

கரோனா சூறையாடிய தொழில்களுள் பதிப்புத் துறையும் ஒன்று. பதிப்பகங்கள், புத்தக நிலையங்கள், காகித விற்பனையகங்கள், அச்சகங்கள், பைண்டிங் நிலையங்களில் பணியாற்றுவோரின் பாதிப்பு மிக அதிகம். ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும்கூட, அவர்கள் மீண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதிப்புத் துறையினரிடம் பேசினேன்.
எஸ்.கிருஷ்ணகுமார், ‘பிரின்ட் ஸ்பெஷாலிட்டிஸ்’, அச்சகர்.
தமிழ்நாட்டில் 25,000 அச்சகங்கள் உள்ளன. சுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் இவற்றை நம்பி இருக்கின்றன. கிட்டத்தட்ட அன்றாடங்காய்ச்சி பிழைப்புபோலத்தான் இவற்றில் பணியாற்றுவோர் நிலை. பெரும்பான்மை அச்சகங்கள் வங்கிக் கடன் அல்லது வெளிக்கடன் உதவியோடு நடப்பவை. எல்லாமே முடங்கிவிட்டன. மேலதிகம் ஒரு மாதத்துக்கும் மேல் பராமரிப்பின்றிக் கிடப்பதால், அச்சு இயந்திரங்களின் கதி என்னவென்றும் தெரியவில்லை. அரசு உதவி அவசியம் வேண்டும். அச்சகங்கள் செயல்படவும் அனுமதி வேண்டும்.
எம்.வி.மணிகண்டன், அச்சகர், நூல் கட்டுனர்.
எங்களது நிறுவனத்தில் 30 பேர் வேலை பார்க்கிறார்கள். அச்சகத்தில் மட்டும்தான் ஆண்கள். பைண்டிங் பிரிவில் 10 பெண்கள் இருக்கிறார்கள். மெஷின் மாதிரி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும், அவர்களுக்குச் சம்பளம் குறைவுதான். அது வீட்டு வாடகை உள்ளிட்ட மாதாந்திரச் செலவுக்கே சரியாக இருக்கும். ஓவர் டியூட்டி கிடைத்தால்தான் அன்றாடக் கைச்செலவுக்குப் பணம் இருக்கும். அவர்களிடம் சேமிப்பே கிடையாது. போன மாதம் எப்படியோ சம்பளம் போட்டுவிட்டோம். இந்த மாதம் திணறுகிறோம். அடுத்த மாதமும் ஊரடங்கு நீடித்தால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. சிறுசிறு அச்சகங்கள் எல்லாம் விற்றுவிட்டுப் போவதைத் தவிர வேறு வழி இருக்காது.
கண்ணன், ‘காலச்சுவடு’, பதிப்பாளர்.
பதிப்புத் துறைக்கு இந்த ஆண்டு பெரிய பின்னடைவு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களுக்குச் சம்பளம் போட்டுவிட்டோம். அடுத்த மாதம் பற்றி முடிவெடுக்க முடியாத சூழல். இப்போது புத்தகப் பதிப்பு வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். தமிழ்ப் பதிப்பாளர்களுக்குப் புத்தகக் கடைகளைவிடப் பெரிதாகக் கைகொடுப்பது புத்தகச் சந்தைகள். இந்த ஆண்டு புத்தகக்காட்சிகளை நடத்த முடியுமா என்றே தெரியவில்லை. அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகக்காட்சி நடந்தால்கூட எத்தனைப் பதிப்பாளர்கள் வழக்கமான உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. மேலை நாடுகளில் அங்குள்ள சூழலைப் பொறுத்து புத்தகக் கடைகளைத் திறக்க அனுமதித்திருக்கிறார்கள். இத்தாலியில் பதிப்பகங்களுக்கு அரசே நிதி உதவிசெய்திருக்கிறது. இங்கேயும் அப்படியான சூழல் வேண்டும்.
வே.புருஷோத்தமன், ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’, விற்பனையாளர்.
நிறைய வாசகர்கள் அழைத்து, "ஒரு அரை மணி நேரம் மட்டுமாவது கடை திறக்கலாமா? நீங்களே எடுத்துக்கொடுத்தால்கூடப் பரவாயில்லை" என்கிறார்கள். கேரளாவில் அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. பாடப்புத்தக விற்பனைக்குத் தடையில்லை என்று மத்திய அரசு அறிவித்தாலும்கூட, தமிழக அரசு அதுபற்றிகூட இன்னமும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது. புத்தகக் கடைகள் திறக்கப்பட வேண்டும்.
பாலா கருப்பசாமி, ‘சக்தி வாடகை நூலகம்’, நூலகர்.
பாளையங்கோட்டையில் வாடகை நூலகம் நடத்திவருகிறேன். எங்கள் நூலகத்தில் 10,000 புத்தகங்கள் இருக்கின்றன. 650 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். திடீர் ஊரடங்கால் புத்தகம் எடுக்க முடியாமல் போனவர்கள், ஏப்ரல் 15-ம் தேதி எடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தார்கள். மறுபடியும் அது நீட்டிக்கப்பட்டதால், எப்படியாவது புத்தகம் தாங்களேன் என்றார்கள். நூலகம் திறக்கக் கூடாது என்பது அரசு உத்தரவு. என்ன செய்யலாம் என்று யோசித்து, ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். ஆசிரியர், தலைப்பு வாரியாகப் புத்தகங்களின் மொத்தப் பட்டியலை வாசகர்களுக்கு வாட்ஸ்அப் செய்துவிடுவேன். அவர்கள் வரிசை எண்ணை மட்டும் சொன்னால் போதும், அந்தப் புத்தகத்தை எடுத்து என் வீட்டு வாசலிலே வைத்துவிடுவேன். கடை கண்ணிக்கு வருகிறபோது புத்தகத்தை வாங்கிப்போய்விடுவார்கள். சுமார் 40 பேர் அப்படி வருகிறார்கள். டோர் டெலிவரிக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
வேலாயுதம், ‘விஜயா' பதிப்பகம், பதிப்பாளர் - விற்பனையாளர்.
உலக புத்தக நாளையொட்டி ஆண்டுதோறும் நடத்துகிற புத்தகக்காட்சியை இம்முறை நடத்த முடியவில்லை. ஜெயகாந்தன் பெயரில் ரூ.1 லட்சம், புதுமைப்பித்தன், மீரா விருதுகளுக்கு ரூ.25 ஆயிரம் விருதாக வழங்குவோம். அதையும் நடத்த முடியாமல் போய்விட்டது. குறைந்தபட்சமாகப் புத்தக விற்பனையைத் தொடரவாவது அரசு வழிசெய்ய வேண்டும். என் நீண்டகால அனுபவத்தில் சொல்கிறேன், இம்முறை அரசு நிவாரணம் வழங்காவிட்டால் பதிப்புத் துறையைக் காப்பாற்ற முடியாது. தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வி மற்றும் பொது நூலகத் துறை அமைச்சராக இருந்தபோது, பதிப்பாளர் நலவாரியம் ஒன்றை அரசு அமைத்தது. இப்போது அந்த வாரியமே செயல்படாமல் கிடக்கிறது. நூலகங்களுக்குப் புத்தகம் அனுப்பும்போது பதிப்பாளர் நலவாரியத்துக்காக 2.5% தொகையை ஒவ்வொரு பதிப்பகத்தாரிடமிருந்தும் அரசு பிடித்தம் செய்ததையாவது இப்போது பகிர்ந்தளிக்க வேண்டும்.
- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in