி நிறைய அனுபவங்களைத் தந்திருக்கிறது கரோனா.
மீட்புக்களத்தில் ரசிகர் மன்றங்களை இணைக்கும் திட்டம் எப்படி வந்தது?
நெல்லையில் பிரபல நடிகர்களின் திரைப்படங்களுக்குப் பிரம்மாண்ட கட்அவுட் வைக்கும் பழக்கம் இருந்தது. அதற்குப் பதில் நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரிக்கை வைத்தோம். அந்த வகையில், விஜய் ரசிகர்கள் அரசுப் பள்ளிக்கு சிசிடிவி கேமராவும், தனுஷ் ரசிகர்கள் திருநங்கைகளுக்குத் தையல்மெஷினும், சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட்டும் வழங்கியிருந்தனர். சேவை குணத்தோடு இருக்கும் அவர்களை கரோனா களத்துக்கும் அழைத்துவந்தோம். பொதுஇடங்களில் சமூக இடைவெளியை உறுதிசெய்யும் பணியை ரசிகர்மன்றங்களுக்குக் கொடுத்தோம்.
கரோனா பணியில் நினைவில் தங்கும் விஷயமாக எதைச் சொல்வீர்கள்?
ஏரல் பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துவர வாகனம் கிடைக்கவில்லை. இதைப் பற்றி சமூக வலைதளம் மூலம் கேள்விப்பட்டு, உடனே வாகன ஏற்பாடு செய்துகொடுத்தேன். அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ‘உங்க பேரைத்தான் பையனுக்கு வைக்கப்போறேன்’ என்று குழந்தையின் தந்தை நெகிழ்ச்சியோடு சொன்னார். ராஜலெட்சுமி அவர் வளர்க்கும் நாய்க்கு இதயப் பிரச்சினை இருப்பதாகவும், மருந்து வாங்கிக்கொடுக்க முடியாமல் தவிப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ‘மனிதர்களுக்கே மருந்து கிடைக்குமா என்னும் சூழலில், கால்நடைக்குச் சாத்தியமா’ என்பதாக நினைத்துத்தான் எழுதியிருந்தார். ஆனால், காவலர்கள் மூலம் ராஜபாளையம் வரை கொண்டுசேர்த்ததும் நெகிழ்ந்துவிட்டார். நெருக்கடி காலத்தில் பொதுமக்களிடம் மகிழ்ச்சியைப் படரவிடுவது காவல் துறைக்குக் கிடைத்த வரம்.
- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in