Published : 21 Apr 2020 07:53 AM
Last Updated : 21 Apr 2020 07:53 AM

சமூகப் பரவலைத் தடுக்கும் சமூகக் காய்ச்சல் கிளினிக்!- மருத்துவர் கே.ஏ.ரவிக்குமார் பேட்டி

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் சமூகம் படைப்பூக்கத்தோடு ஒவ்வொரு நாளும் புதிது புதிதான யோசனைகளுடன் களமிறங்குகிறது. அப்படியான ஒன்றுதான், கோவை வடவள்ளியில் ‘இந்திய மருத்துவர் சங்கம் - தமிழ்நாடு கிளை’ உருவாக்கிய ‘சமூகக் காய்ச்சல் கிளினிக்’. தனக்கு கரோனா தொற்று இருப்பதே தெரியாமல் வெவ்வேறு கிளினிக்குகளுக்குச் சென்று தொற்றைப் பரப்பாமல் இருக்க இதுபோன்ற கிளினிக்குகள் அவசியம். எனவே, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களிலெல்லாம் கிளினிக்குகளை அமைக்கத் துரிதமாகச் செயலாற்றிவருகிறது ஐஎம்ஏ. அத்துடன் தமிழகத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார மையங்கள், அரசு துணை, கிளை மருத்துவ மையங்கள், மாநகராட்சி மருத்துவ மையங்களில் சிலவற்றை இதுபோன்ற ‘சமூகக் காய்ச்சல் கிளினிக்’குகளாக மாற்றிட அரசுக்கு ஆலோசனையும் தந்துள்ளது. ஐஎம்ஏவின் தமிழ்நாடு கிளைச் செயலாளரும், வடவள்ளியில் ‘சமூகக் காய்ச்சல் கிளினிக்’கை முனைப்புடன் அமைத்துள்ளவருமான மருத்துவர் கே.ஏ.ரவிக்குமாரிடம் பேசினேன்.

இந்த எண்ணம் எங்கிருந்து தொடங்கியது?

‘கம்யூனிட்டி ஃபீவர் கிளினிக்’ எனும் வழிமுறையை 15 நாட்களுக்கு முன் அரசுக்குக் கொடுத்தோம். ஜப்பான், சீனா, இத்தாலியில் நடந்த தவறுகள் இங்கே நடக்கக் கூடாது என்பதற்காக உருவானதுதான் இது. இத்தாலி மருத்துவர் ஒருவர் கெஞ்சிய காணொலியைப் பார்த்திருப்பீர்கள். “உலகத்துக்கு நாங்கள் ஒரு அறிவுரை தருகிறோம். நாங்கள் எல்லா நோயாளிகளையும், எல்லா மருத்துவமனையிலும் சேர்த்துக்கொண்டோம். அதுதான் இத்தனை விபரீதத்துக்குக் காரணம். அதை மட்டும் நீங்கள் செய்துவிடாதீர்கள்” என்றார். அந்த அடிப்படையில்தான் தனியார் மருத்துவர்களைக் கொண்டு ஆரம்பித்தோம்.

தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறது?

நோய்ப் பரவல் உள்ள சிவப்பு வட்டத்தில் இருக்கும் 12 மாவட்டங்களிலும் முதற்கட்டமாக ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறோம். சென்னை தாம்பரத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்தது, திருநெல்வேலியில் ஆரம்பிக்கிறார்கள். கோயமுத்தூரில் சுந்தராபுரம், போத்தனூர், அன்னூர், ஆர்.எஸ்.புரம் என்று இடம் பார்த்தாயிற்று. எங்களுடைய ஐஎம்ஏ கட்டிடத்திலேயே ஒரு கிளினிக் வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எங்காவது இதை முயன்றிருக்கிறார்களா?

இல்லை. தமிழ்நாடுதான் இதற்கு முன்மாதிரி.

இந்த கிளினிக்குகள் கரோனா சமூகப் பரவலை எப்படிக் கட்டுக்குள் வைக்கும்?

கரோனா தொற்று உறுதிசெய்யப்படுவது, ஐசியு வார்டு, தனிமைப்படுத்துவது இவற்றுக்கெல்லாம் முந்தைய ஆரம்ப நிலை மிகவும் முக்கியமானது. ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது என்றால் அங்கேயுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், அந்த நோயாளியைப் பார்த்தவர்கள் என எல்லோரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. ஒரு பகுதியில் தலா பத்து பேர் பத்து மருத்துவமனைக்குப் போவதாக வைத்துக்கொள்வோம். சமூகப் பரவல் வந்துவிட்டால் என்ன ஆகும்? அங்கே மருத்துவமனைக்கு ஒருவர் என நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டால்கூட மருத்துவ சிகிச்சை தர ஆளே இல்லாத நிலை வந்துவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் இந்த முயற்சி.

இந்த மையம் எப்படிச் செயல்படுகிறது?

காலை 10-1 மணி வரை, மாலையில் 2.30-6 மணி வரை என இரண்டு ஷிப்டுகளில் வேலைபார்க்கிறோம். ஒரு ஷிப்டுக்கு ஒரு மருத்துவர், நான்கு செவிலியர்கள். இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான முகக்கவசம், முகஷீல்டு, கையுறைகளைத் தருகிறோம். கூடவே, அறுவைச் சிகிச்சைகளின்போது பயன்படுத்தக்கூடிய உடைகளையும் கொடுக்கிறோம்.

கிளினிக் ஆரம்பித்த இந்த மூன்று நாள் அனுபவம் எப்படி இருந்தது?

தினம் 10-12 பேர் வருகிறார்கள். கரோனாவுக்கு இங்கே சோதிக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியவில்லை. தெரிந்தால் நிறைய பேர் வருவார்கள். இப்போது வந்தவர்களில் ஒரே ஒருவரிடம் மட்டும் சந்தேகம் வந்து அரசு கரோனா மையத்துக்கு அனுப்பிவைத்தோம். அதுவும் நெகட்டிவ் என்று வந்துவிட்டது.

- கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x