Last Updated : 20 Apr, 2020 08:02 AM

 

Published : 20 Apr 2020 08:02 AM
Last Updated : 20 Apr 2020 08:02 AM

இந்நேரத்தில் சமூக அக்கறை இல்லை என்றால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை!- களப்பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை பேட்டி

திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் தற்காலிகக் காய்கறிச் சந்தையில் தன்னார்வலராய்ப் பணியில் இருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை புஷ்பலதா. முகக்கவசம் இல்லாமல் வருகிறவர்களிடம் பேசுகிறார்; அவர்களுக்கு முகக்கவசம் அளிக்கிறார். சந்தைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால் அதை ஒழுங்குபடுத்துகிறார். எடமலைப்பட்டிப் புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் புஷ்பலதா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 70 சிப்பம் அரிசியைக் கொடையாளர்களிடமிருந்து பெற்று ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட ஆசிரியர்களில் தன்னார்வலர்களாகப் பணிபுரிய விரும்புபவர்களின் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலகம் கேட்டபோது சொற்பமானவர்களே முன்வந்தார்கள். அவர்களிலும் பெண்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமே. அந்தச் சொற்பத்தில் ஒருவரான அன்பாசிரியர் புஷ்பலதாவுடன் பேசினேன்.

அரிசி மட்டும்தான் வழங்குகிறீர்களா?

அரிசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் காரணம் இருக்கிறது. அரிசியும் உப்பும் இருந்தால் மட்டும் போதும்; கஞ்சி காய்த்துக் குடித்துவிட்டு உயிர் வாழ்ந்திடலாம் என்று நண்பர் ரவிசுந்தரம் சொல்வார். அதனால், அதைத்தான் பிரதானமாகக் கொடுக்கிறோம். ஒரு குடும்பத்துக்குத் தரமான ஐந்து கிலோ அரிசி கொடுக்கிறோம். மேலும், இந்த நேரத்துக்கு அவசியமான முகக்கவசங்களும் கிருமிநாசினிகளும்கூட இதுவரை 300 பேருக்கு வழங்கியிருக்கிறோம். சமூக வலைதளங்களில் உதவி கேட்டுவரும் தகவல்களை என் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்வேன். அதைப் பார்த்துவிட்டு துபாயில் இருக்கும் பொறியாளர் ரவிசுந்தரம் உடனடியாக உதவ முன்வந்தார். ஒவ்வொரு நாளும் ஐந்து சிப்பம் (125 கிலோ) அரிசிக்கு அவர் பணம் அனுப்பிவிடுகிறார். அவரைப் போல இங்குள்ளவர்களும் தக்க நேரத்தில் உதவிகளைச் செய்கிறார்கள். அவர்களால்தான் இது சாத்தியமாயிற்று.

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க நீங்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன்?

ஆமாம். ஐம்பது ஆதரவற்ற முதியவர்களுக்கு என் மூலமாக உணவு வழங்கப்படுவது எனக்கு மிகுந்த மனத்திருப்தியை அளிக்கிறது. இந்திரா காந்தி கல்லூரியும், இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பும் இணைந்து திருச்சியில் தினமும் ஆறாயிரம் பேருக்கு உணவளிக்கிறார்கள். அதில் நான் சுட்டிக்காட்டும் ஐம்பது பேருக்கும் உணவு வழங்குகிறார்கள். தினமும் அதற்கான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டால், அவர்களே உணவைக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள்.

யாருக்குத் தேவை என்பதை எப்படி முடிவுசெய்கிறீர்கள்?

சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்களுக்குத்தான் கஷ்டம். நான் சமூகத்தோடு நெருங்கிப் பழகுவதால் தேவையுள்ளவர்களைக் கண்டறிவதில் எனக்கு சிரமம் இல்லை. ஷேஷசாயி நகரில் குடிசைவாழ் மக்கள், மன்னார்புரத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், முதலியார் சத்திரத்தில் கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்குத்தான் முன்னுரிமை கொடுத்து வழங்குகிறோம்.

இந்தப் பணியில் உங்களை இணைத்துக்கொண்டதற்கு என்ன காரணம்?

எதிர்கால சமூகத்தை ஆரோக்கியமானதாக உருவாக்குவதுதான் ஆசிரியரின் கடமை. கரோனாவுக்கு எதிரான போரும் சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்தானே? இந்த நேரத்தில் சமூகப் பணியாற்றவில்லை என்றால் அப்புறம் நமது வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தமிருக்கும்? இந்தக் கேள்விதான் என்னை உடனடியாகக் களத்தில் இறக்கிவிட்டது. மக்களுக்கு சேவையாற்றுவதைவிட மனதுக்கு மகிழ்ச்சியளிப்பது வேறெதுவுமில்லை. மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களைப் பாதுகாக்க முடிகிறது. துயரப்படுகிறவர்களுக்கு அரிசி வழங்கி அவர்களின் பசியைப் போக்க முடிகிறது. இது எவ்வளவு திருப்தியை தருகிற அற்புதமான பணி!

ஆபத்தான களப்பணி குறித்து வீட்டில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா?

அதெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. மிகவும் சந்தோசப்பட்டார்கள். உடல்தான் அதிகம் ஒத்துழைக்க மறுக்கிறது. ஒரு விபத்து காரணமாக நடப்பதும், அதிக நேரம் நிற்பதும் சிரமமாக இருக்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. நாளொன்றுக்குக் குறைந்தது ஆயிரம் பேரைச் சந்திக்கிறேன். மக்களும் கடைக்காரர்களும் காவலர்களும் நம்மிடம் காட்டும் அன்பு, பள்ளியில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையானது. பள்ளியில் நான் கற்றுக்கொடுப்பேன். இங்கே, கற்றுக்கொடுப்பதோடு நிறைய கற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.- கரு.முத்து, தொடர்புக்கு: muthu.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x