Published : 29 Apr 2020 08:36 am

Updated : 29 Apr 2020 08:36 am

 

Published : 29 Apr 2020 08:36 AM
Last Updated : 29 Apr 2020 08:36 AM

உணவுக்கும் மருந்துக்கும் தவிப்பு... ஊர் திரும்ப முடியாத நிலை... பரிதவிக்கும் பழங்குடிகள்!

tribal-people-stranded

கா.சு.வேலாயுதன்

ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து சுமார் 90 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது குட்டையூர். தமிழக - கர்நாடக எல்லையில் பர்கூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம். சுமார் 150 பழங்குடியினக் குடும்பங்கள் வசிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த கிராமம்தான் என்றாலும், கர்நாடக எல்லைப் பகுதியான கர்கேகண்டியைத் தாண்டி கர்நாடகப் பகுதிக்குள் 40 கிமீ பயணித்தால்தான் குட்டையூரை அடைய முடியும். இந்தக் கிராமத்து மக்கள் மருத்துவத்துக்கும் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் கர்நாடகத்தில் உள்ள ஜல்லிப்பாளையம், ஊகியம் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். இயல்பான நாட்களிலேயே பழங்குடி மக்களின் அன்றாடமானது சவால் நிறைந்ததுதான். இது ஊரடங்கு நேரம்.

குட்டையூர் கிராமத்தை ஒட்டியுள்ள செக்போஸ்ட் மூடப்பட்டுள்ளது. மாநில எல்லைகளைக் கடக்கக் கூடாது என்பதால், குட்டையூர் மக்களைக் கர்நாடகப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. விளைவாக மளிகை, காய்கறிகள் வாங்க முடியாமலும் மருத்துவ வசதிகள் இல்லாமலும் 30 நாட்களாகத் தவித்துவருகின்றனர். நாடு தழுவிய ஊரடங்கால் பழங்குடியின மக்கள் அனுபவித்துவரும் சிரமங்களுக்குக் குட்டையூர் ஓர் உதாரணம் மட்டும்தான். ஒவ்வொரு பகுதியிலும் பழங்குடியினர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் வெவ்வேறானவை.


எப்போது வருவார்களோ?

ஈரோடு, அந்தியூர், பர்கூர் மலைகளில் உள்ள தாமரைக்கரை, ஒசூர், சோளகனைப் பழங்குடிக் கிராமங்களிலிருந்து வால்பாறை, கவர்கல் காபி எஸ்டேட்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற சோளகர் பழங்குடிகள் ஊரடங்கு காரணமாக ஊர் திரும்ப முடியவில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 92 பேர். பர்கூர் கிராமங்களிலிருந்து நீலகிரி, கூடலூருக்கு சீமார் புல் சேகரிக்கச் சென்ற 68 பேர் மூன்று மாதங்களாகியும் ஊர் திரும்பவில்லை. தாமரைக்கரையைச் சேர்ந்த பிரியா, கணவர் பொம்மனுடன் சேர்ந்து வால்பாறை காபி எஸ்டேட் கூலிக்குச் சென்றவர். போன மாதம் பிரியா, ஊர் திரும்பிவிட்ட நிலையில், பொம்மன் 50 பேருடன் வால்பாறை எஸ்டேட்டிலேயே அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

“ஆடியில சோளம், ராகி விதைப்போம். தையில அறுவடை முடிஞ்சுடும். உடனே, வால்பாறைக்கு வேன் புடிச்சுக் கிளம்பிடுவோம். காபி எஸ்டேட்டில் ரூ.315 தினக்கூலி. சித்திரை நோம்பிக்கு ஊர் வந்துடுவோம். இப்படி ஊருக்கு ஊரு 40, 50 பேர் குழுவா புறப்படுவோம். ஒரு மாசம் முந்தி, நான் மட்டும் ஊர் வந்துட்டேன். அப்புறம் இந்த நோவு வந்ததுல மத்தவங்க எல்லாம் அங்கே மாட்டீட்டாங்க. பழங்குடி சங்கத்துல குணசேகரன் அய்யா மூலமா எம்பி, எம்எல்ஏ, கலெக்டரு எல்லார்கிட்டயும் பேசியாச்சு. ஒண்ணும் முடியல. பத்து வருஷத்துக்கு மேல எங்க சனங்க வால்பாறை போறாங்க. ஒரு தடவையும் இப்படி மாட்டலை. இப்ப அவங்களை விட்டா போதும். இனிமே, அந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்கக் கூடாதுன்னு தோணுது” என்றார் பிரியா.

உதவிட யாருமில்லை

வால்பாறை எஸ்டேட்டில் இருக்கும் பொம்மனை செல்பேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, “முதல்ல எஸ்டேட்காரங்க, அதிகாரிங்க, கட்சிக்காரங்க எல்லாம் வந்தாங்க. அரிசி, பருப்பு கொடுத்தாங்க. இப்ப எதுவுமே இல்லை. கடைகளும் இல்லை. எங்ககூட கள்ளக்குறிச்சிக்காரங்க, வேற ஊர்க்காரங்கனு நூத்தம்பது பேருக்கு மேல இருக்கோம்!” என்று உடைந்த குரலில் குமுறுகிறார்.

கோவைக்கு மேற்கே தமிழகப் பகுதியில் சுமார் 40 மலைக் கிராமங்கள் உள்ளன. இதன் பூர்வகுடிகள் இருளர். கூடவே, மலசர், முதுவர், குரும்பாஸும் உண்டு. இவர்கள் இருவேறு மாநிலம் என்றாலும் கொள்வினை, கொடுப்பினை, நல்லது கெட்டது என இரண்டறக் கலந்தே வாழ்ந்தவர்கள். இப்போது எல்லையைத் தாண்டி ஒரு கடுகு, சீரகம்கூட வாங்க முடிவதில்லை. செங்கல் சூளை, நூறு நாள் வேலைத் திட்டம், தோட்ட வேலை என்றிருந்தவர்கள் இப்போது வீட்டிலேயே முடங்கிவிட்டனர். “எங்க சனங்க பழைய மாதிரி மீண்டும் நூரைக்கிழங்கு நோண்டவும், சீங்கைக்கீரை பறிக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க!” என்கிறார் தூவைப்பதி பாலன். இவர், தமிழ்நாடு ஆதிவாசிகள் பெடரேஷனுடைய முன்னாள் மாநிலச் செயலாளர்.

அடகுக் கடையில் குடும்ப அட்டை

நீலகிரி கூடலூரில் இருளர்கள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் ஆகிய பழங்குடியினர் 300 கிராமங்களில் ஏறக்குறைய 14,000 பேர் உள்ளனர். புலிகள் காப்பகப் பகுதி என்பதால், வனத் துறையின் கட்டுப்பாடுகள் அதிகம். எனவே, வனப் பொருட்கள் சேகரிப்பைக் கைவிட்டுக் கட்டிட வேலைகளுக்கும் தோட்ட வேலைகளுக்கும்தான் செல்கிறார்கள். அதிகபட்சம் ரூ.250 வரையிலும் கூலி கிடைக்கும். இவர்களில் சிலர் தாங்கள் வாங்கிய ரூ.300-400 கடன்களுக்குக் குடும்ப அட்டையையே அடமானமாக வைத்துள்ளனர். ஊரடங்கால் தற்போது வேலையும் இல்லை, அரசு வழங்கும் அரிசி, பருப்பை வாங்குவதற்குக் குடும்ப அட்டையும் இல்லை.

“ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 2 கிலோ அரிசி வேணும், குடும்ப அட்டையில் 15 கிலோ கிடைச்சாலும் அது ஒரு வாரத்துக்குக்கூடப் பத்தாது” என்கிறார் கூடலூர் விவசாயிகள், பழங்குடிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.செல்வராஜ். “காட்டை நம்பி வாழ்ந்தபோது அங்கேயே மீன்கள், பழங்கள், கீரை, கிழங்குகள் கிடைச்சுது. இப்ப எங்களை விரட்டீட்டு ஃபாரஸ்ட்டுக்காரங்கதான் இருக்காங்க. முதுமலை புலிகள் காப்பகத்தினுள் மட்டும் 23 செட்டில்மெண்ட்ல 200 குடும்பங்கள் இருக்கு. இப்ப அங்கே மக்களுக்கு உணவே பிரச்சினை. புலிகள் காப்பகத் திட்டத்துலயே கோடிக்கணக்குல பணமும் இருக்கு. இந்த நெருக்கடியான நேரத்துலயாவது அதுல கொஞ்சம் எடுத்து இந்த மக்களுக்கு ஏதாவது பண்ணலாம்ல?”

சாதாரண நாட்களிலேயே காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் பழங்குடிகள் நம் பார்வையிலிருந்து வெகு தூரத்தில் இருப்பார்கள். இந்த நாட்களில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in


பரிதவிக்கும் பழங்குடிகள்ஊர் திரும்ப முடியாத நிலைஉணவுக்கும் மருந்துக்கும் தவிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x