Published : 17 Apr 2020 21:02 pm

Updated : 17 Apr 2020 22:09 pm

 

Published : 17 Apr 2020 09:02 PM
Last Updated : 17 Apr 2020 10:09 PM

மக்கள் மன்றாடுகிறார்கள்; பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு கல்வியாளர் கோரிக்கை

people-beg-implement-no-liquor-educator-s-request-for-cm-palanisamy

உயிர் பாதுகாப்புக்காக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களில் மனங்களில் சமூக சீர்திருத்தத்துக்கான மாற்றங்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. பல வீடுகளில் மதுப்பழக்கத்தால் அரங்கேறி வந்த குடும்ப வன்முறைகள் செயலிழந்து புன்னைக பூத்துக் குலுங்கத் தொடங்கியிருக்கிறது.

அதிர்ச்சி தந்த புள்ளிவிவரம்


மத்திய அரசு முழு அளவில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழக அளவில் மாற்று சிந்தனையாக மதுவிலக்கு கோரிக்கையை மக்கள் முதலமைச்சரிடம் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் வாழுகின்ற மக்களில் விகிதாச்சார அடிப்படையில் 6 பேரில் ஒருவருக்கு மது அருந்தும் கொடிய பழக்கம் இருந்து வருகிறது. அசோசெம் என்ற வர்த்தகக் கூட்டமையின் சமூக வளர்ச்சிப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களிடம் மது அருந்தும் வழக்கம் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வேகமான அதிகரிப்பு

மது அருந்தும் பழக்கம் தமிழக வளர் இளம் பிரிவினரிடம் வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் குடிப்பழக்கம் இருப்பவர்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியைத் தொட இருக்கிறது. அதில் பள்ளி மாணவர்களும் மதுவின் சுவையை அறியத் தொடங்கிவிட்டனர் என்பது அதிர்ச்சியான தகவல். பணியில் இருக்கும் இளம்பெண்களிடமும் மது பயன்படுத்தும் பழக்கம் விரிவடைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் மதுரையில் பெண்களுக்கான தனி டாஸ்மாக் கடை தொடங்கியது நம் சமூகத்தைக் கண்கலங்க வைத்தது. உலகின் தலைசிறந்த மருத்துவ இதழான லான்செட் கொடுத்துள்ள புள்ளிவிவரத்தில் கடந்த 7 ஆண்டுகளில் மது அருந்தும் பழக்கம் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்ந்தால் 2030-ல் தமிழக மக்களில் 50 சதவிதம் பேர் குடிப்பழக்கத்தைக் கையிலெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்என்ற தகவல் வெளியாகி உள்ளது .

பரந்து விரிந்த டாஸ்மாக் கடைகள்

தமிழகம் முழுவதும் 6825 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் மாலை நேரங்களில் கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி கட்டுக்கடங்காமல் இடிபாடுகளுடன் சமூக விலகலுக்கு எதிரான நிலையில் எப்பொழுதும் நிற்கிறார்கள். அதன் அருகில் உள்ள 4,435 மது அருந்தும் கூடங்களிலும் கூக்குரல்கள், கும்மாளங்கள் நடுநிசிவரை நீடிக்கும். விளிம்புநிலை மற்றும் விவசாய மக்களின் மொத்த வருவாயும் இங்கே கொட்டப்படுவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் கிடைக்கிறது. இந்த பணத்தை தமிழக மக்களின் பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு அரசு பயன்படுத்தி வருகிறது.

காவல்துறைக்கு தலைவலி

தமிழக அரசு காவல்துறை நம்மாநில சட்டம் ஒழுங்கை பராமரிக்க தன்னெழுச்சியான சட்டப்பணிகளை செய்திட நம் மக்களிடையே உள்ள மதுப்பழக்கம் சிரமங்களைக் கொடுக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் 28 வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் இருந்த குடிப்பழக்கம் இன்று 13 வயது நிரம்பாதவர்களிடமும் சமூகப் பரவலாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான குற்ற நிகழ்வுகள் குடிபோதையில் அரங்கேறுவதால் சட்டம் தன் கடமையைச் செய்வதில் காவல்துறைக்கு சுணக்கம் ஏற்படுகிறது.

குடியே விபத்துக்குக் காரணம்

இந்திய அளவில் சாலை விபத்து அதிகம் நடப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நாளைக்கு 90 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் விபத்துக்கான அவசர மருத்துவமனைகள் அதிக அளவில் திறக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மரணத்துக்கும், உடல் ஊனத்துக்கும் மதுவே காரணம், அதனால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் டாஸ்மாக் கடையை மூடினால் கள்ளச்சாராயம் ஆறாக தமிழத்தில் ஓடும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சுகாதார பாதிப்புகள்

மதுப்பழக்கம் மனித மூளையில் வேதியல் மாற்றங்களை நிகழ்த்தி குடிப்பழக்கத்தை தொடரச் செய்கிறது. மனித ரத்தத்தில் நச்சுத்தன்மையை விரைந்து கலக்கச்செய்கிறது . உடல் உறுப்புகளான கல்லீரல், இதயம், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மனநல நடத்தைக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மதுவினால் உடலில் 11 வகையான உயிர்க்கொல்லி நோய்கள் தென்படத் தொடங்குகின்றன. உடம்பில் உள்ள ரத்தத்தில் 20 கிராம் மது கலந்தால் கண்பார்வை குறைகிறது. அதுவே 30 மி. கிராமாக அதிகரித்தால் உடல் தசை செயல்பாட்டை இழக்கிறது.

உளவியல் பாதிப்புகள்

குடிப்பழக்த்தின் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் , உயிரியல் , சமூகபண்பாட்டு வியல் பிரச்சினைகள் தலையெடுக்கத் தொடங்கும். சுயதீனமான மூளை மெல்ல மெல்லச் செயல் இழக்கும். சிந்திக்கும் திறன் செயலிழந்து பணிகளில் பாதிப்பு ஏற்படும் .

இயற்கை தந்த வரம்

தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மதுப்பழக்கமின்றி மக்கள் கடந்த 40 நாட்கள் நிறைவடையும். இதுவரை 22 நாட்கள் கடந்த நிலையில் குடும்பப் புரிதலில் ஒருவித புதிய உத்வேகம் மக்கள் மனதில் பிறந்திருக்கிறது. தமிழ் மரபுப்படி ஒரு விஷயத்தை தொடர்ந்து 21 நாட்கள் கடைப்பிடித்தால் மனம் அதை நோக்கிப் பயணிக்கும். அதுவே தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலமாகத் தொடர்ந்தால் மனம் அதில் நிலைத்துவிடும். மது அருந்தி 48 நாட்கள் மறந்தவர்களுக்கும் இந்த மரபு பொருந்தும் . மது அருந்திப் பழகிய தமிழக மக்களுக்கு மறந்து வாழும் இயற்கை வரத்தை ஊரடங்கு வழங்கியுள்ளது. மதுவில் இருந்து நிரந்தர விடுதலையை தமிழக முதலமைச்சர் நம் மக்களுக்குத் தந்து மாநில சமூக, பொருளாதார மாற்றத்தை மலரச் செய்ய வேண்டும். மதுவை மறந்ததால் குடும்பங்கள் சேமிக்கும் பணம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி கல்வியைக் கட்டமைத்து தேசிய வளர்ச்சிக் குறியீட்டை மேம்படுத்தும்.

முதல்வர் அருள்கூர்ந்து அறிவிக்கவேண்டும்

தமிழகத்தில் சுமார் 90 சதவீத மக்கள் மதுப்பழக்கத்தை முற்றிலுமாக மறந்தநிலையில் தமிழக அரசு அருள்கூர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுப்பழக்கத்தை மக்கள் நிறுத்தினால் விரக்தியில்உயிரிழப்பு ஏற்படும் என தவறான புரிதலைக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட கடினமான பாடத்தை டாஸ்மாக் கடையடைப்பு நமக்கு கற்பிக்கவில்லை. தமிழக விளிம்புநிலை மற்றும் விவசாய மக்களின் வாழ்வாதரதத்தைக் காக்க டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக முதல்வர் மிகத் துணிச்சலாக அறிவித்துள்ளார். அதேபோல் மக்களின் உயிர் காக்க நல்ல சூழல் கனிந்துள்ளதால் தமிழக அமைச்சரவையைக் கூட்டி பூரண மதுவிலக்கு என்ற வரலாற்று முடிவை அறிவிக்க வேண்டும். இந்தக் கடினமான முடிவு நிலைபெற்றால் தேசத்திலேயே சிறந்த முதல்வராக இந்தியாவே உங்களைப் பாராட்டும். தமிழக அரசியல் களம் காலமெல்லாம் உங்களைச் சுற்றியே சுழலும்.

மது அடிமை மறுவாழ்வு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்போது 10 சதவீத மதுவின் பிடியில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வு ஆலோசனைகள் வழங்க வேண்டிவரும். டாக்டர்கள் பரிந்துரையின்படி மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுபவர்கள் சிலருக்கு மூளையின் செயல்பாட்டில் மாற்றமிருக்கும். அவர்களுக்குமூளையின் செயல்பாட்டைச் சமன்படுத்த வைட்டமின்பி1 தயமின் மாத்திரைகள் எடுக்கப் பரிந்துரைக்கலாம் . மறுவாழ்வு மையங்களில் ஆற்றுப்படுத்துதல், விழிப்புணர்வுபயிலரங்கம் , குழு முறை சிகிச்சை, குடும்ப வழி மருத்துவத்தை வட்டார அளவில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கலாம். அதில் முதுநிலை சமூகப்பணி பயின்ற நிபுணர்களை பணியமர்த்தி மீட்டெடுக்க ஆலோசனை வழங்கலாம்.

மாற்று நிதி ஏற்பாடு

தமிழக முதல்வர் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுவிலக்கு முடிவைஅறிவித்தால், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பட்சத்தில் அதன் மூலம் வரும் ஆண்டு வருவாய் 23 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அவசர கூட்டுக் குழுவை அமைக்கவேண்டும். பூரண மதுவிலக்கிலிருக்கும் குஜராத் மாநிலத்தை மாதிரியாக எடுக்க வேண்டும். அங்கு வகுக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை ஆராய வேண்டும். அவர்கள் நிதி திரட்டக் கையாளும் வழிமுறை ஆதாரங்களை கணக்கில்கொள்ள வேண்டும். அதன் மூலம் டாஸ்மாக் வருவாய் இழப்பை ஈடுகட்ட நம் அரசுச் செயலர்கள் சிறப்பான திட்டத்தை வடிவமைப்பார்கள். அதில் வெற்றி பெறவும் செய்வார்கள் .

தமிழகம் தலை நிமிரும்...

தமிழக முதல்வர் , தமிழக மக்களின் நெஞ்சங்களின் என்றும்நிலைத்திருப்பார்....

மக்கள் மன்றாடுகிறார்கள் ...முதல்வரே விரைந்து முடிவெடுங்கள் ....!!

ஜா.இராஜசேகரன், தாளாளர்,

எஸ்எம்ஏ கல்வி நிறுவனங்கள், தென்காசி


பூரண மதுவிலக்குமக்கள் மன்றாடுகிறார்கள்முதல்வர் பழனிசாமிகல்வியாளர் கோரிக்கைமதுவிலக்குமதுவிலிருந்து விடுதலைதமிழகம்டாஸ்மாக் கடைகள்குடியே விபத்துக்குக் காரணம்மாற்று நிதிஉளவியல் பாதிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x