Last Updated : 04 May, 2020 07:35 AM

 

Published : 04 May 2020 07:35 AM
Last Updated : 04 May 2020 07:35 AM

கல்யாணம் சுருங்கியிருக்கலாம், ஆனா விருந்து சுருங்காது!- பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை நிர்வாகி பேட்டி

மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்தின் பிரம்மாண்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த ஆண்டு ஒரே நாளில் சுமார் 90 ஆயிரம் பேர் அந்த விருந்தில் பங்கேற்றார்கள். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவே நின்றுபோயிற்று. ஆனாலும், கரோனாவால் உணவின்றித் தவிப்போருக்குப் படியளந்துகொண்டிருக்கிறாள் அன்னை மீனாட்சி. 15 நாட்களாக நடக்கும் இந்த விருந்து, ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறது, பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை. அதன் நிர்வாகி சாமுண்டி விவேகானந்தனுடன் பேசினேன்.

திருக்கல்யாண விருந்தை கரோனா நிவாரணமாக மாற்றும் யோசனை எப்படி வந்தது?

மீனாட்சி திருக்கல்யாணத்தப்ப அன்னதானம் வழங்குறதை 30 வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கோம். இந்தவாட்டி நாமயெல்லாம் ஊரடங்கால முடங்கியிருக்கோம். இந்த நேரத்துல நண்பர் ஒருத்தர், “நாங்க கரோனா நிவாரணம் வழங்கப்போறோம், மளிகைப் பொருட்கள் வாங்கித் தர்றீங்களா?”ன்னு கேட்டாரு. “சரிங்க பட்டியல் அனுப்புங்க”ன்னு சொன்னேன். அதேநேரத்துல, “ஏன் இந்த வேலைய நாமே செய்யக் கூடாது. மளிகைப் பொருட்களா தர்றதுக்குப் பதில், சமைச்சே கொடுத்திடலாமே?”ன்னு தோணுச்சி. பள்ளி வளாகத்துல உணவு பரிமாறக் கூடாது, மொத்தப் பொட்டலங்களாகத்தான் வழங்கணும், கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஆட்சியர் அனுமதி தந்தார். முதல் ஆர்டர் கொடுத்ததே மதுரை மாநகராட்சி ஆணையர்தான். “மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள வீடற்றவர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 1,200 உணவுப் பொட்டலங்கள் தேவை” என்றார். அதன்படி, சித்திரை 3 ராத்திரிலருந்து சமைச்சுக்கொடுக்க ஆரம்பிச்சோம்.

பாதுகாப்பு வழிமுறைகளை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள்?

சமையல்காரங்க 15 பேரு, தன்னார்வலர்கள் 55 பேருன்னு அத்தனை பேரும் முகக்கவசம், கையுறை அணிஞ்சுதான் வேலை செய்யறோம். தினமும் மருத்துவக் குழுவினர் வந்து, அத்தனை பேரோட உடல்நிலையையும் பரிசோதிக்கிறாங்க. வழக்கமா மீனாட்சி கல்யாண விருந்துக்குப் பெரிய பெரிய பணக்காரங்கள்லருந்து ரேஷன் சேலை கட்டிய ஏழை மூதாட்டி வரைக்கும் யார் என்ன சமையல் பொருட்களைக் கொடுத்தாலும் வாங்கிக்குவோம். ஆனா, கூட்டம் கூடுறதைத் தவிர்க்குறதுக்காகவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளோட யோசனைப்படியும் அந்த நடைமுறையை மாத்திட்டோம். இன்ன வேணும் என்று மொத்தமாக உபயதாரர்களிடம் சொல்லிவிடுகிறோம். அவர்களே வாங்கித் தருகிறார்கள்.

இப்போது எத்தனை பேருக்குச் சமையல் நடக்கிறது?

பசியில் வாடுவோருக்கும், நோய்த் தடுப்புப் பணியில் இருப்போருக்கும் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையிலருந்தும் வாங்கிட்டுப் போறாங்க. 1,200-லருந்து படிப்படியா கூடி, இப்ப தினசரி 7,000 பொட்டலங்க போகுது. ரவா கிச்சடி, சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, இட்லி, ஃபிரைட் ரைஸ், புளியோதரை என்று ஒவ்வொரு நேரத்துக்கும் வேறவேற உணவுகளைத் தயாரிக்கிறோம். மதிய, இரவு உணவு மட்டுமே பொட்டலமாக வழங்குறோம். தூய்மைப் பணியாளர்களின் வேலை காலை நேரம்தான் என்பதால், அவர்களுக்கு மட்டும் பரிமாறுகிறோம். அன்னை மீனாட்சி மற்றவர்களுக்கெல்லாம் உணவுப் பொட்டலம் வழங்குகிறாள். தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும்தான் உட்கார வைத்துப் பரிமாறுகிறாள்.

கல்யாண விருந்து, கரோனா நிவாரணப் பணி. என்ன வித்தியாசம்?

திருக்கல்யாணத்துக்கு ஒவ்வொரு நேரத்துக்கும் குவிண்டால் கணக்குல சமையல் நடக்கும். இப்ப ஒரு நாளைக்கே ஆயிரம் கிலோ அரிசிக்கு உட்பட்டுதான் சமையல் நடக்குதுங்கிறதால, நின்னு நிதானிச்சு சுவையா சமைக்க முடியுது. திருக்கல்யாணத்துல நடக்கிறது விருந்து; இது பசியமர்த்தும் பணி. அதுவும் பஞ்சத்துக்கு நிகரான பேரிடர் காலத்துல. மத்தபடி சாதி, மதம் வேறுபாடில்லாமத்தான் எல்லா மக்களுக்கும் எப்போதும்போல எல்லாம் நடக்குது. நேத்தைக்கூட அழகர்கோவில் அப்பன்திருப்பதி பக்கம் நரிக்குறவர் காலனியிலருந்து ஒரு வேண்டுகோள் வந்துச்சி. உடனே, எறநூறு பொட்டலங்களை அனுப்புனோம். ஊரடங்கு முடியுற வரைக்கும் இந்தப் பசியமர்த்துற வேலை போகும். இதெல்லாம் நாங்க செய்யல. அன்னை மீனாட்சிதான் படியளக்குறா, நாங்க வெறும் கரண்டிதான். பேப்பர்ல போட்டோ போடுறதா இருந்தாக்கூட அவளோட படத்தையே போடுங்க.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x