Published : 27 Apr 2020 07:26 am

Updated : 27 Apr 2020 07:26 am

 

Published : 27 Apr 2020 07:26 AM
Last Updated : 27 Apr 2020 07:26 AM

விவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன?

what-goverment-has-to-do-for-formers

எஸ்.மலர்வண்ணன், பி.செல்வமுகிலன்

ஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விளைபொருட்களைத் தடையின்றி விற்கவும், விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவும் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை.

பூக்களும் காய்கறிகளும்


தமிழக அரசு வேளாண் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டுசெல்லவும், விற்கவும், வேளாண் பணிகளைச் செய்யவும், விவசாயத் தொழிலாளர்கள் வேலைகளுக்குச் செல்லவும் ஊரடங்கிலிருந்து விலக்களித்திருக்கிறது. என்றாலும் திருமணம், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நிறுத்தப்பட்டிருப்பதாலும், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வராததாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாலும் 25,000 முதல் 30,000 ஹெக்டேர் வரை பயிரிடப்பட்டுள்ள பூக்கள் பறிக்கப்படவில்லை. பூக்கள் செடியிலேயே காய்ந்தும், கீழே உதிர்ந்தும் வீணாகின்றன.

இதே நிலை காய்கறி மற்றும் பழங்களுக்கும் தொடர்கிறது. அரசு தற்போது பெரிய காய்கறிச் சந்தைகளைத் திறக்கவும், சிறு வியாபாரிகள் கொள்முதல் செய்யவும், புதிதாகச் சந்தைகள் அமைக்கவும், நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களுக்கும் வழிவகை செய்துள்ளது. எனினும், போதுமான வாகன வசதிகள் இல்லாததால், அரசு அமைத்துள்ள காய்கறிச் சந்தைகளுக்கு விவசாயிகளால் உரிய நேரத்தில் காய்கறிகளைக் கொண்டுசெல்ல முடிவதில்லை. வெளியூர் வியாபாரிகள் அதிகம் வாங்க வராததால் காய்கறி/ பழச் சந்தைகளில் ஏலம் நடைபெறவில்லை. எளிதில் அழுகக்கூடிய குறிப்பிட்ட சில காய்கறிகள்/ பழங்களைச் சேமித்து வைக்கவும் முடியவில்லை. விளைவு, சந்தை விலையைக் காட்டிலும் கொள்முதல் விலை பாதியாகிவிட்டது. சந்தையில் ரூ.40-க்கு விற்கும் கத்தரியை வியாபாரிகள் ரூ.20-க்கே விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றனர்.

தானியங்களும் பயறு வகைகளும்

நெல், தானியங்கள், பயறு வகைகளுக்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் குளிர்சாதன சேமிப்புக் கூடங்களையும் அனைத்து மாவட்டங்களிலும் இயங்குவதற்கு அரசு வழிவகைகளைச் செய்துள்ளது. ஆனாலும், முழுவீச்சில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் இயங்கவில்லை. பெரிய விவசாயிகள் எப்படியோ சமாளித்துக்கொள்கின்றனர். சிறு-குறு விவசாயிகள் சேமிப்புக் கிடங்கிலும் வைக்க முடியாமல், தங்களது வீட்டிலும் வைத்துக்கொள்ள வசதியில்லாமல் தவிக்கின்றனர்.

அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் ஆகியவை இயங்காததால் அதற்கான தேவைகளும் குறைவாகவே உள்ளன. இதனால், இடைத்தரகர்கள் சொல்லும் விலைக்கே விவசாயிகள் விற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். உதாரணமாக, 100 கிலோ நிலக்கடலை மூட்டையைச் சந்தை விலையைவிட ரூ.300 குறைத்து வாங்குகின்றனர். நெல் வியாபாரத்தில் 75 கிலோ மூட்டை ஒவ்வொன்றுக்கும் 4 கிலோ சேர்த்து வாங்குகின்றனர். மக்காச்சோளத்தை 15% முதல் 20% வரை குறைவான விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படாமல் விளைநிலத்திலேயே வீணாகி அழிந்துகொண்டிருக்கிறது.

எல்லா நிலைகளிலும் இடர்ப்பாடுகள்

சில இடங்களில் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே வேளாண் இடுபொருட்கள் கடைகள் திறந்திருக்கின்றன. அப்படியே திறந்திருந்தாலும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போதுமானதாக இல்லை. வாங்கிய இடுபொருட்களை விவசாயிகள் கொண்டுசெல்லவும் போக்குவரத்து வசதிகள் இல்லை. காய்கறிகள் கொண்டுசெல்லும் வண்டியில் உரங்கள் எடுத்துச்செல்வதற்கு அனுமதி வாங்குவதிலும் சிரமங்கள் உள்ளன.

கால்நடை வளர்ப்பைப் பொறுத்தமட்டில் செலவு அதிகரித்து, வருமானம் குறைந்திருக்கிறது. பசு மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை அடர்தீவனம் கொடுக்கின்றனர். 50 கிலோ அடங்கிய தீவன மூட்டை தற்போது ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது. எனவே, பால் உற்பத்தியின் செலவு, ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. ஆனால், பால் கொள்முதல் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.4 முதல் ரூ.6 வரை குறைத்து வாங்குகின்றன.

விவசாயிகள் அடிக்கடி தோட்டங்களுக்குச் செல்ல முடியாததால் பயிரை முறையாகப் பராமரிக்க முடியவில்லை. விவசாயிகள் எல்லோருமே இணைய வசதி கொண்ட செல்பேசிகளைப் பயன்படுத்துவதில்லை. எனவே, வேளாண் ஆலோசகர்கள் செல்பேசி மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கூறினாலும், பயிர்களை நேரில் பார்த்துச் சொல்வதைப் போல் இருக்குமா என விவசாயிகளிடம் சந்தேகம் நிலவுகிறது. இப்படி, விவசாயிகள் பலதரப்பட்ட பிரச்சினைகளையும் சந்தித்துவருகின்றனர்.

ஆய்வாளர்களின் பரிந்துரைகள்

விவசாயிகள் தங்களது விளைபொருட்களைத் தடையின்றி சந்தைப்படுத்தினால் மட்டுமே அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாயிகளிடமிருந்து பெற்ற கள நிலவரங்களை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

வேளாண் விளைபொருட்களைப் பகுதிவாரியாக அரசே நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/ சங்கங்கள் மூலமாகக் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும். காய்கறிகள் தேவையான மாநிலங்களிடம் (குறிப்பாக, கேரளாவிடம்) பேசி, அதைக் கொண்டுசெல்லவும் வழிசெய்யலாம். மாடுகளுக்கான அடர்தீவனம் தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். தீவனப் பயிர்களான சோளம், கம்பு ஆகியவற்றை வளர்க்க உதவ வேண்டும். விவசாயிகள் தாங்களே அடர்தீவனம் தயாரிக்கப் பயிற்சியளிக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினால், அவர்கள் விவசாய நிலங்களுக்குச் சென்றுவர எளிதாக இருக்கும். பயிர் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகள் விவசாயிகள் பெறும் வகையில் பயிர் மருத்துவ முகாம்களை நடத்தலாம். நடமாடும் விவசாய ஆலோசனை வாகனங்கள் மூலமாகவும் உதவலாம். வேளாண் சந்தையின் நிலைமை சீரடையும் வரையில், கிராமங்களில் உள்ள சமுதாயக் கூடங்களைத் தானிய சேமிப்புக் கூடங்களாகவும் பயன்படுத்தலாம்.

- எஸ்.மலர்வண்ணன், பி.செல்வமுகிலன்

மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.


விவசாயிகள்விவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியதுபூக்களும் காய்கறிகளும்தானியங்களும் பயறு வகைகளும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x